தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை நேற்று இரண்டு பேர் அலுவலகத்துக்குள்ளேயே புகுந்து அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையைத் தடுத்ததன் காரணமாகவே கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு, உடனடியாக ஒரு கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீரழிந்திருப்பதாகவும், லூர்து பிரான்சிஸைக் கொலைசெய்த குற்றவாளிகளைக் கைதுசெய்து தமிழ்நாட்டில் கனிம வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் வானதி சீனிவாசன், ``ஏப்ரல் 21-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கியிருக்கிறது திமுக அரசு. எந்தவிதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையைச் செயல்பட அனுமதித்திருக்கிறோம். இதனால்தான் சமூகவிரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைதுசெய்யப்படுகிறார்கள்' என்றார்.

ஆனால், அவர் பேசி முடித்த நான்கு நாள்களுக்குள் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், அவரின் அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றதால்தான் கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்டிருக்கிறார் என்று வரும் செய்திகள், தமிழகத்தில் எந்த அளவுக்கு மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் மணல், கற்கள் போன்ற கனிமங்கள் தங்கத்தைவிட மதிப்புமிக்கவையாக மாறியிருக்கின்றன. எனவே, மணல் உள்ளிட்ட கனிம வளங்களுக்காக எதையும் செய்ய, அந்த வணிகத்திலுள்ள மாஃபியாக்கள் தயாராக இருக்கின்றனர் என்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் படுகொலையே உதாரணம். மணல் கொள்ளையர்களுடன் அதிகார வர்க்கம் கூட்டணியில் இருக்கிறது. அதனால்தான், லூர்து பிரான்சிஸ் போன்ற நேர்மையான அரசு அலுவலர்கள் தங்களது உயிரையும் இழக்க நேரிடுகிறது.

கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் இடம் மாறுதல் கோரி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலும், அவருக்கு மணல் கொள்ளை நடந்துவரும் பகுதியிலேயே பணி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தப் படுகொலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். லூர்து பிரான்சிஸைப் படுகொலை செய்த கொடியவர்களை உடனடியாகக் கைதுசெய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மணல், கற்கள் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அதில் கோட்டைவிட்டுவிட்டால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். யாரும் முதலீடு செய்ய வர மாட்டார்கள். இதை உணர்ந்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க, காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் ஸ்டாலின் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.