Published:Updated:

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவா?- இல.கணேசன் பதில்

`விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.க-வுக்கு பி.ஜே.பி முழு ஒத்துழைப்பு கொடுக்கும்' என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இல.கணேசன்
இல.கணேசன்

ராசிபுரத்தில் பா.ஜ.க. சார்பில் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், `ஜம்மு - காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் 370-வது சட்டப்பிரிவை நீக்க பா.ஜ.க. உறுதி அளித்திருந்தது. மேலும், இது பல ஆண்டுத் திட்டம் என்பதால், நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டு ஜனநாயக ரீதியாக நீக்கப்பட்டுள்ளது.

2-வது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க-வின் 100 நாள் சாதனைகளில் 370-வது சட்டப்பிரிவு நீக்கியதே முக்கிய சாதனையாகும்.
இல.கணேசன்

ஜம்மு-காஷ்மீர் பிரச்னை ஒட்டுமொத்த பாரத தேசத்தின் பிரச்னை. இந்தப் பிரச்னை, நாடு சுதந்திரம் பெற்றது முதல் இருந்துவருகிறது. சிறிது காலத்தில் அது முழுமையாக சரி செய்யப்படும். 2-வது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க-வின் 100 நாள் சாதனைகளில் 370-வது சட்டப்பிரிவு நீக்கியதே முக்கிய சாதனையாகும். பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் செய்யமாட்டேன் என சபதம் எடுத்ததோடு இல்லாமல் அதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

போட்டியில் 39 பேர்!- முத்தமிழ்ச் செல்வன் விக்கிரவாண்டி அ.தி.மு.க வேட்பாளரானது எப்படி?

லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்காக சில கட்டமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். குறிப்பாக மின்னணு பரிவர்த்தனை காரணமாக லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் குறைந்து, அனைத்துத் திட்டங்களும் நேரடியாக பயனாளிகளை சென்றடைகிறது. பொருளாதார சீரமைப்புகளை நோக்கியே நிதி அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

இல.கணேசன்
இல.கணேசன்

இதற்கு முன்பு யாரெல்லாம் லஞ்சம் பெற்றார்களோ, அவர்கள் அனைவரையும் கோர்ட்டு முன்பு நிறுத்தும் பணியை பிரதமர் தொடங்கி இருக்கிறார். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளார். ஒரே நாடு, ஒரே அட்டை என்பது வரவேற்கத்தக்கது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். பா.ஜ.க, இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஒத்துழைக்கும். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும். அதில் பா.ஜ.க முழுவீச்சில் களம் இறங்கி வெற்றிபெறும்" என்று கூறினார்.