Published:Updated:

மத்திய அரசும் ‘வெள்ளை அறிக்கை’தான் வெளியிட வேண்டும்!

நயினார் நாகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
நயினார் நாகேந்திரன்

- சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

மத்திய அரசும் ‘வெள்ளை அறிக்கை’தான் வெளியிட வேண்டும்!

- சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

Published:Updated:
நயினார் நாகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
நயினார் நாகேந்திரன்

தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், ‘ரெய்டு, வெள்ளை அறிக்கை, பட்ஜெட், வழக்கு, வெளிநடப்பு’ எனத் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துவருகிறது. இதற்கிடையே தமிழக பா.ஜ.க-வும் ‘மக்கள் ஆசி யாத்திரை’ எனப் புது ரூட்டில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் நேரத்தில், மாநில பா.ஜ.க-வின் துணைத் தலைவரும் சட்டசபை பா.ஜ.க தலைவருமான நயினார் நாகேந்திரனைச் சந்தித்துப் பேசினோம்...

“தமிழக அரசின் பட்ஜெட்டை, மாநில பா.ஜ.க கடுமையாக விமர்சித்துவருகிறது. பட்ஜெட்டில் பாராட்டும்படியான அம்சம் ஒன்றுகூட இல்லையா?’’

“கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும்விதமாக, 3 கோடி ரூபாயில் ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்க அம்சம்தான். பெட்ரோலுக்கு விலையைக் குறைத்தவர்கள், டீசலுக்கும் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். புதிதாக 10 கல்லூரிகள் அமைக்கப்போவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அது போதாது. இன்று, தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் செலுத்திப் படிக்கின்ற நிலையில் மக்களிடம் வருமானம் இல்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் தெளிவான திட்டம் எதுவும் சொல்லப்படவில்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டித்தான் பா.ஜ.க விமர்சித்துள்ளது!’’

“ ‘ஏன் டீசல் விலையைக் குறைக்கவில்லை’ என்று தி.மு.க அரசைக் கேள்வி கேட்கிற தமிழக பா.ஜ.க, ‘பெட்ரோல் விலை குறைப்பு’க்காக மத்திய அரசை நோக்கி எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லையே ஏன்?’’

“ ‘பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம்’ என்ற முடிவைக் கொண்டுவந்தது கடந்தகால காங்கிரஸ் அரசுதான். மேலும், பெட்ரோல் விலையை உயர்த்தாமல் நிலைமையைச் சமாளிப்பதற்காக அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய ‘எண்ணெய் கடன் பத்திர’ங்களுக்கான வட்டியைக் கட்டுவதே இன்றைய மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல் மீதான உற்பத்தி வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. மாறாக, மத்திய அரசும் பெட்ரோல் விலையைக் குறைத்துத்தான் ஆக வேண்டுமென்றால், தமிழக அரசுபோல மத்திய அரசும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியதுதான் வரும்!”

“5.75 லட்சம் கோடி கடன் சுமை என ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட்டுவிட்ட தமிழக அரசால், பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைக்க முடிகிறது. ஆனால், மத்திய அரசால் முடியவில்லை என்பதை எப்படி நம்புவது?’’

“பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க அதிகரிக்க மாநில அரசுக்கான வரி வருவாய்ப் பங்கும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். எரிபொருள் விற்பனையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால் மட்டுமே மத்திய அரசால் விலையைக் குறைக்க முடியும். இதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், மாநில அரசுகள் ஒத்துழைப்பு தர மாட்டார்கள்!’’

“இதுவரையிலான ஜி.எஸ்.டி-யில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய தொகையையே முழுவதுமாகத் தராமல், மத்திய அரசு நிலுவையில் வைத்திருக்கும்போது, மாநில அரசுகள் எப்படி ஒத்துழைப்பு தரும்?’’

“அது ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை அல்ல... இழப்பீட்டுத் தொகை. ஏனெனில், ஜி.எஸ்.டி-யில் கொடுத்த பணத்தை யாரும் திரும்பப் பெற முடியாது. அதேசமயம் ஜி.எஸ்.டி வரி வசூலிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டுத் தொகையை உரிய முறையில் கணக்கிட்டுத்தான் மத்திய அரசு வழங்க முடியும். மாநிலங்கள் சொல்கிற கணக்கீட்டு முறையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.’’

“ ‘அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜ.க-வுக்குச் சென்றாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் விட மாட்டோம்’ என அமைச்சர் நாசர் சூளுரைக்கிறாரே?’’

“தவறு செய்திருந்தால், யார்மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கட்டும். அ.தி.மு.க-விலிருந்து ராஜேந்திர பாலாஜியும் உடுமலை ராதாகிருஷ்ணனும் பா.ஜ.க-வுக்குக் கட்சி மாறவிருப்பதாகப் பத்திரிகைகள்தான் சொல்லிவருகின்றன. ராஜேந்திர பாலாஜியைப் பற்றி எனக்குத் தெரியாது. உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லி வந்திருந்தார். வெங்கைய நாயுடுவைச் சந்தித்தார் என்பது உண்மைதான். நானும் அப்போது டெல்லியில்தான் இருந்தேன். ஆனால், அவர் பா.ஜ.க-வில் இணைய வரவில்லை. அவருடைய மகனோடு டெல்லியைச் சுற்றிப்பார்க்கத்தான் வந்திருந்தார். ஏற்கெனவே பழக்கமான தலைவர் வெங்கைய நாயுடுவையும் சந்தித்தார். அவர், அ.தி.மு.க-வை விட்டுவிட்டு வேறு கட்சிக்கு மாறக்கூடியவர் அல்ல!’’

மத்திய அரசும் ‘வெள்ளை அறிக்கை’தான் வெளியிட வேண்டும்!

“அ.தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டங்கள் அதே பெயரில், அப்படியே தி.மு.க அரசிலும் தொடர்கின்றன. ஆனால், மத்தியில் ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதின் பெயரைக்கூட பா.ஜ.க அரசு மாற்றிவிட்டதே... நியாயம்தானா?’’

“தி.மு.க அரசு, ‘பெயர் மாற்றம் செய்து தங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது’ என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க அம்சம். மத்திய அரசும்கூட, ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ பெயரை மாற்றியிருக்கத் தேவையில்லை என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து!’’

“மேக்கேதாட்டு அணைப் பிரச்னையில், கே.எஸ்.அழகிரி தமிழக பா.ஜ.க-வைக் கிண்டல் செய்துவிட்டதாகக் கொதிக்கிறீர்களே... கர்நாடக பா.ஜ.க முதல்வரே தமிழக பா.ஜ.க-வினரைக் கிண்டல்தானே செய்கிறார்?’’

“காவிரி விவகாரத்தில், தமிழகத்தின் ஜீவாதார உரிமையை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுத்துவிட முடியாது என்றுதான் தமிழக பா.ஜ.க உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டது. கர்நாடகா பா.ஜ.க-வும் அந்த மாநில மக்களுக்காகப் பேசிவருகிறது. உணர்வுபூர்வமான இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் பேசியதைக் கிண்டலாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம், சொந்த மாநிலத்திலேயே மற்ற கட்சியினர் தமிழக பா.ஜ.க-வைக் கிண்டல் செய்வதை ஏற்க முடியாது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism