Published:Updated:

வாரணாசியில் பாரதியார் நினைவிடம்; அரசியல் செய்வது யார்? - திமுக-வா... பாஜக-வா?!

பாரதியார் நினைவிடம்

சில தினங்களுக்கு முன்பு பாரதியார் பிறந்தநாளன்று, தமிழக முதலமைச்சரால் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு, ஓர் இடத்தில் இரு மாநில அரசுகளால் நினைவிடம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை.

வாரணாசியில் பாரதியார் நினைவிடம்; அரசியல் செய்வது யார்? - திமுக-வா... பாஜக-வா?!

சில தினங்களுக்கு முன்பு பாரதியார் பிறந்தநாளன்று, தமிழக முதலமைச்சரால் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு, ஓர் இடத்தில் இரு மாநில அரசுகளால் நினைவிடம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை.

Published:Updated:
பாரதியார் நினைவிடம்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசிக்கும் தமிழுக்குமான வரலாற்றை மீட்டெடுக்க `காசி தமிழ்ச் சங்கமம்' நடந்துவருகிறது. இதில் தமிழ் மொழிக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் தமிழக அரசையோ, தமிழ் அறிஞர்களையோ மத்திய அரசு அழைக்கவில்லை என விமர்சனம் எழுந்து, பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, தமிழக அரசுக்கு அழைப்புவிடுத்ததாகக் கூறியது. அதையடுத்து, அந்த அழைப்புக் கடிதத்தை வெளியிடுமாறு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இப்படியாக ஆரம்பம் முதலே `காசி தமிழ்ச் சங்கமம்' விவகாரத்தில் சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பாரதியார் நினைவிடம் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது.

 'காசி தமிழ் சங்கமம்'   நிகழ்ச்சி
'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி

காசியில் குடியேறியிருந்த தன்னுடைய அத்தை வீட்டில் சிறு வயதில் நான்கு ஆண்டுகள் பாரதியார் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் வசித்த வீட்டை நினைவிடமாக மாற்ற அரசுகள் முடிவு செய்தன. அதன்படி, உத்தரப்பிரதேச அரசு ரூ.6 கோடியை இதற்காக ஒதுக்கியது. இதில் பாரதியார் வாழ்ந்த வீட்டை மிக பிரமாண்டமான நினைவிடமாக மாற்றவும், ஒலி, ஒளி வடிவில் பாரதியார் பாடல்களைத் திரையிடுவது, அவரின் உருவம் டிஜிட்டல் வடிவில் உலா வருவது என இதில் பல சிறப்பம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பதற்கு முன்னரே தமிழக அரசு வாரணாசியிலுள்ள வீட்டை நினைவிடமாக மாற்ற கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இதற்கு, தமிழக அரசு சார்பில் 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பாரதியாருக்கு மார்பளவு சிலையும், நூலகமும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு பாரதியார் பிறந்தநாளன்று, தமிழக முதலமைச்சரால் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு, ஓர் இடத்தில் இரு மாநில அரசுகளால் நினைவிடம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை. ஆனால் இரு அரசுகள் ஒன்றிணைந்து செய்யாமல், தனித்துப் பணிகளை மேற்கொண்டுவருவது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, `மத்திய அரசு சார்பாக நினைவிடம் அமைக்கத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, அவசரகதியில் தமிழக அரசு இதைத் திறந்திருக்கிறது' என பா.ஜ.க குற்றச்சாட்டை முன்வைத்தது.

பாரதியார் சிலை திறப்பு
பாரதியார் சிலை திறப்பு
ட்விட்டர்

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரூ.6 கோடி செலவில் 5,000 சதுர அடியில் பாரதியாருக்கு நினைவிடம் அமைப்பதாக அறிவித்தார். இதை உத்தரப்பிரதேச அரசும் உறுதி செய்தது. ஆனால், 77 ஆண்டுகளாக வாரணாசியில் பாரதியார் நினைவிடம் அமைப்பது குறித்து கவலைப்படாத தமிழக அரசு, திடீரென நினைவிடம் அமைத்திருக்கிறது. அதுவும் வீட்டின் ஒரு பகுதியில் வெறும் 100 சதுரடியில் ஒரு மார்பளவு சிலை மற்றும் சில புத்தகங்களை வைத்துவிட்டு, அதை நினைவிடம் என நாடகமாடிவருகிறது. மேலும், உத்தரப்பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில், அனுமதி பெறாமல் நினைவிடத்தை தமிழக அரசால் எப்படி அமைக்க முடியும்?

காசி தமிழ்ச் சங்கமம் நடத்தி தமிழக மக்களிடையே பா.ஜ.க நற்பெயரைப் பெற்றிருக்கிறது. இதைப் பொறுக்க முடியாத தமிழக அரசு அச்சத்தால், அவசரமாக இந்த நினைவிடத்தை அமைத்திருக்கிறது. பாரதியாருக்கு நினைவிடம் அமைக்க உத்தரப்பிரதேச அரசு முன்வரும்போது, அவர்களுடன் இணைந்து பணியாற்றாமல் தனித்துச் செயல்படுகிறார்கள். இது தமிழ் மொழிக்குத் தங்களைத் தாண்டி வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்னும் அவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.

நாராயணன் திருப்பதி, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர்
நாராயணன் திருப்பதி, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர்

பா.ஜ.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவா ஜெயராஜிடம் பேசினோம். ``தமிழ் நாட்டில் முதன்முறையாக தி.மு.க சார்பாக 'பாரதியார் சிலை' அமைக்கப்பட்டது. அப்போது பா.ஜ.க என்னும் கட்சியே இந்தியாவில் இல்லை. அதேபோல் தமிழகத்தில் போட்டியிட்டு பல இடங்களில் டெபாசிட் இழந்த பா.ஜ.க., பாரதியாரை வைத்து அரசியல் செய்ய நினைக்கலாம். ஆனால் நாங்கள் அவர்கள் அமைப்பதை எதிர்த்து அரசியல் செய்யவில்லை. சொல்லப்போனால், தமிழக அரசு அங்கு நினைவிடம் அமைக்க உத்தரவு வெளிவந்த பிறகுதான் மத்திய அரசு நினைவிடம் அமைப்பதாக அறிவித்தது. எனவே, இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. தமிழக அரசால் பல ஆண்டுகளாக வாரணாசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லம் பராமரிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்துக்கு நாங்கள் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்... புனரமைக்கப்படும் கட்டடத்துக்கு அனுமதி வாங்கவேண்டிய அவசியமே இல்லையே?

சிவ ஜெயராஜ், தி.மு.க செய்தித் தொடர்பாளர்
சிவ ஜெயராஜ், தி.மு.க செய்தித் தொடர்பாளர்

இத்தனை ஆண்டுகளில் தமிழுக்காக தி.மு.க அரசு பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது. குறிப்பாக தமிழ் மொழிப் புலவர்களுக்கு அதிகம் சிலை வைத்தது தி.மு.க அரசுதான். இரண்டு முறை உலகத் தமிழ் மாநாடு நடத்தியதும் தி.மு.க-தான். தமிழ் மொழியை நவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக தி.மு.க ஆட்சியில், `தமிழ் இணைய வழி மாநாடு' நடத்தப்பட்டது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக என்ன செய்தது... தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.7 கோடி மட்டுமே நிதி ஒதுக்கிவிட்டு, சம்ஸ்கிருதம் வளர்க்க ரூ.200 கோடியை ஒதுக்கியது. எனவே, தமிழ் மொழியில் வணக்கம் சொல்வதாலோ, பாரதியாருக்கு நினைவிடம் அமைப்பதாலோ தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஆகாது. மிகப் பழைமையான தமிழ் மொழிக்கு எந்த வகையிலும் நன்மை செய்யாத மத்திய அரசை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்றார்.