Published:Updated:

மோடி பயணம் ரத்து: `கூட்டமில்லை' - காங்கிரஸ்; `உயிருக்கு அச்சுறுத்தல்' - பாஜக - அரசியல் செய்வது யார்?

மோடி, பஞ்சாப் விவசாயிகள்
News
மோடி, பஞ்சாப் விவசாயிகள்

பஞ்சாப்பில் மோடி பயணம் ரத்து - பா.ஜ.க-வின் புதிய அரசியல் உத்தியா... இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது பா.ஜ.க-வா... காங்கிரஸா? - விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை!

ஜனவரி 5-ம் தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கிவைப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, விவசாயிகள் சிலர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் வாகனமும், அவரது பாதுகாப்புப் படை வாகனங்களும் சுமார் 20 நிமிடங்கள் ஒரு மேம்பாலத்தின்மீது நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர், பஞ்சாப்பில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு, அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்துக்குத் திரும்பிச் சென்று டெல்லிக்குப் புறப்பட்டார் மோடி.

விமான நிலையத்தில் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம், ``விமான நிலையம் வரை என்னால் உயிருடன் திரும்பிவர முடிந்தது. இதற்காக உங்கள் முதல்வரிடம் நன்றி சொன்னேன் என்று சொல்லிவிடுங்கள்'' என்று பிரதமர் மோடி கூறிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
மோடி
மோடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாற்றப்பட்ட பயணத் திட்டம்!

பஞ்சாப்பில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காகவும், அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும் நேற்று (ஜன.5) பதிண்டா விமான நிலையத்துக்கு வந்திருந்தார் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாகத் தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வதுதான் திட்டம். ஆனால், மோசமான வானிலை காரணமாக, சாலை வழியாகப் பயணம் மேற்கொள்வது எனத் திட்டத்தை மாற்றியமைத்தனர் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள்.

சாலை மார்க்கமாகச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விவசாயிகள் சிலர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாதி வழியிலேயே மோடியின் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் ஒரு மேம்பாலத்தின்மீது பிரதமர் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் நின்று பிரதமருக்குப் பாதுகாப்பு கொடுத்தனர் சிறப்புப் பாதுகாப்புப் படையினர். பின்னர், நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, பதிண்டா விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து டெல்லி திரும்பினார் மோடி.

உள்துறை அமைச்சகத்தின் கண்டனம்!

இதையடுத்து, பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக, பஞ்சாப் அரசைக் கடுமையாகக் கண்டித்தது மத்திய உள்துறை அமைச்சகம். ``நாட்டின் பிரதமர் செல்லும் பாதையில், இப்படி விவசாயிகளைப் போராட அனுமதித்திருப்பது அவரது பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல். பிரதமரின் பயணத்திட்டம் குறித்து முன்கூட்டியே பஞ்சாப் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும், பிரதமரின் பாதுகாப்புகளில் பெரும் குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இதற்கு பஞ்சாப் அரசு பொறுப்பேற்க வேண்டும். இது குறித்து விரிவான அறிக்கையைப் பஞ்சாப் அரசு சமர்ப்பிக்க வேண்டும். இதற்குக் காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

தொடர்ந்து, இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த பா.ஜ.க அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். ``பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது காங்கிரஸ்'' என்று கொதித்தெழுந்துவிட்டனர் பா.ஜ.க-வினர். பஞ்சாப்பில் தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால், இந்த விஷயம் அரசியலாக்கப்பட்டுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சாப் முதல்வரின் விளக்கம்!

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ``இந்தச் சம்பவத்துக்கு வருந்துகிறோம். பிரதமரின் திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பஞ்சாப் மண்ணில் எப்போதும் பிரதமரை வரவேற்கிறோம். எதிர்பாராதவிதமாகச் சாலையில் சிலர் மறியலில் ஈடுபட்டனர். இதற்கும், பிரதமர் பாதுகாப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்த விவகாரத்தைப் பாதுகாப்பு அச்சுறுத்தலோடு இணைத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். சாலைமறியல் செய்யப்பட்ட செய்தி அறிந்து, பிரதமரேதான் திரும்பிச் செல்ல முடிவு செய்திருக்கிறார். பஞ்சாப் அரசுக்கு இதில் எந்தப் பங்குமில்லை. இனிவரும் காலங்களில் நல்ல ஏற்பாடுகளைச் செய்வோம். பிரதமர் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கிறேன்'' என்றிருக்கிறார்.

டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள், பிரதமரின் பாதுகாப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுத்தினார்களா? இதில் பாதுகாப்பு பிரச்னை எதுவுமேயில்லை.
சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் முதல்வர்
சரண்ஜித் சிங் சன்னி - பஞ்சாப் முதல்வர்
சரண்ஜித் சிங் சன்னி - பஞ்சாப் முதல்வர்

பாகிஸ்தான் எல்லை என்பதால் அச்சம்?

காங்கிரஸ் ஆதரவாளர்களோ, ``டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில்கூட பிரதமரின் வாகனம் தடைப்பட்டு பாதியிலேயே நின்றிருக்கிறது. அப்போதெல்லாம் தனது காரிலேயே காத்திருந்திருக்கிறார் பிரதமர். ஆனால் அந்தச் சமயத்தில், `பிரதமரின் உயிருக்கு ஆபத்து' என்று யாரும் சொல்லவில்லை. தேர்தல் நேரம் என்பதால், பஞ்சாப்பில் அரசியல் செய்யவே இப்படிச் சொல்கிறார்கள்'' என்று கூறியிருக்கின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் பா.ஜ.க ஆதரவாளர்கள், ``பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது. காலிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுதலும் அங்கிருக்கிறது. அதனால்தான் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று சொல்கிறோம்'' என்கிறார்கள்.

பொதுக்கூட்டத்துக்குக் கூட்டமேயில்லை!

இதற்கிடையில், பஞ்சாப் அமைச்சர் ராஜ் குமார் வெர்கா, ``பிரதமரின் பாதுகாப்பில் எந்தக் குறைபாடுமில்லை. பா.ஜ.க பொதுக்கூட்டத்துக்கு ஆட்களே வரவில்லை. அதை அறிந்த பிரதமர், தானே திரும்பிச் சென்றுவிட்டார்'' என்று பேசியிருக்கிறார். உள்ளூர் மீடியா ஒன்றுக்குப் பேட்டியளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பின்வருமாறு உள்ளவற்றைச் சொல்லியிருந்தார்.

பிரதமர் பொதுக்கூட்டத்துக்காக 70,000 இருக்கைகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால், 700 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் முதல்வர்

விவசாயிகள் சொல்வது என்ன?

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூரைச் சுற்றி பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. மோடி வந்த பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் சிலர், ``பிரதமர் கூட்டத்துக்குச் செல்லவிருந்த பா.ஜ.க-வினரை வழிமறிக்கவே போராட்டம் செய்தோம். பிரதமர் இந்த வழியில்தான் வருகிறார் என்று தெரிந்திருந்தால் சாலைமறியலே செய்திருக்க மாட்டோம்'' என்று கூறியிருக்கிறார்கள்.

பஞ்சாப் விவசாயிகள்
பஞ்சாப் விவசாயிகள்
Twitter/@HARPALSSANGHA

விவசாயச் சங்கங்களுள் ஒன்றான கிசான் ஏக்தா மோர்ச்சா, ``மோடியின் பேரணியில் பங்கேற்கக் குறைவான எண்ணிக்கையிலேயே கூட்டம் வந்திருக்கிறது. வந்தவர்களும் கட்டாயத்தின் பேரிலேயே வந்திருக்கிறார்கள். பஞ்சாப் மக்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கு இருந்த கடும் எதிர்ப்புகள் காரணமாகவே திட்டத்தை ரத்துசெய்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார் மோடி. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் என நாடகமாடுகிறார்கள்'' என்று சொல்லியிருக்கிறது.

காங்கிரஸ் Vs பா.ஜ.க!

பஞ்சாப் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ``பஞ்சாப்பில் பா.ஜ.க எப்போதுமே ஜீரோதான் என்பது இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு விஷயம். அதுவும் விவசாயிகள் போராட்டத்துக்குப் பின்னர், அந்தக் கட்சிக்கு இருந்த கொஞ்சநஞ்ச செல்வாக்கும் ஒழிந்துவிட்டது. இந்தத் தேர்தலில், பிரசாரம் செய்தால் வாக்குகளைப் பெற முடியாது என்பது பா.ஜ.க தலைமைக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் டிராமா செய்து வாக்குகளைப் பெற முயன்றிருக்கிறார்கள். `பஞ்சாபில் பிரதமரின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது' என்று சொன்னால், பரிதாபத்தில் வாக்குகள் கிடைக்கும் என்று பா.ஜ.க நினைத்துக்கொண்டிருக்கிறது. பஞ்சாப் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. எங்கள் மாநிலம் பாகிஸ்தான் எல்லையிலிருந்தாலும், எப்போதும் பாதுகாப்பான மாநிலமாகவே இருந்துவருகிறது. அதனால், பா.ஜ.க-வின் நாடகங்கள் இங்கு ஒருபோதும் பலிக்காது'' என்கின்றனர்.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க-வினரோ, ``நாட்டின் பிரதமர் ஏன் நாடகமாட வேண்டும்? பஞ்சாப்பிலும் எங்களுக்கு நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நாடகமாடுவது காங்கிரஸ்தான்'' என்கிறார்கள்.

அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

இது குறித்துப் பேசும் பஞ்சாப் அரசியலை உற்று நோக்கும் சிலர், ``நாட்டிலேயே பிரதமருக்கு மட்டுமெனத் தனியாக இயங்குவதுதான் சிறப்பு பாதுகாப்புப் படை (SPG). பிரதமர் ஒரு இடத்துக்குச் செல்கிறார் என்றால், அந்த இடங்களில் மாநில காவல்துறை பாதுகாப்பு ஒத்திகை பார்க்கும். அதைப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை ஆய்வு செய்யும். ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கான மாற்றுப் பாதைகள் குறித்த திட்டமும் சிறப்புப் பாதுகாப்புப் படையிடம் இருக்கும். சாலை மார்க்கமாகச் செல்வதற்கு இரண்டு, மூன்று பாதைகளைத் தேர்ந்தெடுத்துவைத்திருப்பார்கள் பாதுகாப்புப் படை அதிகாரிகள். அப்படியிருக்கையில், சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்யும் விஷயம் எப்படி முன்கூட்டியே சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல்போனது என்று தெரியவில்லை.

ஒருவழியில் செல்ல முடியவில்லையென்றால், வேறு வழியாகச் செல்ல ஏன் அவர்கள் முற்படவில்லை என்பதும் தெரியவில்லை. ஒருவேளை வேறு வழியிலும் இதுபோல இடர்ப்பாடுகள் ஏற்படலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இந்த விவகாரத்தில் மாநிலக் காவல்துறையை மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம் குறைசொல்வது சரியல்ல. இதில் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் தவறும் அடங்கியிருக்கிறது. பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதுதான் அவர்களின் தலையாய கடமை. அவர்களும் இந்த விஷயத்தில் கோட்டைவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பா.ஜ.க
பா.ஜ.க

இந்த விவகாரத்தில் தவறு யார் பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், `பஞ்சாப்பில், பா.ஜ.க-வுக்கு இடமில்லை' என்ற நிலையே நீடித்துவருவதால், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து அரசியல் செய்துவருகிறது பா.ஜ.க என்றுதான் தோன்றுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை பஞ்சாப்பில் ஏற்கெனவே அது உட்கட்சிப்பூசல்களால் திண்டாடிவருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே விவசாயிகளை பிரதமர் செல்லும் சாலையில் போராட அனுமதிப்பதால், அவர்களுக்கு எந்த வகையிலும் மைலேஜ் கிடைக்கப்போவதில்லை. அது அவர்களுக்கு மேலும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்பதால், காங்கிரஸ் இப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது'' என்கிறார்கள்.