Published:Updated:

``ஸ்டாலின் தேசிய அரசியலுக்குச் செல்வது சந்தேகம்..!" - சொல்கிறார் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

``தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் தேசியத் தலைமை உறுதியாக இருக்கிறது" என்கிறார் வானதி சீனிவாசன்

Published:Updated:

``ஸ்டாலின் தேசிய அரசியலுக்குச் செல்வது சந்தேகம்..!" - சொல்கிறார் வானதி சீனிவாசன்

``தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் தேசியத் தலைமை உறுதியாக இருக்கிறது" என்கிறார் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

பா.ஜ.க., அ.தி.மு.க இடையேயான வார்த்தைப்போர் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்துவரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கேள்விக்குறியாகியிருக்கிறது. அண்ணாமலையின் தொடர் அதிரடி பேச்சுகளால் இரு தரப்பு நிர்வாகிகளிடையே அதிருப்தி வெளிப்பட்டிருக்கிறது. இது தொடர்பாகச் சில கேள்விகளோடு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் தொலைபேசி வாயிலாக சில கேள்விகளை முன்வைத்தோம்... 

``அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடருமா... கடந்த ஒரு வாரகாலமாக நடக்கிற நிகழ்வுகளைப் பார்க்கும்போது தேசியத் தலைமை கண்டுகொள்ளாமல் இருக்கிறதா?”

``தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் தேசியத் தலைமை உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி வந்த தேசியத் தலைவர்கூட எங்களிடம், `தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நல்ல முறையில் தொடர்வதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். எல்லோரிடமும் பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள்' என எங்களுக்கு அறிவுரை கூறிச் சென்றிருக்கிறார்.”

அண்ணாமலை, ஜே.பி.நட்டா, வானதி சீனிவாசன், எல்.முருகன்
அண்ணாமலை, ஜே.பி.நட்டா, வானதி சீனிவாசன், எல்.முருகன்

``அப்படியென்றால் தேசியக் கட்சிகளுக்கு திராவிடக் கட்சிகளை வீழ்த்தும் தன்மை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?”

``தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தேசியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் தேசியத்துக்கு எதிராக இருப்பதாக அர்த்தமில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தேசியத்தைத் தாண்டியும் சில விஷயங்கள் இருக்கின்றன. உள்ளூர் தலைவர்களின் செல்வாக்கு, அரசாங்கத்தை நடத்துகின்ற விதம், கட்சியின் கட்டமைப்பு, கட்சி கட்டமைப்பில் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான இடம் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கிறதே தவிர... தேசியக் கட்சிக்கு எதிராக, தேசியத்துக்கு எதிராக திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. இதைப் புரிந்துகொண்டால் தேசியத்துக்கு இடம் இல்லை என்கிற வார்த்தை வராது.”

``அப்போது திராவிடக் கட்சிகளின் கட்டமைப்போடு பா.ஜ.க போட்டி போட முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?”

“நீண்ட நெடுங்காலம் அரசியல் கட்சி நடத்திவந்தாலும், கட்டமைப்புரீதியாக எல்லா இடங்களிலும் அடிப்படை வேலைகள் செய்துவருகிறோம். பாரம்பர்யமாக கன்னியாகுமரி, கோவை தாண்டி பா.ஜ.க இல்லை என்கிற சூழல் இன்று மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது. மாவட்டக் கட்டமைப்புகளை பலமாக்கியிருக்கிறோம். அடுத்து பூத் கட்டமைப்புகளை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறோம்.”

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

“ தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று ஜே.பி.நாட்டா கூறுகிறாரே... இப்படியே கூட்டணியில் இருந்தால், இரட்டை இலை தானே மலரும்! தாமரை எப்படி மலரும்?”

“தாமரை மலராது என்று பேசிக்கொண்டிருந்த ஒரு மாநிலத்தில் தாமரை மலர்ந்திருக்கிறதே...”

“அதுவும் கூட்டணியால்தானே...?

“கூட்டணியினால் மட்டுமே நாங்கள் வெற்றிபெற்றோம் என்று சொல்லிவிட முடியாது. கூட்டணி என்பது இரு கட்சிகளுக்கும் பலன் அளிக்கக்கூடியது. அந்தக் கூட்டணியில் வெற்றிபெற்ற மற்றவர்களுக்கும் எங்கள் வாக்குகள் சென்றிருக்கின்றன. உங்களுக்கு நாங்களும், எங்களுக்கு நீங்களும் என உதவி செய்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சிக்குமே அவர்கள் தனியாக ஆட்சி அமைக்க வேண்டும், அதிகமான எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களைப் பெற வேண்டும் என்பது இயல்பாக இருக்கக்கூடிய ஆசை. அதற்குத்தான் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துக்கிறோம். அதனால் இங்கு கூட்டணியில் இருப்பதினாலேயே தாமரை மலராது என்று அர்த்தம் இல்லை. கூட்டணியிலிருந்து கொண்டும் தாமரை மலர்ந்திருக்கிறது என்றால் இரண்டு கட்சிகளின் ஒத்துழைப்புதான் காரணம்.”

இளங்கோவன், கமல்ஹாசன்
இளங்கோவன், கமல்ஹாசன்

“கோவை தெற்கில் உங்களை எதிர்த்து போட்டியிட்ட கமல், இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்டணி தொடரும் பட்சத்தில் அது பா.ஜ.க-வுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தாதா?"

“கோவை தெற்கில் தோற்றுப்போன ஒரு கட்சியின் தலைவர். இன்னொரு கட்சியில் கூட்டணி வைப்பதால் எங்களுக்கு எப்படி பாதிப்பு வரும். அவருக்கென்று ஊடக வெளிச்சம், சினிமா புகழ் மட்டும்தான் இருக்கிறதே தவிர, அவரின் கட்சி பலமோ, வாக்கோ எங்கிருக்கிறது. இன்று தி.மு.க கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராகவே மாறியிருக்கிறார் கமல்.”

ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

“முதல்வர் ஸ்டாலின் சமீபகாலமாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறாரே?”

“தேசிய அரசியலை நோக்கிச் செல்வதில் யாருக்கு வேண்டுமானாலும், ஆர்வம், ஆசை இருக்கலாம். அதில் தவறு இல்லை. அதற்கு முன்பு தேசியத்தை நம்பக்கூடிய, தேசியத்துக்கு எதிராகச் செயல்படாத நபராக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது தேசத்துக்கு எதிராகப் பேசக்கூடிய நபர்கள் அல்லது தேசியத்துக்கு எதிராக முதலில் கருத்து சொல்லக்கூடிய தலைவர்களை வைத்திருக்கக்கூடிய கட்சியாக இருப்பதினால், இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஸ்டாலின் அவர்கள் தேசிய அரசியலுக்குச் செல்வது சந்தேகம். அடுத்து இந்த நாட்டின்மீதும், ஒற்றுமைமீதும் நம்பிக்கை இருக்க வேண்டும். எந்த மாநில மக்கள்மீதும், மொழிமீதும் வெறுப்பில்லாத நபராக இருக்க வேண்டும்.”

“ஆனால், மொழிமீதும், மக்கள்மீதும் வெறுப்பாக இருப்பது பா.ஜ.க-தான் என்கிறார்களே?”

“தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களை எப்படி நடத்துகிறார்கள், இந்தி மொழிக்கு எதிரான கருத்துகளை எப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.”