Published:Updated:

‘அடுத்த இலக்கு தெலங்கானா!’ - கே.சி.ஆர் கோட்டைக்குள் நுழையுமா பா.ஜ.க?

கே.சந்திரசேகர ராவ்
பிரீமியம் ஸ்டோரி
கே.சந்திரசேகர ராவ்

ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிரான வியூகங்களுடன் பா.ஜ.க பரிவாரம் களமிறங்கியிருப்பதால், அந்த மாநிலத்தின் அரசியல் களம் பரபர காட்சிகளைச் சந்தித்துவருகிறது.

‘அடுத்த இலக்கு தெலங்கானா!’ - கே.சி.ஆர் கோட்டைக்குள் நுழையுமா பா.ஜ.க?

ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிரான வியூகங்களுடன் பா.ஜ.க பரிவாரம் களமிறங்கியிருப்பதால், அந்த மாநிலத்தின் அரசியல் களம் பரபர காட்சிகளைச் சந்தித்துவருகிறது.

Published:Updated:
கே.சந்திரசேகர ராவ்
பிரீமியம் ஸ்டோரி
கே.சந்திரசேகர ராவ்

‘வட மாநிலங்களை அடுத்து, வடகிழக்கிலும் காலூன்றியாகிவிட்டது. அடுத்த இலக்கு தென் மாநிலங்கள்தான்’ என்று சூளுரைக்கும் பா.ஜ.க தலைவர்கள், தற்போது தெலங்கானாவை முற்றுகையிட்டிருக்கிறார்கள். மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் பா.ஜ.க-வால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தெலங்கானா சட்டமன்றத்தைக் கைப்பற்றிவிட முடியுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது!

தெலங்கானா மாநிலம் உருவாவதற்குக் காரணமாக இருந்த ‘கே.சி.ஆர்’ என்றழைக்கப்படும் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்), அங்கு நடைபெற்ற முதல் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் பெரும் வெற்றியைப் பெற்றது. மக்கள் மத்தியில் கே.சி.ஆருக்கு இருந்த செல்வாக்கும், அங்கு வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததும் முந்தைய வெற்றிகளுக்கு முக்கியக் காரணிகள். ஆனால், ‘அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மூன்றாவது முறையாக கே.சி.ஆரால் எளிதாக வெற்றிபெற்றுவிட முடியுமா?’ என்ற கேள்விதான் தெலங்கானாவில் அனலடிக்கிறது.

‘அடுத்த இலக்கு தெலங்கானா!’ - கே.சி.ஆர் கோட்டைக்குள் நுழையுமா பா.ஜ.க?

பிரதமர் வருகை... பேனர் யுத்தம்!

ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிரான வியூகங்களுடன் பா.ஜ.க பரிவாரம் களமிறங்கியிருப்பதால், அந்த மாநிலத்தின் அரசியல் களம் பரபர காட்சிகளைச் சந்தித்துவருகிறது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஜூலை 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரதமர் மோடி வந்திறங்கிய பேகும்பேட் விமான நிலையம் முதல் பா.ஜ.க கூட்டம் நடைபெற்ற ‘ஹைதராபாத் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர்’ வரை மோடி புகைப்படங்களுடன்கூடிய பேனர்களும், பா.ஜ.க கொடிகளும் வரிசைகட்டியிருந்தன. அவற்றுக்கு மத்தியில், மத்திய அரசுக்கு எதிராக டி.ஆர்.எஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களும் ஏராளமாகத் தென்பட்டன. “அந்தக் காட்சி, பா.ஜ.க-வுக்கும் டி.ஆர்.எஸ்-ஸுக்கும் இடையேயான அடுத்த சட்டமன்றத் தேர்தல் போர் தொடங்கிவிட்டதைப் பறைசாற்றுவதுபோல இருந்தது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஒரு மாநிலத்துக்கு வருகை தரும் பிரதமரை, அந்த மாநிலத்தின் முதல்வர் நேரில் சென்று வரவேற்பது மரபு. ஆனால் ஹைதராபாத் சென்ற பிரதமரை வரவேற்க தான் செல்லாமல், மாநிலக் கால்நடைத்துறை அமைச்சரை முதல்வர் கே.சி.ஆர் அனுப்பிவைத்தார். இது முதன்முறை அல்ல. கடந்த ஐந்து மாதங்களில் மூன்றாவதாக நடைபெற்ற சம்பவம் இது. கொரோனா பரவல் தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை பிரதமர் கூட்டியபோதும், அதில் கே.சி.ஆர் பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டும் அதே அணுகுமுறையைத்தான் இவரும் கடைப்பிடிக்கிறார். “2020-ம் ஆண்டு, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு பிரதமர் வந்தபோது முதல்வர் கே.சி.ஆர் அழைக்கப்படவில்லை. அதற்கு பதிலடிதான் இது...” என்கிறார்கள் டி.ஆர்.எஸ் கட்சியினர். ஆனால், உண்மை அது மட்டுமே அல்ல.

மூன்று ‘N’களும்... மும்முரமாகும் பா.ஜ.க-வும்!

மொத்தம் 119 எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட தெலங்கானா சட்டமன்றத்தில், டி.ஆர்.எஸ் 103 எம்.எல்.ஏ-க்களையும், ஒவைசியின் கட்சி ஏழு எம்.எல்.ஏ-க்களையும், காங்கிரஸ் ஆறு எம்.எல்.ஏ-க்களையும்கொண்டிருக்கின்றன. அடுத்ததாக, மூன்று எம்.எல்.ஏ-க்களுடன் மூன்றாவது எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க., அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க படு மும்முரமாக வேலையை ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி, பா.ஜ.க-வுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. 17 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், நான்கு தொகுதிகளை அப்போது பா.ஜ.க கைப்பற்றியது. அதற்கடுத்து, 2020 நவம்பரில் நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரடியாகப் பிரசாரத்தில் ஈடுபட்டார். 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில், 49 வார்டுகளை பா.ஜ.க கைப்பற்றியது. ஆனால், அந்தத் தேர்தலில் முதல்வரின் மகனும், டி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவரும், மாநில அமைச்சருமான கே.டி.ராமா ராவ் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டும்கூட, 56 இடங்களை மட்டுமே டி.ஆர்.எஸ்-ஸால் பிடிக்க முடிந்தது.

‘அடுத்த இலக்கு தெலங்கானா!’ - கே.சி.ஆர் கோட்டைக்குள் நுழையுமா பா.ஜ.க?

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல வியூகங்களுடன் பா.ஜ.க களமிறங்கியிருக்கிறது. மக்கள் மத்தியில் இந்துத்துவா அரசியலை ஆழமாகக் கொண்டுசெல்வது, ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்னைகளைக் கையிலெடுப்பது என்பதுதான் பா.ஜ.க-வின் வியூகம். நீண்டகாலமாக முதல்வர் சந்திரசேகர ராவ் சொல்லிவந்த ‘மூன்று என் (N)’ என்கிற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நிதுலு, நீலு, நியமகலு (நிதி, நீர், வேலை) என்பதுதான் அந்த வாக்குறுதி. ஆட்சியில் அமர்ந்து ஒன்பதாவது ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. மகன் கே.டி.ராமா ராவ், மகள் கவிதா ஆகியோரின் ஆதிக்கம் ஆட்சியில் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், ‘குடும்ப ஆட்சி’ என்ற குற்றச்சாட்டையும் பா.ஜ.க முக்கிய ஆயுதமாகக் கையிலெடுக்கிறது.

மூன்று எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்திருக்கும் ஒரு கட்சியால், மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட முடியுமா என்ற கேள்வி எழலாம். ஆனால், ஏதேதோ வித்தைகளைச் செய்து பல மாநிலங்களில் இதை ஏற்கெனவே செய்து முடித்த கட்சிதான் பா.ஜ.க. வலுவான வாக்குவங்கி இருந்தபோதும், கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ‘குடும்ப அரசியல்’ என்ற விமர்சனம், பா.ஜ.க அடுத்தடுத்து முன்னெடுக்கவிருக்கும் வியூங்கள் என இந்த முறை கே.சி.ஆர் கட்சிக்குப் பெரிய சவால் இருக்கப்போகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதைப் பொறுத்து, தெலங்கானா சட்டமன்றம் யாருக்கு என்பது முடிவாகும்!