Published:Updated:

பாஜக மத்திய தேர்தல் குழுவில் இடம்... `வளரும்’ வானதி சீனிவாசன் சொல்வதென்ன?!

வானதி சீனிவாசன்

பாஜக மத்திய தேர்தல் குழு, ஆட்சி மன்ற குழு மாற்றியமைக்கப்பட்ட நிலையில் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

பாஜக மத்திய தேர்தல் குழுவில் இடம்... `வளரும்’ வானதி சீனிவாசன் சொல்வதென்ன?!

பாஜக மத்திய தேர்தல் குழு, ஆட்சி மன்ற குழு மாற்றியமைக்கப்பட்ட நிலையில் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Published:Updated:
வானதி சீனிவாசன்

பாஜக-வில் அதிகபட்ச அதிகாரத்தை கொண்ட அமைப்பாக ஆட்சிமன்றக் குழு திகழ்கிறது. கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களை தேர்வுசெய்வது, கட்சி அளவிலான முக்கிய முடிவுகளை எடுப்பது என அனைத்திற்கும் பொறுப்பு வகிக்கிறது. அந்த வகையில் பாஜக-வின் ஆட்சிமன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் குழுவில் நீடிக்கின்றனர். இவர்களை தவிர கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், பாஜக தேசிய ஓபிசி மோர்சா தலைவர் கே.லட்சுமண், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி இக்பால் சிங் லால்புரா, தேசியச் செயலாளர் சுதா யாதவ் மற்றும் மக்களவை உறுப்பினர் சத்யநாராயண் ஜாதியா ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாறுதலை சமூக ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் அதிக பிரதிநிதித்துவம் உடையதாக மாற்றவே இந்தப் புதிய நியமனங்களை மேற்கொண்டுள்ளதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. புதிதாக கட்சியில் சேக்கப்பட்டவர்களில் லால்புரா சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். இவர்தான் இச்சமூகத்திலிருந்து பாஜக நாடாளுமன்ற குழுவில் நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவர்.

பாஜக மத்திய தேர்தல் குழுவில் இடம்... `வளரும்’ வானதி சீனிவாசன் சொல்வதென்ன?!

இதில் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானும் நீக்கப்பட்டுள்ளனர். மோடி அரசில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக அறியப்படும் நிதின் கட்கரி, கட்சியின் தேசிய தலைவராகவும் இருந்தவர். வழக்கமாக முன்னாள் தலைவர்கள் அனைவரும் ஆட்சிமன்றக் குழுவில் இடம் பெறுவர். இந்நிலையில், கட்கரி புறக்கணிக்கப்பட்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ``கட்சி 2024 மக்களவை தேர்தலுக்கு ஆயத்தமாகி இருப்பதை இது காட்டுகிறது” என தெரிவிக்கும் பாஜக நிர்வாகி, அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் இருந்து நிதின் கட்கரி விடுவிக்கப்பட்டது குறித்து கூறிகையில், “அவரின் பொதுக்கருத்துகளை எதிர்க்கட்சிகள் விமர்சனமாக முன்வைத்து வந்துள்ள நிலையில் இது நடந்துள்ளது” என்றார். இதற்கடுத்து அண்மையில் நடந்த உ.பி தேர்தலில் பாஜக அமோக வெற்றிக்கு வித்திட்ட யோகி ஆதித்யநாத்திற்கு முக்கியப் பதவி வழங்கி அலங்கரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆட்சிமன்றக் குழுவைப் போலவே, பாஜக-வின் மத்திய தேர்தல் குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜே.பி. நட்டா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, மகராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தேசிய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ், ஓம் மதூர் மற்றும் பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன், ஜூவல் ஓரன் ஆகியோர் இந்த குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவான், அகில் பாரதீய வித்தியார்த்தி பரிஷத்தில் (ABVP) தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். அந்த அமைப்பில் மாநில துணை செயலாளராக பதவி பெற்று தொடர்ந்து இயங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர், மாநில செயலாளர், மாநில துணைத் தலைவர், மாநில பொதுச்செயலாளர், மகளிரணி தேசிய தலைவர் என ஒவ்வொரு பொறுப்பாய் வளர்ந்து இன்று பாஜக-வில் அதிகபட்ச அதிகாரத்தை கொண்ட அமைப்புகளில் ஒன்றான தேர்தல் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.

இது குறித்து வானதி சீனிவாசன், ``இந்தியா முழுமைக்குமான வளர்ச்சி, அனைத்து தரப்பினருக்குமான வாய்ப்பு என்பதைதான் தேர்தல் குழுவும், நாடாளுமன்ற குழுவும் எதிரொலிக்கிறது. தேர்தல் குழுவில் மூத்த தலைவர்களும் இருக்கிறார்கள். அடுத்த கட்ட தலைவர்களுக்கும் வாய்ப்பிருக்கிறது. சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்கள், மகளிர், அனைத்து சமூகத்தினர், வடக்கு, தெற்கு, வடக்கிழக்கு என எல்லா தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மூத்த தலைவர்களோடு நேரடியாக பணிப்புரியக்கூடிய அனுபவமும், கற்று கொள்வதற்கான பெரிய வாய்ப்பும் தேர்தல் குழுவில் தேர்ந்தெடுத்ததன் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி அரசியலில் ஒரு விஷயம் முடிவு செய்யப்படும் போது என்னென்ன பார்க்கப்படுகிறது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்குண்டான வேலைபாட்டின் தேர்வு எனும் போது கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதையெல்லாம் பார்த்து தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. பயிற்சி கொடுக்க கூடிய இடமாகத்தான் இதை பார்க்கிறேன்.

தமிழகத்தில் இருக்க கூடிய பெண்களுக்கு, அதிலும் அரசியலில் ஈடுப்படும் பெண்களுக்கு இதுபோல் கட்சி கொடுக்கின்ற வாய்ப்புகளால், பாஜக மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தும். அரசியல் மீதான அவர்கள் பயத்தை போக்கும். ஏனென்றால் அரசியல் பின்புலம் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்தும் கூட வருகிறவர்கள், ஒரு தேசிய கட்சியின் பெரிய பொறுப்புக்கு வரும் போது சாதாரண பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும். ஏற்கனவே பிரதமர் மோடி பெண்களுக்கான அதிகாரத்தை கொடுக்க வேண்டுமென்றுதான் பேசி கொண்டிருக்கிறார். 75-வது சுதந்திர தின விழாவில் ‘ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் பெண்களுக்கு முக்கியத்துவம், மரியாதை கொடுப்பதை அணுக வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். ஆகவே இது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நான் பணிவான விஷயமாக இதில் பார்ப்பது எந்த ஒரு பெண்ணும் அரசியலை தள்ளி வைத்து பார்க்க வேண்டாம். உங்களுக்குள் அரசியல் ஆர்வம் இருக்கிறது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இருந்தால் எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளி, வாய்ப்பு கொடுத்து, திறன்களை மேம்படுத்தி, பெண்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்க கூடிய கட்சியாக பாஜக இருக்கிறது என்பதுதான் உண்மை” என்றார்.