அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தி.மு.க புதிதாக எதையும் அறிவிக்கவில்லை! - வானதி சீனிவாசன் பொளேர்...

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி சீனிவாசன்

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் - தமிழில் அர்ச்சனை - பெண்களும் அர்ச்சகராகலாம்

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினையே ‘வேல்’ அரசியல் செய்யவைத்த ராஜதந்திரம் தமிழக பா.ஜ.க-வுக்கு உண்டு. இப்போது தி.மு.க-வின் முறைபோல... ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை’ என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் அதிரடி முடிவுகளை வாழ்த்தி வரவேற்கிறது தமிழக பா.ஜ.க. இதைப் பற்றி என்ன சொல்கிறார் பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்? இதோ அவரது நேர்காணல்...

“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை ஆகிய தி.மு.க அரசின் அறிவிப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளைப் புண்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது இந்து மதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதுபோலவும், இவையெல்லாம் ஏதோ புரட்சிகரமான திட்டங்கள்போலவும் சொல்லிவருகிறார்கள். உண்மை அதுவல்ல. நீண்டகாலமாகவே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சியை வழங்கிவருகின்றனர். மேல்மருவத்தூர் கோயிலில் பல ஆண்டுகளாகப் பெண்கள்தான் அர்ச்சனை செய்கிறார்கள். கோவை பேரூர் ஆதீனத்திலும்கூட பெண் களுக்கு சமயப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஏற்கெனவே பல கோயில்களில், ‘இங்கே தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். அதனால், தி.மு.க எதையும் புதிதாக அறிவிக்கவில்லை. ஆனாலும்கூட தமிழக அரசின் இந்த அறிவிப்புகளை தமிழக பா.ஜ.க வரவேற்கிறது.’’

“கேரளாவில் சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்று போராடிவரும் பா.ஜ.க., தமிழ்நாட்டில் பெண்களைக் கோயில் கருவறைக்குள்ளேயே அனுமதிப்பதை வரவேற்பது... சந்தர்ப்பவாத அரசியல் என்கிறார்களே?’’

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கைகளை நாம் காப்பாற்ற வேண்டும். எந்த இடத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமோ அதைக் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த பெரியவர்களின் ஒத்துழைப்போடுதான் ஓர் அரசு செய்ய முடியும். சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் செல்லலாமா, கூடாதா என்ற விஷயத்தில், அந்தக் கோயிலுக்கென்று இருக்கும் சம்பிரதாயம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அங்குள்ள பா.ஜ.க-வினர் செயல்படுகிறார்கள். இதைச் சந்தர்ப்பவாத அரசியல் என்று சொல்ல முடியாது.’’

தி.மு.க புதிதாக எதையும் அறிவிக்கவில்லை! - வானதி சீனிவாசன் பொளேர்...

“எப்படியோ தமிழ்நாட்டில், ‘பெண் சமத்துவத்துக்கு எதிராக யாரும் பேச முடியாது’ என்ற நிர்பந்தம் தமிழக பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டுவிட்டதுதானே?’’

“இதை நிர்பந்த அரசியல் என்ற பார்வையில் நீங்கள் பார்க்க வேண்டாம். ஏற்கெனவே சொன்னதுபோல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதில் ஆரம்பித்து பல்வேறு சீர்திருத்தங்களை நாங்களே முன்னெடுத்துவருகிறோம். ஆக்கபூர்வமாக, அமைதியாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளின் பயிற்சியே. மற்றபடி அரசியல் விளம்பரத்துக்காக ‘முற்போக்கு’ என்ற போர்வையில் இது போன்ற பணிகளைச் செய்யக் கூடாது. ‘பெண்களின் முன்னேற்றத்துக்காக தி.மு.க பாடுபடுகிறது’ என்று சொல்லிக் கொள்கிறவர்களே அவர்களின் வீட்டிலிருந்து, முதலமைச்சர் வாரிசாக ஏன் ஒரு பெண்ணை முன்னிறுத்தவில்லை?’’

“தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்குத்தான் அதிக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது’ என்று சொல்கிறார். நீங்களோ, ‘கோவை புறக்கணிக்கப்படுகிறது’ என்கிறீர்களே?’’

“முதல்வர் சொல்வதும் உண்மை; கோவை புறக்கணிக்கப்படுவதாக நான் சொல்வதும் உண்மை. சென்னையைவிடவும் கோவை குறைவான மக்கள்தொகையைக் கொண்டது. ஆனாலும் கொரோனா ஒரு நாள் பாதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், சென்னையைவிடவும் கோவையில் பாதிப்பு அதிகம். ஆக, பாதிப்பை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், சென்னையைவிடவும் கோவைக்குத்தானே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளைக் கொடுக்க வேண்டும்... அதைத்தான் தமிழக அரசிடம் நாங்கள் கேட்கிறோம்.’’

“பள்ளிப் பொதுத்தேர்வுகளை ரத்து செய்கிற மத்திய அரசு, நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யாததன் பின்னணியில் அரசியல் உள்ளது என்கிறார்களே?’’

“பள்ளி பொதுத்தேர்வு என்பதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆறு நாள்கள் வரை தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால், அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது ஒரே நாளில் நடத்தி முடிக்கக் கூடியது. கொரோனா தொற்று பாதிப்பைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே வருகின்றன. ‘மாணவர்களின் நலனும் பாதுகாப்பும் முக்கியம்’ என்று நினைக்கிற மத்திய அரசு, பொறுமையாக ஆராய்ந்துதான் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும். ஆனால், அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதில் ஓர் உள்நோக்கம் இருப்பதாகச் சொல்கிற எதிர்க்கட்சிகள், நாம் என்ன பதில் சொன்னாலும் திருப்தி அடையாது!’’