Published:Updated:

`` `கன்னிப்பேச்சு' ஆட்சேபனை, கோவைக்கு தனி கவனம் செலுத்தும் முதல்வர்!" - வானதி சீனிவாசன் பேட்டி

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

`கன்னிப் பேச்சு' ஆட்சேபனை தொடங்கி Rose is a Rose is a Rose வரை வானதி சீனிவாசனின் சட்டசபை பேச்சுகள் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அறிமுக உரை அனுபவம் குறித்து வானதி சீனிவாசனிடம் பேசினோம்.

சட்டசபைக்குள் நுழைந்ததும் தங்களது அறிமுக உரை மூலம் சில உறுப்பினர்கள் கவனம் ஈர்ப்பார்கள். ஆனால், அந்த அறிமுக உரையைக் குறிப்பிடும் விதத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளார் வானதி சீனிவாசன். ``சட்டசபையில் மக்கள் பிரதிநிதிகளின் முதல் பேச்சை `கன்னிப் பேச்சு' என்று ஏன் குறிப்பிடுகிறோம்? அதற்கு மாற்று வார்த்தையைக் குறிப்பிடலாமே..?” என்று சொல்லி கவனத்தை ஈர்த்துள்ளார் கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

`கன்னிப் பேச்சு' ஆட்சேபனை தொடங்கி Rose is a Rose is a Rose வரை வானதி சீனிவாசனின் சட்டசபை பேச்சுகள் சமூகவலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அறிமுக உரை அனுபவம் குறித்து வானதி சீனிவாசனிடம் பேசினோம். ``சட்டசபைக்குள் நுழையும் முன்பு வரை `கன்னிப் பேச்சு' என்பதைப் பற்றி நாளிதழ்களில் படித்துள்ளேன். பொதுவாக, திருமணமாகாத பெண்களை `கன்னி' என்று சொல்வார்கள். சம்ஸ்கிருதத்தில், `கன்னியா’ என்பது இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் சொல். `கன்னி' என்று கற்பு ஒழுக்கத்தின் மீது எழுப்பப்படும் வார்த்தை என்பதால், `கன்னிப் பேச்சு' என்பதை வேறு வார்த்தையில் குறிப்பிடலாமே என்று அவ்வப்போது யோசித்திருக்கிறேன்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

சட்டசபைக்குள் நுழைந்ததும்தான் அதில் இன்னும் தீவிரமானேன். எனக்கு முன்பு பேசிய உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைவரும் `கன்னிப் பேச்சு' என்றே கூறினர். அது எனக்கு நெருடலாக இருந்தது. அதனால் `கன்னிப் பேச்சு' என்பதற்குப் பதில் முதல் அல்லது அறிமுகப் பேச்சு என்று கூறலாமே என்று பேசினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்த ஓர் அரசியல்வாதிக்கும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் அவர்கள் குரல் ஒலிப்பது அடையாளம், அங்கீகாரமாக இருக்கும். தமிழ்நாடு சட்டசபை மிகவும் பாரம்பர்யமிக்கது. எத்தனையோ சீர்திருத்தங்கள், மாற்றங்கள் வந்திருக்கின்றன. அதில் நான் நுழைவதற்கான வாய்ப்புக்கு என் தொகுதி மக்கள்தான் காரணம். அதனால் அவர்களுக்கு முதலில் நன்றி கூறினேன்.

சட்டசபை
சட்டசபை

தமிழ்நாட்டில் அரசியல்ரீதியாகப் படுகொலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் நாங்கள்தான். ஆரம்பக் காலகட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ் எப்படி இருந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனது கல்லூரிக் காலத்தில் இருந்து எனக்கு நெருக்கமான பலரது படுகொலைகளைச் சந்தித்திருக்கிறேன்.

கோவை குண்டுவெடிப்பின் தாக்கம் இன்றும் இருக்கிறது. சென்னை ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்பில் என் கணவர் உயிர் தப்பியதே இறைவன் செயல். அதனால் எங்கள் இயக்கத்துக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். என் தொகுதிக்கு நான் தனியாகத் தேர்தல் அறிக்கை கொடுத்துள்ளேன். கோவை மெட்ரோ ரயில், காந்திபுரம் சிறையை பூங்காவாக மாற்ற வேண்டும்,

கோவை
கோவை

தங்க நகை தொழிலாளர்களுக்குச் சிறப்பு திட்டம், டி.கே மார்க்கெட்டில் மல்டி லெவல் பார்க்கிங்குடன் வணிக வளாகம் கட்டுதல் ஆகியவற்றைப் பேசினேன். இதில் மெட்ரோ மற்றும் சிறைப் பூங்கா குறித்து முதல்வரே நேரடியாகப் பதில் அளித்துள்ளார்.

`கன்னிப் பேச்சு' என்ற பதம் தொடர்பாக நான் பேசிக் கொண்டிருக்கும்போது சபாநாயகர், அமைச்சர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் மிகவும் சீரியஸாக என்னைப் பார்த்ததை நான் உணர்ந்தேன். முதல்வரும் கூர்மையாகக் கவனித்தார். சட்டசபை முடிந்தபோது, மாற்றுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும், ``கன்னிப் பேச்சு குறித்த கேள்வி, ரொம்ப நல்ல விஷயம்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இத்தனை நாள்கள் நாங்கள் அதை யோசிக்கவில்லை. நீங்கள் பேசிய பிறகுதான் இது நியாயமான விஷயம் என்று தோன்றிது'' எனப் பாராட்டினர். அடுத்த நாள் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன் பேசும்போது, `என் கன்னிப் பேச்சை ஆரம்பிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டார்.

அப்போது பேரவைத் தலைவர், `வானதி அம்மா அந்த வார்த்தை வேண்டாம், மாற்று வார்த்தையைப் பயன்படுத்தலாம் எனச் சொல்லியிருக்கிறார். அதனால் வேறு வார்த்தையைப் பயன்படுத்தலாம்’ என்று கூறினார். சட்டசபையில் இருந்து வெளியில் வந்ததும் காவலர்கள், பெண்கள், `பேச்சை கேட்டோம், 'கன்னிப் பேச்சு' கருத்து பிரமாதம்’ என்றனர்.

சபாநாயகர்
சபாநாயகர்

சட்டசபையில் இருந்து ஒரு மூத்த அதிகாரி தொடர்பு கொண்டு, `1952-ம் ஆண்டில் இருந்து இந்தப் பழக்கம் இருக்கிறது. நீங்கள் முதல் பேச்சிலேயே ஒரு அடையாளத்தை உருவாக்கிவிட்டீர்கள்’ என்று கூறினார்” என்றவரிடம், இதுகுறித்து சமூகவலைதளங்களில் பரவிவரும் கருத்துகள் குறித்து கேட்டோம்.

சமூக வலைதளங்களில் சிலர், `சபரிமலைக்கு முதன்முதலாகச் செல்பவர்களை கன்னிச்சாமி என்றுதான் கூறுவார்கள். அதை மாற்ற முடியுமா?' என்று கேட்கின்றனர். கொங்கு மண்டலத்தில் கன்னிமார் பூஜையே இருக்கிறது. அங்கு 7 சப்த கன்னிமார்கள் என்பது நீண்ட காலமாக இருக்கும் வழக்கம். பூப்பெய்தாத பெண்களுக்கு பூஜை செய்யும் வழக்கம் நேபாளம், தாய்லாந்து போன்ற பல நாடுகளில் இருக்கிறது.

ஏழு கன்னிமார்
ஏழு கன்னிமார்

அது பண்பாடு, கலாசாரம் சார்ந்த வழக்கம். அதற்கும், சட்டசபை போல பொதுவாகப் பேசும் இடங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சட்டசபை மாதிரியான இடங்களில் கண்ணியமாக இருக்க வேண்டும்.

சில ஆண்டுளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளை `உடல் ஊனமுற்றோர்' என்றுதான் அனைவரும் சொல்வார்கள். மாற்றுப் பாலினத்தவரை திருநங்கை, திருநம்பி என்று அழைக்க ஆரம்பித்ததும் நாளடைவில் ஏற்பட்ட மாற்றம்தான். அதுபோல `கன்னிச்சாமி' என்பது பிற்காலத்தில் மாறலாம்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
Live Updates: தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: ``அதிரடி மாற்றங்களுக்கு தமிழக அரசு தயார்!" - பி.டி.ஆர்

காலத்துக்கு தகுந்தது போல எந்த இடத்தில் அதைப் பொருத்திப் பார்க்கிறோம் என்பதுதான் விஷயம். நிதியமைச்சர் என்னை ட்விட்டரில் பிளாக் செய்த பிறகு, இருவரையும் எதிர் எதிர் திசையில் நிறுத்துவது பரபரப்பான செய்தியாக மாறிவிட்டது. ஆனால், அவர் மாநிலத்தின் நிதியமைச்சர்.

அவரின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் போடுவது என் கடமையில்லை. என்னைப் பொறுத்தவரை, நிதியமைச்சரிடம் இருந்து என் தொகுதிக்குத் தேவையான நிதியைப் பெறுவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நிதி நிலை அறிக்கைக்கும் ஆக்கபூர்வமான ஆலோசனையைக் கூறுவதுதான் என் கடமை.

கோவை
கோவை

சென்னையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் இருப்பதைப் போல, கோவைக்கும் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை ஏற்படுத்த வேண்டும் என்று என் தேர்தல் அறிக்கையிலேயே கூறினேன். அதை பட்ஜெட்டில் அறிவித்ததுக்கு நிதியமைச்சருக்கு நான் நன்றி கூறினேன். அவருடைய கருத்தை அவர் பேசுகிறார். என்னுடைய கருத்தை நான் பேசுகிறேன்.

அமைச்சர்களுக்கு எப்போது எழுந்தாலும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உறுப்பினர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. வாய்ப்பளித்தால் அவருடைய அனைத்துக் கருத்துகளுக்கும் பதிலளிக்க முடியும். அதே நேரத்தில் மெட்ரோ ரயில் உட்பட கோவை திட்டங்கள் குறித்து நான் பேசியதற்கு முதல்வரே பதில் கூறினார். கோவை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க கூட்டணிதான் வென்றுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
கொங்குநாடு சர்ச்சை: ``தமிழ்நாட்டைப் பிரிக்க நினைக்கவில்லை; ஆனால்..!" - வானதி சீனிவாசன்

எனவே, கோவை குறித்து அதிகம் பேச வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. முதல்வரே திட்டங்களுக்கு உறுதியளித்ததன் மூலம், கோவை விஷயத்தில் அவர் தனிப்பட்ட ரீதியாகக் கவனம் கொடுக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தியது” என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு