Published:Updated:

``திட்டினால்கூட மரியாதையாகத் திட்டும் ஊரில் பிறந்துள்ளேன்!'' - பி.டி.ஆருக்கு வானதி சீனிவாசன் பதில்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``பொதுவெளியில் இது எனக்குப் புதிததல்ல. ஆரோக்கியமான விமர்சனத்தைப் பொதுவெளியில் இருக்கும் எல்லோரும் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். தவறு இருந்தால் அதைத் திருத்திக்கொள்ள முன் வர வேண்டும்'' - வானதி சீனிவாசன்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பதற்றத்துக்கு மத்தியிலும், பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது சமீபத்தில் நடந்து முடிந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

``கொரோனா வைரஸ் காரணமாக, மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் ஏற்படும் வருவாய் இழப்புகளை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை” என்று அதில் அவர் கூறியிருந்தார்.

மவ்வின் கோடின்ஹோ
மவ்வின் கோடின்ஹோ

இதனிடையே, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் பேச்சுக்கு கோவா போக்குவரத்துத்துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ கண்டனம் தெரிவித்திருந்தார். ``கோவா சிறிய மாநிலம் என்பதால் அதன் குரலை பறிக்க முயற்சி செய்கிறார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த தியாகராஜன், ``ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்ற முறையே தவறு. நான் கோவா மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கோவை தெற்குத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பழனிவேல் தியாகராஜனின் செயல் ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் இருந்தது. இதுபோன்ற செயல்கள் நம் மாநிலத்தின் மீதான நல்ல பிம்பத்தைக் கெடுக்கும்” என்று கூறியிருந்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

இதற்கு பதில் அளித்த தியாகராஜன்,``என்னை டேக் செய்வதை நிறுத்திவிட்டு மாற்றத்துக்கான வேலையைச் செய்யுங்கள்” என்று கூறி வானதியைக் கடுமையாக விமர்சித்தார். சமூகவலைதளங்களில் இப்போதும் அதன் நீட்சியான உரையாடல்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் பேசினோம்.

``நம் நிதி அமைச்சர் முதன்முறையாகத் தமிழகத்தை முன்னிலைப்படுத்தி ஜி.எஸ்.டி கவுன்சிலில் கலந்து கொண்டார். எல்லா மாநிலங்களைப் போலவும், மத்திய அரசுக்கும் வருவாய் இழப்பு இருக்கிறது. ஒரு கடுமையான காலகட்டத்தில் இருக்கிறோம். இதில் எந்த மாதிரியான விஷயத்தை முன்வைக்கிறோம் என்பது ஒரு விதம்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மறுபக்கம், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும், கட்டமைப்பு வேண்டும் போன்றவற்றைப் பேசுவதற்குக் காலம் இருக்கிறது. ஆனாலும்கூட நான் அதைத் தவறாக நினைக்கவில்லை. முதல் கூட்டத்திலேயே தனது கொள்கைப் பிடிப்பை பதிவு செய்ய பழனிவேல் தியாகராஜன்ஆசைப்பட்டிருக்கலாம்.

அதே நேரத்தில் சிறிய மாநிலம், பெரிய மாநிலம் என்று பேசுவதன் மூலம் கோவாவை நம் நிதியமைச்சர் அவமானப்படுத்துவது தவறு என்று கூறியிருந்தேன். அதற்கு அவர் என்னை பிளாக் செய்துவிட்டு கடுமையான வார்த்தைகளைப் போட்டிருக்கிறார். வருத்தமளிக்கிறது. இது அவரது குணாதிசயத்தைக் காட்டுகிறது என்று கூறியிருந்தேன். அதற்கு அவர் மீண்டும் ட்வீட் போட்டுள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

இதுபோன்ற சமூகவலைதளப் பேச்சுவார்த்தைகள் பேசுபொருளாவது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். எனக்குத் தனிப்பட்ட, தரக்குறைவான தாக்குதல்களில் உடன்பாடு கிடையாது. நான் எப்போதும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன்.

சிறிய கலெக்டர், பெரிய கலெக்டர் என்று மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசம் இருக்கிறதா? எந்த மாநிலமாக இருந்தாலும், எல்லா முதலமைச்சர்களுக்கும் ஒரே மாதிரியான மரியாதையைத்தானே கொடுக்கிறோம்? பெரிய மாநிலம், சிறிய மாநிலம் என்று நாம் பிரித்துப் பார்க்கிறோமா? வருவாய் கொடுக்கும் மாவட்டம், கொடுக்காத மாவட்டம் எனத் தமிழகத்தில்தான் பிரித்து பார்க்கிறோமா?

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பொறுப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். நீங்கள் ஜி.எஸ்.டி கவுன்சிலில் பேசியதைப்போல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் பேசத் தொடங்கினால் அதை எப்படிக் கையாள்வீர்கள்?

ஒரு மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறப்பாக இருக்கும். இன்னொரு மாவட்டத்தில் விவசாயம் நன்றாக இருக்கும். விவசாயத்தில் அரசாங்கத்துக்குப் பெரிய வருமானம் இருக்காது. ஆனால், நமக்கு இரண்டுமே வேண்டும். மாநிலங்களை பருப்பு கொடுக்கும் மாநிலம், கோதுமை கொடுக்கும் மாநிலம் என்று பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதனால், கோவாவை சிறிய மாநிலம் என்று கூறியதைத்தான் நான் தவறு என்றேன். பழனிவேல் தியாகராஜன் தனக்கு விரும்பாத கருத்துகளை சொல்பவர்கள் மீது, எப்படி விமர்சனம் வைப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அது அவரது தரத்தைக் காட்டுகிறது. பொதுவெளியில் இது எனக்குப் புதிததல்ல. ஆரோக்கியமான விமர்சனத்தை பொதுவெளியில் இருக்கும் எல்லோரும் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். தவறு இருந்தால் அதைத் திருத்திக்கொள்ள முன் வரவேண்டும். பொதுவாழ்வில் அந்தப் பக்குவம் இருக்கிறதா என்பது முக்கியம். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
சூடுபிடிக்கும் GST கவுன்சில் விவகாரம்: தமிழக நிதியமைச்சரின் கோரிக்கைக்கு மத்திய அரசின் பதில் என்ன?

இதன்பிறகும்கூட அவர் நிறைய பேரை பேசிக் கொண்டுதான் இருக்கிறார். திட்டினால்கூட மரியாதையாகத் திட்டும் ஊரில் பிறந்திருக்கிறேன் நான். கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் என் கண் முன்னால் உதவி கேட்டுக் கதறிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் பிரதிநிதியாக எனக்கு ஓட்டுப் போட்ட மக்களின் தேவைகளை நான் செய்து கொடுக்க வேண்டும். அதை எல்லாம் கவனிக்காமல் ட்விட்டர் போர், அநாகரிமாகப் பேசுவதற்கு நேரமும் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை.

கோவை
கோவை

அதே நேரத்தில் என்னுடைய கருத்துகளை எங்கு பதிவு செய்ய வேண்டுமோ, அங்கு ஆணித்தரமாகப் பதிவு செய்து கொண்டுதான் இருப்பேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு