அரசியல்
அலசல்
Published:Updated:

நட்டா பற்றவைத்த நெருப்பு... சூடு பறந்த அரசியல் களம்!

ஜே.பி.நட்டா, சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜே.பி.நட்டா, சு.வெங்கடேசன்

மற்ற எய்ம்ஸ்களுக்கு தன் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கிய மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பானிடம் கடன் வாங்குவது ஏன்

`அமித் ஷா அளவுக்கு இன்றைய பா.ஜ.க தலைவர் நட்டாவின் தமிழக வருகை பரபரப்பாகப் பேசப்படவில்லையே...’ என்ற பா.ஜ.க-வினரின் மனக்குறை நீங்கியிருக்கிறது. ‘‘தி.மு.க-வில் படித்த தலைவர்கள் யாரும் இல்லை’’, ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன’’ என ஜே.பி.நட்டா அடுத்தடுத்து பற்றவைக்க... இது குறித்த வாத, பிரதிவாதங்களால் தமிழக அரசியல் களமே அனலடித்துவருகிறது!

‘`இரண்டு நாடுகளில் மூன்று பல்கலைக்கழகங்களில் நான்கு வெவ்வேறு படிப்புகளில் சர்வதேச தரத்தில் பல தேர்வுகளை எழுதி நான்கு பட்டங்கள் பெற்ற எனக்குக் கல்வித்தகுதி இல்லை என ஜே.பி.நட்டா கூறியுள்ளார்’’ என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ட்விட்டரில் பதிலடி கொடுக்க... எம்.பி-க்கள் சு.வெங்கடேசனும் மாணிக்கம் தாகூரும், ‘95 சதவிகிதம் பணிகள் முடிந்துவிட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணச் செல்கிறோம்’ எனப் பொதுமக்களுக்கும் ஊடகத்தினருக்கும் அழைப்பு விடுத்து, வெட்டவெளியாக இருக்கும் எய்ம்ஸ் அமைவிடத்தைச் சுற்றிக்காட்டியது டிரெண்டிங் ஆனது. “நான் சொன்னதை எம்.பி-க்கள் தவறாகப் புரிந்துகொண்டு பிரசாரம் செய்கின்றனர். 95 சதவிகிதம் நிதி, ஆரம்ப கட்டமைப்பு பற்றித்தான் சொன்னேன். பணிகள் முடிந்ததாகக் கூறவில்லை” என்று ஜே.பி.நட்டாவே விளக்கம் அளித்தும் இந்தப் பிரச்னை ஓயவில்லை.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி சு.வெங்கடேசனிடம் இது குறித்துப் பேசியபோது, ‘‘எய்ம்ஸ் திட்ட மதிப்பீட்டில், தன்னுடைய பங்களிப்பான 10 சதவிகித நிதி ஒதுக்கீட்டுக்கு ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால்தான் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. இதைப் பற்றி மதுரை மக்கள் கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்பதால்தான் இப்படியொரு பொய்யை நட்டா கூறியிருக்கிறார்’’ என்றார்.

மாணிக்கம் தாகூரிடம் கேட்டபோது, ‘‘மற்ற எய்ம்ஸ்களுக்கு தன் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கிய மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பானிடம் கடன் வாங்குவது ஏன்... இது பாரபட்சமானது’’ என்றார்.

நட்டா பற்றவைத்த நெருப்பு... சூடு பறந்த அரசியல் களம்!

இதையடுத்து எம்.பி-க்களின் புகார்களுக்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசனிடம் பேசியபோது, “எய்ம்ஸ் திட்ட மதிப்பீட்டுக்கு 134 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கியதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதைத்தான் அன்று நட்டா பேசினார். எனவே ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தவறு. அதுபோல், மற்ற மாநில எய்ம்ஸெல்லாம் மிகச் சிறிய திட்டங்கள். மதுரை எய்ம்ஸுக்கான பட்ஜெட் பெரியது. அதனால்தான் மத்திய அரசு முழு நிதி ஒதுக்காமல், ஜப்பான் நிதி நிறுவனத்திடம் நிதி பெறுகிறார்கள். `புல் புல் பறவை மூலம் கட்டடம் கட்டப்பட்டதா?’ என்று சு.வெங்கடேசன் கிண்டல் செய்கிறார். ஆனால், இவர்கள் கால்பட்ட இடத்தில் புல்கூட முளைக்காது” என்றார் கோபமாக.

2024 தேர்தலுக்குள்ளாவது எய்ம்ஸ் வருமா?!