Published:Updated:

`காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம்’ - சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க எம்.பி

பா.ஜ.க எம்.பி ஆனந்த்குமார் ஹெட்ஜ்
பா.ஜ.க எம்.பி ஆனந்த்குமார் ஹெட்ஜ்

``பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் பெற்று இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேர்மையான எதிர்ப்புப் போராட்டம் அல்ல இவர்களுடையது” என்று ஆனந்த்குமார் ஹெட்ஜ் பேசியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி விமர்சனத்திற்கு உள்ளாவது வழக்கம். அவ்வகையில் தற்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த்குமார் ஹெட்ஜ், காந்தி குறித்துப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த்குமார் ஹெட்ஜ்
ஆனந்த்குமார் ஹெட்ஜ்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆனந்தகுமார் ஹெட்ஜ் கடந்த சனிக்கிழமை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ``பிரபல தலைவர்களாக கூறப்படுபவர்களில் எவரும் ஒருமுறைகூட காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானதில்லை. அவர்களின் சுதந்திரப் போராட்டம் மிகப்பெரிய நாடகம். பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் பெற்று இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவர்களுடைய போராட்டம் நேர்மையானதாக இல்லை. சமாளிப்பதற்காக நடத்தப்பட்ட சுதந்திரப்போராட்டம் இது. காந்தியின் உண்ணாவிரதப் போராட்டமும் சத்தியாகிரகமும் ஒரு நாடகம்” என்றார்.

`காந்தி தியாகி.. கோட்சே தேசபக்தர்!’- காந்தியின் மரணம் உணர்த்தும் செய்தி என்ன? #Bapuji

மேலும் அவர், ``சத்தியாகிரகம் மற்றும் சாகும்வரை உண்ணாவிரதம் ஆகியவைதான் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முக்கியக் காரணம் என காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். இது உண்மையல்ல. சத்தியாகிரகப் போராட்டத்தால் பிரிட்டிஷ்காரர்கள் நாட்டைவிட்டு வெளியேறவில்லை. வெறுத்துப்போன மனநிலையில்தான் சுதந்திரத்தை வழங்கியுள்ளனர். இத்தகையவர்கள்தான் நம்நாட்டில் மகாத்மாவாக இருக்கிறார்கள். வரலாறுகளைப் படிக்கும்போது என்னுடைய ரத்தம் கொதிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

துஷார் காந்தி
துஷார் காந்தி

ஹெட்ஜின் கருத்துக்கு, ட்விட்டரில் காந்தியின் பேரன் துஷார் காந்தி,``பாபுவின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம் என்று ஹெட்ஜ் கூறியுள்ள கருத்து சரியானது. இந்த நாடகம் மிகவும் ஆழமானது. இந்தியாவில், பிரிட்டிஷ்காரர்களின் ஒழுங்கற்ற காலனியாதிக்கம் மற்றும் அடிமைத்தனம் குறித்த அவர்களின் கண்களைத் திறந்தது” என்று பதிலளித்துள்ளார்.

`மகாத்மா காந்தி விரும்பியதை மோடி நிறைவேற்றுகிறார்!' -  மதுரையில் ஸ்மிரிதி இரானி

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத்,``நாதுராம் கோட்சேவின் வாரிசுகளால்தான் மகாத்மா காந்தி குறித்து இதுபோன்ற கருத்துகளைக் கூற முடியும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், பா.ஜ.க-வினரும் ஹெட்ஜின் கருத்துகுறித்து தங்களது கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜகதாம்பிகா பால், ``காந்தியைப் பற்றி உலகில் அனைவருக்கும் தெரியும். ஹெட்ஜேவின் இந்தக் கருத்து, அவருடைய தனிப்பட்ட ஒன்றாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும், ``காந்தியைக் குறித்து ஹெட்ஜே இந்தக் கருத்தை கூறியிருக்கக் கூடாது. நமது நாட்டில் அனைவராலும் காந்தி மதிக்கப்படக்கூடியவர்” என்று மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அஷ்வினி சௌபே
அஷ்வினி சௌபே

ஹெட்ஜின் இந்தக் கருத்துக்கு தொடர்ந்து பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். இதனால், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் அவரின்மீது அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என பா.ஜ.க தலைமை அவருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காந்தி வேண்டும், காந்தியம் வேண்டாமா?
அடுத்த கட்டுரைக்கு