Published:Updated:

“தி.மு.க நல்லது செய்தால் பாராட்டுவேன்... பா.ஜ.க தவறிழைத்தாலும் சுட்டிக்காட்டுவேன்!”

 நயினார் நாகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
நயினார் நாகேந்திரன்

- நயினார் நாகேந்திரன் ஓப்பன் டாக்...

“தி.மு.க நல்லது செய்தால் பாராட்டுவேன்... பா.ஜ.க தவறிழைத்தாலும் சுட்டிக்காட்டுவேன்!”

- நயினார் நாகேந்திரன் ஓப்பன் டாக்...

Published:Updated:
 நயினார் நாகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
நயினார் நாகேந்திரன்

ஆளுநர் - தமிழக அரசு இடையிலான மோதல்கள், துணைவேந்தர் நியமன திருத்தச் சட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வில் தொடரும் விவாதங்கள்... என நீண்ட இடைவெளிக்குப் பிறகு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரனிடம் பேசுவதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. அப்படி அவரிடம் பேசியதிலிருந்து...

“மாநில அரசு, ஆளுநருக்கு இடையிலான மோதல் தொடர்ந்துகொண்டே செல்வது சரிதானா?”

“இல்லைதான்... அதேசமயம், ‘மாநில அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை’ என்பது ஆளுங்கட்சியினர் கட்டமைக்கும் செயற்கையான பிம்பம். மத்திய அரசோடு ஒன்றிணைந்து காரியம் சாதித்துக்கொள்ளத் தெரியாமல் ஆளுநர் மீது புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க அரசு மத்திய அரசையும், ஆளுநரையும் எதிர்க்காமல் நடைமுறைச் சாத்தியங்களைப் புரிந்துகொண்டு செயல்பட்டாலே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடும்.”

“பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் துணைவேந்தர் நியமன சட்டம். இதை எதிர்ப்பது ஏன்?”

“தமிழ்நாட்டில் துணைவேந்தர்களை ஆளுநர்தான் நியமித்துக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது, மாநில அரசே இனி அதைச் செய்யும் என்று சொல்லும் அளவுக்கு என்ன சிக்கல் எழுந்துவிட்டது? நிறைவேற்றப்பட வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள் மலைபோல குவிந்துகிடக்கின்றன. அப்படியிருக்க, தி.மு.க-வின் தோல்வியை திசைதிருப்ப அவர்கள் செய்யும் நாடகத்தை எதிர்த்துத்தானே ஆக வேண்டும்...”

“ஆனால், ‘10 மாதங்களில் 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்’ என்று முதல்வர் சொன்ன பிறகும் தோற்றுவிட்டார்கள் என்று எதைவைத்துச் சொல்கிறீர்கள்?”

“202 என்கிற எண்ணிக்கை, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னென்ன என்பது முதல்வருக்கும் தெரியாது... அவரின் அமைச்சர்கள், கட்சியினருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. எதையும் யதார்த்தமாகப் பேச வேண்டும். கண் துடைப்புக்காக ஏதாவது சொல்லக் கூடாது.”

“பிரதமரை முன்னாள் தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பேசும் போக்கு அதிகரித்திருக்கிறதே?”

“நமக்குப் பிடித்த ஒருவரை மகாத்மா காந்தி என்றுகூடச் சொல்லாம். அதிலென்ன தவறு? ஒருவரைப் புகழ்வது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இப்படித்தான் ஒருவரைப் பாராட்ட வேண்டும், இவரோடுதான் ஒப்பிட வேண்டும் என்று சொல்வது தேவையில்லாத அரசியல். யாரையும் தரக்குறைவாகப் பேசக் கூடாது... அவ்வளவுதான். மற்றபடி விவாதிக்கும் அளவுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.”

“தி.மு.க நல்லது செய்தால் பாராட்டுவேன்... பா.ஜ.க தவறிழைத்தாலும் சுட்டிக்காட்டுவேன்!”

“ஆனால், ‘ஆலுமா டோலுமா...’, `ஊ சொல்றியா மாமா...’ ஆகிய பாடல்கள் குறித்து சட்டப்பேரவையில் நீங்கள் விவாதித்ததைவிட இது விவாதிக்கத் தேவையில்லாத விஷயம் என்று நினைக்கிறீர்களா?”

“நல்ல கேள்வி... இன்னொரு பத்து வருடம் கழித்து நமது குழந்தைகளுக்கு இப்படித்தான் தமிழ் சினிமா இருந்தது என்று சொல்ல முடியுமா... நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். `இப்படியெல்லாம் ஒரு படம் எடுக்கக் கூடாது. இது கலாசார சீரழிவு’ என்று யார் சொல்வது? பொழுதுபோக்கு அம்சம்தான்... ஆனால், நமக்கென்று ஒரு கலாசாரம், பண்பாடு இருக்கிறது. அதைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் அக்கறையும் எனக்கு இருக்கிறது. அதையொட்டி எழுந்த விவாதம்தான் இது.”

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வு, தனியார்மயமாக்கல் குறித்தும் பேசலாம் இல்லையா?”

“பேசக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், மத்திய அரசு 10 ரூபாய் குறைக்கும்போது மாநில அரசு ஏன் குறைக்கவில்லை. இதைத்தானே நம் பிரதமரும் கேட்டிருக்கிறார்!”

“அதே பிரதமரின் மத்திய அரசுதானே சிலிண்டருக்கு 200 ரூபாயை உயர்த்தியிருக்கிறது... இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”

“அதை நான் மறுக்கவில்லை. ஆனால், பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய் குறைப்பேன் என்று சொல்லிவிட்டு, மூன்று ரூபாய் மட்டும் குறைத்தது எப்படிச் சரியாகும்... மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே இருப்பது தவறுதான். அதை நான் தைரியமாகச் சொல்வேன். தி.மு.க நல்லது செய்தால் பாராட்டுவேன், பாராட்டியிருக்கிறேன். பா.ஜ.க தவறு செய்தால் அதையும் நான் சுட்டிக்காட்டுவேன்!”

“மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கி உள்ளிட்ட நிதி எப்போது கிடைக்கும், அதையும் நீங்கள் கேட்பீர்கள்தானே?”

“நிதி விஷயத்தில் மாநில அரசு ஒரு கணக்கு சொல்கிறது. அதேபோல மத்திய அரசு என்ன கணக்கு சொல்கிறது என்பதையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். நிச்சயமாகத் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி வர வேண்டுமென்றால் அதைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனால், அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி நிதியை வாங்க வேண்டும். மத்திய, மாநில நிதியமைச்சர்கள் பேசித் தீர்வுகாணவேண்டிய விஷயம் இது. இதில் நான் கருத்து சொல்வதற்கு என்ன இருக்கிறது!”

“தி.மு.க-வின் ஆட்சியைப் பற்றி..?”

“‘உறவுக்குக் கை கொடுப்போம்... உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்றார் முதல்வர். ஆனால், தொடர்ச்சியாக மத்திய அரசோடு மோதல் போக்கையே கடைப்பிடிக்கிறார்கள். மத்திய அரசுடன் தேவையான இடத்தில் முரண்படவும், தேவையான இடத்தில் இணக்கமாகவும் செல்ல வேண்டும். இது தமிழக அரசுக்கு எனது தனிப்பட்ட அறிவுரை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism