Published:Updated:

தேர்தல் அரசியலில் புதுப்புது வியூகங்கள்! - பாஜக செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

கடந்த மாதம் நடந்த 14 மாநில இடைத்தேர்தல் பின்னடைவு, சில மாதங்களில் எதிர்கொள்ளப்போகும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல், கட்சிக் கட்டமைப்பு, புதிய தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சவால்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, நீண்டகாலம் நடத்தப்படாமல் இருந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (7-11-2021) தலைநகர் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. சென்ற மாதம் நடந்த 14 மாநில இடைத்தேர்தலில் பின்னடைவு, சில மாதங்களில் எதிர்கொள்ளப்போகும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல், கட்சிக் கட்டமைப்பு, புதிய தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சவால்கள் குறித்து, மோடி, அமித் ஷா, அத்வானி உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டனர். தேசிய அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ள இந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பாஜக
பாஜக

செயற்குழுக் கூட்டம்:

டெல்லியில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மாநில முதல்வர்கள், தலைவர்கள் என மொத்தம் 342 தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில், கொரோனா விதிமுறைகள் காரணமாக, 124 செயற்குழு உறுப்பினர்கள் நேரிலும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட ஏனைய 218 உறுப்பினர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்தக் கூட்டத்தில் நேரில் சென்று கலந்துகொண்டார்.

கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

இடைத்தேர்தல் தோல்வி முகம்:

கடந்த மாதம் நடந்து முடிந்த (14 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம்) 15 மாநில இடைத்தேர்தல்களில் பா.ஜ.க பெரும் பின்னடைவைச் சந்தித்தது. தேர்தல் நடந்த 30 சட்டமன்றத் தொகுதிகளில் 15 இடங்களிலும், மூன்று மக்களவைத் தொகுதிகளில் ஓர் இடத்திலும் பாஜக தோல்வியடைந்தது. குறிப்பாக, பா.ஜ.க ஆளும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் முற்றிலுமாக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதேபோல், கர்நாடக மாநில பா.ஜ.க முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்திலேயே காங்கிரஸிடம் பா.ஜ.க தோல்வியடைந்தது. இது பாஜக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

பாஜக
பாஜக

வரவிருக்கும் ஐந்து மாநில தேர்தல்:

அதேபோல், 2022 -ம் ஆண்டு தொடக்கத்தில், அதாவது இன்னும் சில மாதங்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மேலும், ஆண்டின் இறுதியில் இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கக்கூடிய, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, பஞ்சாப் தவிர்த்த பிற மாநிலங்களில் பா.ஜ.க-தான் ஆட்சியில் இருப்பதால், அந்த மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைப்பதும் அதன் கௌரவப் பிரச்னையாக இருக்கிறது.

பாஜக
பாஜக
samacharokiduniya.com

எனவே, கடந்த இடைத்தேர்தல் தோல்விக்கான முக்கியக் காரணங்களை ஆராயவும், எதிர்நோக்கும் சட்டமன்ற தேர்தல்களுக்கான வியூகங்கள் அமைப்பது குறித்து கலந்தாலோசிப்பதற்காகவும் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யோகிக்கு முன்னுரிமை:

இந்தக் கூட்டத்தில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்துவந்த `அரசியல் தீர்மானங்களை முன்மொழியும் பணி' இந்தமுறை யோகி ஆதித்யநாத்திடம் வழங்கப்பட்டது. இதற்குக் காரணம், மோடியிடம் யோகிக்கு இருக்கும் செல்வாக்கும், வருகின்ற உ.பி சட்டமன்றத் தேர்தலை மீண்டும் யோகியின் தலைமையிலேயே சந்திக்கவிருப்பதற்கான முன்னேற்பாடு என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இந்தியாவிலேயே அதிக நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கும் உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெற்றாலே, தனது ஆட்சியையும், பெரும்பான்மையையும் தக்கவைத்துக்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது.

அமித் ஷா- யோகி - மோடி
அமித் ஷா- யோகி - மோடி

மோடிக்கு நன்றி:

இதைத் தொடர்ந்து, கொரோனா பேரிடர் மீட்பு நடவடிக்கை,100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்தது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப் பிரிவை நீக்கம் செய்தது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, அவற்றுக்காக பிரதமர் மோடிக்கு தேசிய செயற்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மோடி
மோடி

கலந்துகொண்ட தலைவர்களின் ஆலோசனை:

செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி,``பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, சேவை, உறுதி, அர்ப்பணிப்பு ஆகிய மூன்று தாரக மந்திரங்களை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறது. தொடக்கத்திலிருந்தே, சாமானிய மக்களுக்காக உழைத்துவரும் ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான். இது, ஒரே குடும்பத்தைச் சுற்றி வரும் கட்சி அல்ல என்பதால்தான், பாஜக இன்று மத்தியில் ஆட்சி செய்துவருகிறது" என்றார்.

பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?! - அண்ணாமலையின் மூவ்... பரபரக்கும் கமலாலயம்!

மேலும், ``பொதுமக்களுக்கும் கட்சிக்கும் இடையே ஒரு நம்பிக்கைப் பாலமாக பா.ஜ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் செயல்பட வேண்டும். மக்களின் நலனுக்காக நமது பாஜக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை மக்களிடத்தில் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க அமோக வெற்றிபெறுவது உறுதி. இதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்" எனவும் நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அவருக்கு முன்னதாகப் பேசிய, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``நாடு முழுவதும் பா.ஜ.க-வின் வாக்குவங்கி அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மேற்குவங்கத்தில் பா.ஜ.க மிக வேகமாக வளர்ந்துவருவகிறது. அந்த மாநிலத்தில், 18 மக்களவை உறுப்பினர்களையும், 76 சட்டமன்ற உறுப்பினர்களையும் பாஜக தன்வசம் வைத்திருக்கிறது. எனவே, பா.ஜ.க அங்கு விரைவில் புதிய அத்தியாயம் படைக்கும்" எனத் தெரிவித்தார்.

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

தீர்மானம்:

இறுதியாக, பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைப்பதும், ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தி ஆட்சியமைக்க வழிசெய்வது தொடர்பாகவும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உறுதியாக பாஜக-வை வெற்றிபெறச் செய்வோம் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

வருகின்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது, 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிக முக்கியமான ஒன்றாக பாஜக-வுக்கு அமையும். எனவே, இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால், சுதாரித்துக்கொண்ட பாஜக கட்டாயம் இனிவரும் தேர்தல்களில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பாஜக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு