Published:Updated:

‘விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டையா?’ - வானதியின் எதிர்ப்பு அரசியலும்... திமுக விளக்கமும்!

வானதி சீனிவாசன் - ஸ்டாலின்

`அ.தி.மு.க ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது, தி.மு.க அரசு எதற்கெடுத்தாலும் விளைநிலங்களைக் கையப்படுத்திவருகிறது.'- வானதி சீனிவாசன்

Published:Updated:

‘விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டையா?’ - வானதியின் எதிர்ப்பு அரசியலும்... திமுக விளக்கமும்!

`அ.தி.மு.க ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது, தி.மு.க அரசு எதற்கெடுத்தாலும் விளைநிலங்களைக் கையப்படுத்திவருகிறது.'- வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் - ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் மீதும், தமிழக அமைச்சர்கள் மீதும், தி.மு.க-வின் மீதும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தினசரி குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார். சொல்லப்போனால், தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வைக் காட்டிலும் அதிகமான விமர்சனங்களை தி.மு.க அரசு மீது பா.ஜ.க முன்வைத்துவருகிறது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்த நிலையில், பா.ஜ.க மகளிர் அணியின் தேசியச் செயலாளரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், தி.மு.க அரசு மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் ஒர் அறிக்கையில், ‘தி.மு.க அரசு எதற்கெடுத்தாலும் விளைநிலங்களைக் கையகப்படுத்திவருகிறது’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், “2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, நிலங்களைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதெல்லாம், அந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க மிகவும் கடுமையாக எதிர்த்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால், எந்த காரணத்தை முன்னிட்டும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தமாட்டோம், தரிசு நிலங்களைக்கூட விவசாய நிலங்களாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார்கள். எதற்கெடுத்தாலும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சென்னை - சேலம் 8 வழி விரைவுச்சாலைத் திட்டத்தை தி.மு.க-வினர் முடக்கினார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற போர்வையில் செயல்படும் தி.மு.க-வினரைத் தூண்டிவிட்டு வளர்ச்சித் திட்டங்களை தி.மு.க முடக்கியது. இப்போது, அதிகாரம் கைக்கு வந்ததும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறார்கள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள சிறுமுகையில், தொழிற்பேட்டை அமைப்பதற்காக சுமார் நான்காயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதவிர, பவானிசாகர் அணைக்கு அருகில் 1,084 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டையால் நிலத்தடி நீர் மாசடைந்து அப்பகுதி முழுவதுமே விவசாயம் பெருமளவு அழிந்துவிட்டது. இதனால், சிறுமுகை மற்றும் கீழ்பவானி பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

சேலம்- சென்னை எட்டுவழிச் சாலை
சேலம்- சென்னை எட்டுவழிச் சாலை

எனவே, விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை தி.மு.க. அரசு கைவிடவேண்டும். கொடுத்த வாக்குறுதிக்கு நேர் எதிராக செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சி போலும்” என்று வானதி சீனிவாசன் விமர்சித்திருக்கிறார்.

வானதி சீனிவாசனின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். ``அ.தி.மு.க ஆட்சியில் மக்களின் கருத்துகளைக் கேட்காமல், ஒன்றிய பா.ஜ.க அரசு என்னவெல்லாம் சொல்கிறதோ, அவற்றை செய்துகொண்டிருந்தார்கள். மேலும், தனிப்பட்ட முதலாளிகளுக்கு ஆதரவாக அவற்றை செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், தி.மு.க ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

வழக்கறிஞர் கண்ணதாசன்
வழக்கறிஞர் கண்ணதாசன்

உதாரணமாக, பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அந்தப் பகுதி மக்களிடம் கருத்துகளைக் கேட்டு, அதன் பிறகுதான் திட்டம் கையிலெடுக்கப்படுகிறது. இதுதான் அ.தி.மு.க அரசுக்கும் தி.மு.க அரசுக்குமான வித்தியாசம். அப்படியிருக்கும்போது, ஒன்றிய அரசு என்ன சொன்னாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த அ.தி.மு.க அரசுடன், தி.மு.க அரசின் மக்கள் நலன் அடிப்படையிலான செயல்பாடுகளை ஒப்பிடுவது மிகவும் தவறு.

தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகள் எங்கு அமைக்கப்பட்டாலும், அது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் நிச்சயமாகக் கருத்துக் கேட்கப்படும். அந்த மக்களின் கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிரான திட்டமாக இருந்தால், அதை தி.மு.க அரசு நிச்சயம் கையிலெடுக்காது. ஆன்லைன் சூதாட்டம் மக்களுக்கு எதிரானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அது பற்றி வானதி சீனிவாசன் பேச மாட்டார்.

எட்டு வழிச்சாலை
எட்டு வழிச்சாலை

தி.மு.க அரசைப் பொறுத்தளவில் சுற்றுச்சூழலுக்கு எதிராகவோ, மக்களின் வாழ்விடங்களைப் பாதிக்கிற வகையிலோ, எந்தத் திட்டங்களும் கொண்டுவரப்படாது என்பது உறுதி” என்கிறார் வழக்கறிஞர் கண்ணதாசன்.