மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை பிர்பூம் பகுதி பாக்டுய் கிராமத்தில் கடுமையான கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வீடுகள் எரிந்து 2 குழந்தைகள், 6 பெண்கள் என 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு, இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே மேற்கு வங்க முதல்வருக்கும், ஆளுநருக்கும் ஏற்கனவே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிர்பூமில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பாஜக எம்.பி. ரூபா கங்குலி மாநிலங்களவையில் இது குறித்துப் பேசுகையில், ``மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் கொலைகள் நடப்பது வழக்கமாகிவிட்டன” என்றவர், கதறி அழுதபடி, ``வங்கத்தில் பிறந்தது எங்கள் குற்றமில்லை. இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் தீயில் கருகி இறந்தனர். மக்கள் அங்குள்ள போலீஸாரை நம்பவில்லை. மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 7 நாள்களில் மேற்கு வங்கத்தில் 26 அரசியல் கொலைகள் நடந்துள்ளன. இந்த மாநிலம் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறிவிட்டது'' என்றார் கண்ணீருடன்.