பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஆண்டு திடீர் திருப்பமாக பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். அதன் பிறகு பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என ஒருபக்கம் எதிர்கட்சித் தலைவர்களைச் சந்தித்துவந்தார்.

இதற்கிடையில், நிதிஷ் குமார் பிரதமராக ஆசைப்படுகிறார், 2024-ல் தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துவருகிறார் என பா.ஜ.க விமர்சித்துவந்தது. இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி ரவிசங்கர் பிரசாத், பீகாரை நிர்வகிக்க முடியாத நிதிஷ் குமார், தன்னை பிரதமர் வேட்பாளராக்கக் கோரிக்கை விடுதிருப்பதாக விமர்சித்திருக்கிறார்.
நிதிஷ் குமார் குறித்து ஊடக நிறுவனம் ஒன்றிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், ``பீகார் மாநிலத்தை தன்னால் நிர்வகிக்க முடியாத நிலையில், தன்னைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் ஒன்று, நிதிஷ் குமாராக இருந்தாலும் சரி, வேறு எந்தத் தலைவராக இருந்தாலும் சரி, பிரதமர் மோடியின் தலைமையில் நாடு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியிருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாடு மாறிவிட்டது. நாட்டு மக்கள் மாறிவிட்டனர். பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமைமீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதேசமயம், நிதிஷ் குமாரால் அரசியல் நம்பகத்தன்மையை உருவாக்க முடியவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது... அவரால் பீகாரைக் கையாள முடியவில்லை, மாநிலம் சிக்கலில் இருக்கிறது, கட்சியில் குழப்பம் இருக்கிறது. காங்கிரஸும் அவருக்கு எந்த முன்னேற்றமும் கொடுக்கவில்லை. நிதிஷ் குமார் ஜி, நீங்கள் தேவகவுடா அல்லது இந்தர் குமார் குஜ்ரால் போன்ற முன்னாள் பிரதமர்கள்போல ஆக விரும்புகிறீர்கள்" என்றார்.