அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சூர்யாவும், டெய்சியும் அக்கா, தம்பி போலத்தான் பேசிக்கொண்டனர்!

 - நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
- நாராயணன் திருப்பதி

- நாராயணன் திருப்பதி ‘நைஸ்!’

‘செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாக’ தமிழ்நாடு பா.ஜ.க-வினர் ஆளுநரைச் சந்தித்துப் புகார் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க-வுக்குள் நடக்கும் பிரச்னைகள், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து, தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

‘‘தமிழக பா.ஜ.க-வினர் ஆளுநரைச் சந்தித்துப் புகார் கொடுத்து, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் எனக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?”

“ `நிர்வாகம் சரியாக இல்லை... அதைச் சீர்திருத்துங்கள்’ என்று சொல்வதற்கு ஆளுநரிடம்தான் புகார் தெரிவிக்க வேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது... அதேபோல காவல்துறை, நீதிமன்றங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய விஷயங்களையும் கொண்டு சென்றுகொண்டுதான் இருக்கிறோம்.”

“காவல்துறை தெளிவுபடுத்திய பிறகும், `செஸ் ஒலிம்பியாட்’ நிகழ்ச்சிக்கு வந்தபோது பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தது எனச் சொல்லிக்கொண்டிருப்பது சரியா?”

“காவல்துறை உண்மைக்குப் புறம்பான கருத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. உளவுத்துறை அப்படிக் கடிதம் எழுதவே இல்லை என்று ஒப்புக்கொள்வார்களா... அப்படியானால் அப்படிக் கடிதம் எழுதியது யார்... இது குறித்து அவர்கள்தான் வெளிப்படையாகப் பேச வேண்டும்.”

சூர்யாவும், டெய்சியும் அக்கா, தம்பி போலத்தான் பேசிக்கொண்டனர்!

“காயத்ரி ரகுராம், சூர்யா சிவா பிரச்னை என எல்லாவற்றையும் பெரிதாக்கி வேடிக்கை பார்க்கிறதா பா.ஜ.க தலைமை?”

“காயத்ரி, தமிழ்நாடு பா.ஜ.க-வின் முக்கியப் பிரிவில் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார். அதை உணராமல் பொதுவெளியில் பேசியிருப்பது ஒழுங்கீனமானது. அவருக்குப் பிரச்னை இருந்தால், மாநிலத் தலைமையிடம் சொல்லியிருக்கலாம். என்னிடமாவது பேசியிருக்கலாம். சூர்யா சிவாவும், டெய்சியும் பொதுவெளியில் பேசவில்லை. தனிப்பட்ட முறையில் அக்கா, தம்பிக்குள் பேசிக்கொள்வதுபோலத்தான் பேசியிருக்கிறார்கள். ஆடியோவிலேயே சூர்யா, டெய்சியை ‘அக்கா’ என்றும், சூர்யாவை டெய்சி ‘தம்பி’ என்றும் சொல்லிக்கொள்கிறார்களே... மற்றபடி சூர்யா சிவா, தான் பேசிய தரக்குறைவான வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனாலும்கூட அவருக்கு, தமிழக பா.ஜ.க தண்டனை கொடுத்திருக்கிறது. இந்த மாதிரி பேசுபவர்களைக் கட்சியிலிருந்து எடுக்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் எந்தக் கட்சியிலும் யாரும் இருக்க மாட்டார்கள்.”

“நடிகை நயன்தாராவை, தரக்குறைவாக வி.பி.துரைசாமி பேசியதில் என்ன நாகரிகம் இருக்கிறது... அவர் பேசியது பொதுவெளி இல்லையா?”

“வி.பி.துரைசாமி சொன்னதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள்.. அவர் அன் பார்லிமென்டரி வார்த்தை எதுவும் பேசவில்லை. நானும் அதைக் கேட்டேன். அவரிடமும் கேட்டேன். ‘நகைச்சுவைக்காகத்தான் அப்படிப் பேசினேன்’ என்றார். அங்கிருப்பவர்களிடமும் விசாரித்தேன். அநாகரிகமாகவோ, தரக்குறைவாகவோ அவர் பேசவில்லை. அவர் பேசியதைத் தவறாகப் புரிந்துகொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.”

“ஸ்டாலின் விளம்பரப் பிரியர் என்கிறீர்கள். பிரதமர் மோடியும்தான் 18 கோடியில் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார். அதை என்ன சொல்வது?”

“நாங்கள் நிறைய சாதனைகள் செய்திருக்கிறோம். அதனால், விளம்பரம் செய்கிறோம். என்ன செய்துவிட்டார்கள் என இவர்கள் விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள்... இவர்கள் செய்த அதிகபட்ச சாதனையே டாஸ்மாக் விற்பனையை அதிகரித்ததுதானே... அதைத்தான் இவர்கள் சாதனையாகச் சொல்ல வேண்டும்.”

“வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது, விலைவாசி உயர்ந்திருக்கிறது, ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருக்கிறது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் விற்கப்பட்டிருக்கின்றன இதில் எதை வளர்ச்சி என்கிறீர்கள்?”

“அரசு சார்பில் எப்படி அனைவருக்கும் வேலை கொடுக்க முடியும்... அந்நிய முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறோம். உற்பத்தியை அதிகரித்திருக்கிறோம். ஆமாம், விலைவாசி உயர்ந்திருக்கிறது. ஆனால், உலக அளவில் இந்தியாவில்தான் பணவீக்கம் குறைவாக இருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு வந்த சிக்கல் அது. இயற்கையைத் தாண்டி நம்மால் என்ன செய்ய முடியும்... உலகளாவிய பிரச்னையில் இந்தியாவை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது.”

“கர்நாடகாவில் குண்டு வெடித்தாலும் தமிழ்நாடு அரசைக் குற்றம் சொல்கிறீர்களே?”

“கர்நாடகா குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தங்கியிருக்கிறார். அவரைக் கண்காணிக்காமல் உளவுத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது... என்.ஐ.ஏ தமிழ்நாட்டில் குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் விசாரிக்கும் ஒரு குழு. எல்லாவற்றையும் கண்காணித்து, தமிழ்நாடு காவல்துறையிடம் தகவல் சொல்லத்தான் முடியும். மற்றவற்றைத் தமிழ்நாடு காவல்துறைதான் பார்த்திருக்க வேண்டும்.”

“தமிழ்நாட்டில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க தனித்துச் சந்திக்குமா எனக் கேட்டு சீமான் சவால் விட்டிருக்கிறாரே?”

“தமிழ்நாட்டில் அதிக முறை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது பா.ஜ.க மட்டும்தான். தமிழ்நாட்டிலிருக்கும் மற்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிடட்டும். குறைந்தபட்சம் தி.மு.க தேர்தலைத் தனித்துச் சந்திக்கட்டும். நாங்களும் தனியாகப் போட்டியிடுகிறோம். அதை விட்டுவிட்டு எங்களை டார்கெட் செய்வது பா.ஜ.க-வை பலவீனப்படுத்தும் முயற்சி. எங்களை யாராலும் பலவீனப்படுத்த முடியாது!”

“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க எத்தனை தொகுதிகள் ஜெயிக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

“எல்லாத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. நிச்சயமாக 15 தொகுதிகளில் வெற்றி உறுதி!”