Published:Updated:

மோடியைப் பாராட்டியதற்கும் இளையராஜாவின் எம்.பி பதவிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை!

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

- நம்ப சொல்கிறார் வானதி சீனிவாசன்

மோடியைப் பாராட்டியதற்கும் இளையராஜாவின் எம்.பி பதவிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை!

- நம்ப சொல்கிறார் வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

நுபுர் ஷர்மா தொடங்கி ராதாரவி வரை சர்ச்சைப் பேச்சுகள்... ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முவை அறிவித்ததில் தொடங்கி இளையராஜாவுக்கு எம்.பி பதவி கொடுத்தது வரைக்கும் பா.ஜ.க செயல்பாடுகளின்மீது கடுமையான விமர்சனங்கள்... எனப் பரபரப்பிலேயே இருக்கிறது பா.ஜ.க. இந்நிலையில், பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவி, வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

`` `அமித் ஷா, மோடி இருவரும் இந்தியாவிலேயே மிகப்பெரிய அக்யூஸ்ட்கள்’ என்று பேசியிருக்கிறாரே உங்கள் கட்சியைச் சேர்ந்த நடிகர் ராதாரவி?’’

``ராதாரவி இயல்பிலேயே கொஞ்சம் எமோஷனலான பேச்சாளர். ஆனால், இரு பெரும் தலைவர்களை எதனால் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அதில், நான் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.’’

``ராதாரவியின் அந்தப் பேச்சு முழுவதும் ஆபாசம், வன்முறை, மிரட்டல் தொனியிலேயே இருந்ததே?’’

``தேசியக் கட்சி என்கிற அடிப்படையில் மரியாதை, கண்ணியத்தை எப்போதும் நாங்கள் பின்பற்றுகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் இப்போது கேடர் பேஸுடு பார்ட்டியிலிருந்து, மாஸ் பேஸுடு பார்ட்டியாக எங்கள் கட்சி நகரத் தொடங்கியிருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களும் பா.ஜ.க-வை நோக்கி வருகிறார்கள். அப்படி வேறுபட்ட பின்னணியிலிருந்து வருபவர்கள், ஆரம்பத்தில் அப்படித்தான் இருப்பார்கள். எங்கள் கட்சியினருடன் பழகி எங்கள் ஸ்டைலுக்கு வந்துவிடுவார்கள்.’’

``ஆனால், கட்சியின் தலைவரே ‘தமிழ்நாட்டிலும் ஏக்நாத் ஷிண்டேக்கள் உருவாவார்கள்’ என்று பேசுகிறாரே... இதுதான் ஜனநாயகபூர்வமான அரசியலா?’’

``தமிழ்நாட்டில் ஏக்நாத் ஷிண்டேக்கள் உருவாவது பா.ஜ.க-வின் கைகளில் இல்லை. எந்தக் கட்சியிலிருந்து எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் எங்களை நோக்கி வருகிறார்களோ அந்தக் கட்சியின் தலைமையும் அவர்களின் செயல்பாடுகளுமே அதற்குக் காரணம். அதற்கு பா.ஜ.க பொறுப்பேற்க முடியாது. அதேவேளையில், எங்களை நோக்கி வருபவர்களை நாங்கள் தள்ளிவிடவும் முடியாது.’’

``ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து, மக்கள் வாக்களித்துத் தேர்தெடுத்த பிரதிநிதிகளை ‘எங்களை நோக்கி வந்தால் ஏற்றுக்கொள்வோம்’ என்று சொல்வது சரியா?’’

``சட்டத்துக்குப் புறம்பாக, எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வந்தால் அவர்களின் பதவி கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் காரணமாகத் தானாகக் காலியாகிவிடும். அதேவேளையில், அந்தப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்துகொண்டால், மக்களின் உணர்வுகளுக்கு-நலன்களுக்கு எதிராக நடந்துகொண்டால், மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்துகொள்ளலாம் என்று சட்டமே அனுமதிக்கிறது. அப்படி அவர்கள் அங்கிருந்து விலகி வருவதை பா.ஜ.க ஏற்றுக்கொள்கிறது.’’

``தமிழ்நாட்டில் மதம் சார்ந்த சர்ச்சைகளைத் தொடர்ச்சியாக பா.ஜ.க உருவாக்குவது ஏன்?’’

``மதம் சார்ந்த அரசியல் கூடாது என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், தங்களுடைய வாக்குவங்கி அரசியலுக்குப் பெரும்பான்மை மக்களின் வழிபாட்டு முறையைக் கேவலமாகச் சிலர் விமர்சிக்கும்போது, பொதுமக்கள் அதற்கு பதிலளிக்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கக்கூடிய பண்பு நம் அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா... அது வேண்டும் என்பதைத்தான் பா.ஜ.க விரும்புகிறது.’’

``ஆனால், நுபுர் ஷர்மா தொடங்கி ராதாரவி வரை பா.ஜ.க-வினர்தானே மாற்று மதங்களைக் கொச்சைப்படுத்தும்விதத்தில் பேசிவருகிறார்கள்?’’

``அப்படிப் பேசுபவர்கள்மீது எங்கள் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கிறது. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நுபுர் ஷர்மா நீக்கப்பட்டிருக்கிறார். மற்ற அரசியல் கட்சிகளில் யார் இப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள்?’’

``ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், திரௌபதி முர்மு போன்றவர்களை நிறுத்துவது வெறும் அடையாள அரசியல்தானே... இதனால் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு என்ன நன்மை?’’

``திரௌபதி முர்மு பழங்குடியினப் பெண்மணி என்பதற்காக மட்டும் அவரை வேட்பாளராக்கவில்லை. தன்னுடைய கடுமையான வாழ்க்கைச் சூழலிலிருந்து படித்து, மக்கள் பணி செய்து, இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அவரை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறது பா.ஜ.க.’’

``ஆனால், ராம்நாத் கோவிந்தைக் கோயிலுக்குள் அனுமதிக்காத சம்பவமும் இந்த நாட்டில்தானே நடந்தது?”

``அவருடைய அலுவலகம் தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டது. கால்வலியால், அவருடைய மனைவிக்கு பட்டிக்கட்டில் ஏறி வழிபட முடியாத நிலை. அவர் மட்டும் சென்று வழிபாடு செய்திருக்கிறார். ஆனால், அவருடைய மனைவியை அனுமதிக்கவில்லை என ஊடகங்கள் எழுதிவிட்டன.’’

மோடியைப் பாராட்டியதற்கும் இளையராஜாவின் எம்.பி பதவிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை!

``சரி... ஆளுநர் தமிழிசையை சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடத்தியவிதத்தை எப்படி எடுத்துக்கொள்வது?’’

``டாக்டர் தமிழிசைக்கு அப்படியோர் அவமதிப்பு நடந்திருந்தால், நிச்சயமாக அது கண்டிக்கத்தக்கது. ஒருபோதும் இது போன்ற விஷயங்களை நாங்கள் ஆதரிப்பதில்லை. இதை மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தம்.’’

``மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதிய முன்னுரைக்கான பரிசுதான், இளையராஜாவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி என விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?’’

``இளையராஜா ஓர் இசை மாமேதை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஜனாதிபதியின் இந்த நியமனமானது பல்வேறு துறைகளில் பங்களித்தவர்கள், நேரடி அரசியலுக்கு வராதவர்கள் என்கிற அடிப்படையில் செய்யப்படுகிறது. அந்தவகையில் பொருத்தமானவர் இளையராஜா. மோடியைப் பாராட்டியதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.’’

``ஆனால், இதற்குப் பின்னால் வாக்குவங்கி அரசியல் இருக்கிறது என்று விமர்சிக்கிறார்களே?’’

``அரசியல் கட்சி என்றால் ஒவ்வொரு செயல்பாட்டின் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கத்தான் செய்யும். ஆனால், இளையராஜா என்கிற திறமையான நபருக்கு இது மிகச் சரியான அங்கீகாரம். இதை அரசியலாகப் பார்ப்பது அவர்களின் தவறு.’’

``அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க-வின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

``ஒருபோதும் பா.ஜ.க அப்படி நடந்துகொள்வதில்லை. திரௌபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவருக்கும் சம முக்கியத்துவம்தான் கொடுத்தோம். நாங்கள் ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை.’’

``பா.ஜ.க கூட்டங்களுக்குப் பணம் கொடுத்து மக்கள் அழைத்துவரப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?’’

``எங்கள் கூட்டங்களுக்கு வரும் மக்களிடமே இந்தக் கேள்வியைக் கேட்டு பதில் வாங்கிக்கொள்ளுங்கள். எங்களுக்குக் கிடைக்கும் மக்களின் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் வைக்கிற விமர்சனமாகத்தான் இதைப் பார்க்கிறேன்!’’