Published:Updated:

'எம்.ஜி.ஆர் பெயரில் கைவைத்தால், யாராக இருந்தாலும் அவ்வளவுதான்!' - எச்சரிக்கும் நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

``எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஆதாரத்துக்காக 'விற்பனை வரி'யில் ஒரு சதவிகிதத்தைக் கூட்டி வசூலித்தார். இந்த விவரமே பெரும்பாலானோருக்குத் தெரியாது'' என்கிறார் நயினார் நாகேந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டில், பா.ஜ.க-வுக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதைப் புரிந்துகொண்ட அந்தக் கட்சியின் தேசியத் தலைமை, தமிழ்நாட்டில் மண்ணுக்கேற்ற அரசியல் கணக்கைத் தொடங்க ஆரம்பித்திருக்கிறது! அதில் முதற்கட்ட வெற்றியாக, நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் சட்டமன்றத்துக்குள் அனுப்பிவைத்திருக்கிறது.

இதையடுத்து, `2026 சட்டமன்றத் தேர்தலில், 150 எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும்!' என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சூளுரைத்ததைச் செயல்படுத்தும் நோக்கில், சட்டமன்றப் பணிகளில் தி.மு.க-வுக்கு எதிராக தடதடத்துவருகின்றனர் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நால்வரும்.

இந்தநிலையில், மாநில பா.ஜ.க துணைத் தலைவரும் சட்டசபை பா.ஜ.க தலைவருமான நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசினேன்...

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``மிகக் கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், திருத்தியமைக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் புதிதாக வரிச்சுமை எதுவும் இல்லை என்பதே ஆறுதலான செய்திதானே... ஆனாலும்கூட பா.ஜ.க-வுக்குப் பாராட்ட மனம் வரவில்லையே ஏன்?''

``நிதி நெருக்கடி இருக்கிறதுதான்... அந்த உண்மையை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கடந்த காலத்திலும்கூட தமிழக அரசு பட்ஜெட்டில் புதிதாக எந்த வரிச்சுமையும் விதிக்கப்படவில்லைதானே!

அடுத்து, கிராமப்புற மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துகிற வகையில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லையே!''

``கடந்தகால அ.தி.மு.க ஆட்சியில் அத்தியாவசியத் தேவைகளுக்கும்கூட வரிவிதிப்பு செய்யாததே, தமிழகத்தின் கடன் சுமை அதிகரிப்புக்கான அடிப்படைக் காரணம் என்று நிதியமைச்சர் சொல்கிறாரே?''

``இதை எந்தவகையில் எடுத்துக்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வருகிற அரசாங்கங்கள், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால், புதிய வரிவிதிப்புகளைக் கொண்டுவந்துதான் ஆக வேண்டும்!''

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

``கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழக அரசு, வரியற்ற பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கிறது. ஆனால், மத்திய பா.ஜ.க அரசு..?''

``தமிழக பட்ஜெட் என்பது ஒரு மாநிலத்தின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசோ நாட்டின் அனைத்து மாநில மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில்கொண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, இந்த இரண்டு அரசியலையும் ஒப்பிட்டுப் பேசுவதென்பது சரியாக இருக்காது!''

`ஹாலிவுட் படம் பார்த்துக் கடத்தினோம்' - 3 கோடி ரூபாய் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தமிழக அரசின் நிதி நிலையை, 'வெள்ளை அறிக்கை'யாக தி.மு.க அரசு வெளியிட்டுவிட்ட பிறகும்கூட, `தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை தி.மு.க அரசு' என்று அரசியலுக்காகக் குற்றம் சுமத்துகிறீர்களே நியாயம்தானா?''

``இந்த விஷயத்தில், தி.மு.க அரசு, 'வெள்ளை அறிக்கை'யை வெளியிட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'அரசுக்கு ஐந்தே முக்கால் லட்சம் கோடி கடன் சுமை என்ற நெருக்கடியான நிதி நிலைமை இருக்கிறது' என்று அறிவித்துவிட்டிருந்தாரே... இதெல்லாம் இன்றைய முதல்வர், நிதியமைச்சர் உள்ளிட்ட தி.மு.க-வினர் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

மின்சாரத்திலும் போக்குவரத்திலும்தான் அதிகப்படியான கடன் சுமை ஏற்படும். இதெல்லாம் நிதி நிலை அறிக்கையைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள முடியும் என்றில்லை. ஆனாலும்கூட, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே 'வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்' என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து, வெற்றியும் பெற்றார்கள். இப்போது வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டுவிட்டார்கள்... அவ்வளவுதான்!''

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

``கடந்த 100 நாள் தி.மு.க அரசு, பல தரப்பினராலும் பாராட்டப்பட்டுவரும் சூழலில், உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன?''

``இது எனது அரசு அல்ல... எல்லோருக்குமான அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். கேட்பதற்கு இந்த வாசகம் நன்றாகத்தான் இருக்கிறது. முதல்வரும் இதை நடைமுறைப்படுத்தத்தான் முயல்கிறார். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருப்பது எல்லோருக்குமே தெரிகிறது. எனவே, புதிதாக வரி விதித்தால் மட்டுமே தேவையான திட்டங்களை தி.மு.க அரசு செய்து முடிக்க முடியும்!

கடந்த காலத்தில், எம்.ஜி.ஆர் சத்துணவைக் கொண்டுவந்த காலத்திலும் இதேபோல், கடுமையான நிதி நெருக்கடியான சூழல்தான். அப்போது, `பிச்சை எடுத்தாவது இந்தத் திட்டத்தை செய்துகாட்டுவேன்' என்று உறுதிகாட்டினார் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஆதாரத்துக்காக 'விற்பனை வரி'யில் ஒரு சதவிகிதத்தைக் கூட்டி வசூலித்தார். இந்த வரி உயர்வு மக்களைப் பெரிய அளவில் பாதிக்காததால், வரி உயர்த்தப்பட்ட விவரமே பெரும்பாலானோருக்குத் தெரியாது. இதேபோல், புதியதொரு முயற்சியை தி.மு.க அரசும் செய்தாக வேண்டும்தான்!''

கே.டி ராகவன் வீடியோ விவகாரம்: `யூ-டியூபர் என்னை சந்தித்து பேசியது உண்மைதான்!’ - அண்ணாமலை சொல்வதென்ன?

``கடந்தகால அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை மாற்றியமைக்காமல், அதே பெயருடன் தொடரச்செய்வதே தி.மு.க அரசின் பெருந்தன்மையைக் காட்டுகிறதுதானே?''

`` `நமக்கு நாமே', 'அண்ணா மறுமலர்ச்சி திட்டம்' போன்ற திட்டங்களை கருணாநிதி கொண்டுவந்தார். ஆனால், ஜெயலலிதா வந்ததும் இதையெல்லாம் எடுத்துவிட்டார். ஆனால், இப்போது மீண்டும் தி.மு.க அரசு வந்தபிறகு, மறுபடியும் இந்தத் திட்டங்களையெல்லாம் கொண்டுவந்துவிட்டார்கள்.

கருணாநிதி - ஜெயலலிதா
கருணாநிதி - ஜெயலலிதா

கடந்தகாலத்தில், சென்னை கடற்கரையை ஒட்டி புதிதாக தலைமைச் செயலகம் ஒன்றைக் கட்டுவதற்கான திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.க., இந்தத் திட்டத்துக்கு தடை விதித்தது. பின்னர் கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா புறக்கணித்தார். தமிழக அரசியலில், தி.மு.க - அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுமே இப்படி மாறி மாறி திட்டங்களின் பெயர்களை புறக்கணித்துவந்திருக்கிறார்கள்.

ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, இந்த விஷயத்திலிருந்து விலகி நின்று புதிய வழிகாட்டியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். 'அம்மா உணவக'த்தின் பெயரை அப்படியே தொடர்கிறார்கள். அதேசமயம், தமிழ்நாட்டில், எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் பெயரில் யாரும் கைவைக்கவே முடியாது. எம்.ஜி.ஆர் மீது கைவைத்தால், யாராக இருந்தாலும் அவ்வளவுதான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு