Published:Updated:

`500 ரூபாய்க்காக நடக்கும் போராட்டம் அது!’ -ஷாகீன்பாக் மக்களை விமர்சித்த பா.ஜ.க எம்.எல்.ஏ

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் நடக்கும் போராட்டம் பணத்துக்காக நடப்பதாக பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாதம் டெல்லியில் மோசமான வானிலை நிலவியது. கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைத்தது. அப்போதும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கெடுத்தனர். ஷாகீன்பாக் மக்கள் இந்தாண்டு புத்தாண்டையும் போராட்டக்களத்தில்தான் கொண்டாடினர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கான உணவுகள், இன்னும் பிற பொருள்கள் தன்னார்வ அமைப்புகள் மூலமும் அந்தப்பகுதியை சேர்ந்த மக்களாலும் வழங்கப்படுகிறது.

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிரான டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் நடக்கும் போராட்டம் பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பா.ஜ.க-வினர் ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டங்கள் குறித்து விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரசாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், `துரோகிகளை கொல்லுங்கள் ’ என்றார். பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா ஒருபடி மேலே சென்று, ``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் உங்களுடைய வீடுகளுக்குள் புகுந்து உங்கள் மனைவி மற்றும் சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்” என்றார். இவர்களது பேச்சு சர்ச்சைக்குள்ளானது.

`துரோகிகளைக் கொல்லுங்கள்!’ அனுராக் தாக்கூரின் சர்ச்சைப் பேச்சால் அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

`இவர்களது பேச்சு மதநல்லிணக்கத்துக்கு அபாயத்தை விளைக்கும்' என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பா.ஜ.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சாகிப் சிங் வர்மா எம்.பி ஆகியோரின் பெயர்களை நீக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

சங்கீத் சோம்
சங்கீத் சோம்

நேற்று டெல்லியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ உங்களின் ஒரு வாக்குதான் தீர்மானிக்கப்போகிறது. டெல்லி, ஷாகீன்பாக் உடையதா அல்லது பாரத மாதாவின் மக்களுடையதா?” என்று பேசினார். ஷாகீன்பாக் மக்களின் போராட்டங்கள் குறித்து தொடர்ந்து பா.ஜ.க பேசிவருகிறது. இந்த நிலையில், சர்ச்சைக்குப் பெயர் போன பா.ஜ.க எம்.எல்.ஏ-வான சங்கீத் சோம் (Sangeet som) ஷாகீன் பாக் போராட்டம் குறித்து ராகுல்காந்தியின் குடியுரிமை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

சங்கீத் சோம் பேசுகையில், ``ஷார்ஜில் இமாம் போன்றவர்கள் இந்தியாவைத் துண்டிக்க வேண்டும் எனப் பேசுகிறார்கள். அவர்களை எல்லாம் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுத்தள்ள வேண்டும். ஷாகீன்பாக்-கில் போராட்டம் என்ற பெயரில் மக்கள் பிக்னிக் வந்துள்ளனர். அங்கிருக்கும் பெண்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லை. இவர்களை எல்லாம் எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் அமர்ந்துள்ள மக்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு 500 ரூபாய் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இதற்காகப் பணம் செலவழிக்கப்படுகிறது. ராகுல் காந்திக்கு மோடி மீதும் சி.ஏ.ஏ மீதும் பயம். ராகுல் இந்தியாவின் பிரஜை என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. அவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு