Published:Updated:

இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

சீனாவைச் சுற்றியுள்ள மங்கோலியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது இந்தியா.

இந்திய - நேபாள எல்லையில், இந்திய நிலப்பரப்புக்குள் 335 சதுர கிலோமீட்டர் பரப்புக்குச் சொந்தம் கோரும் வரைபடத்துக்கான சட்டத்திருத்தத்துக்கு ஜூன் 13-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது நேபாள நாடாளுமன்றம். அடுத்த இரு நாள்களில் இந்திய - சீன எல்லையில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்குள் கலவரம் வெடித்து, உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், `நேபாளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரிவரச் செய்யவில்லை’ என அந்நாட்டுப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒளிக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். இதில் இந்தியாவின் ‘ரா’வுக்குத் தொடர்பிருக்குமோ என்று சந்தேகிக்கிறது நேபாளம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`சீனா, நேபாளம் நாடுகளுடன் இந்தியாவின் மோதலுக்குப் பொருளாதார, பிராந்திய, எல்லைப் பிரச்னைகள் மட்டும் காரணங்கள் அல்ல; பா.ஜ.க-வின் ‘அகண்ட பாரதம்’ கனவும் ஒளிந்திருக்கிறது’ என்று இந்தப் பிரச்னையின் இன்னொரு கோணத்தை தொட்டுக் காட்டு கிறார்கள் உலக அரசியலை உற்று கவனிக்கும் ஆய்வாளர்கள். அதாவது, `இந்திய-சீன எல்லையில் இந்தியா சாலைகள் போடுவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றின் பின்னணியில் இந்துக்களின் புனிதத்தலமான கயிலாயத்தை சீனாவிடமிருந்து மீட்கும் பா.ஜ.க-வின் வியூகம் ஒளிந்திருக்கிறது’ என்கிறார்கள் அவர்கள். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரியும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா?

“உலகின் ஒரே இந்து நாடாக அறியப்பட்ட நேபாளம், 2008-ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு குடியரசாக மாறியது. அன்றிலிருந்து சீனாவின் மேலாதிக்கத்தின்கீழ்தான் நேபாளம் இருக்கிறது. தற்போது இந்திய யாத்ரீகர்கள் சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள கயிலாயத்துக்கு நேபாளத்தின் காத்மண்டு, இந்தியாவின் சிக்கிம், உத்தரகாண்ட் ஆகிய மூன்று வழிகளில் செல்ல முடியும்.

இவற்றில் நேபாளம், சிக்கிம் வழியாகப் பயணிக்க இரண்டு வாரங்கள் தேவை. அதுபோக 80 சதவிகிதம் சீனாவின் சாலையைத்தான் யாத்ரீகர்கள் பயன்படுத்த நேரிடும். உத்தரகாண்ட்டிலுள்ள லிபுலேக் (Lipulekh) கணவாய் வழியாக 12 நாள்கள் நடந்தால் கயிலாயத்தின் அடிவாரத்திலிருக்கும் மானசரோவர் ஏரிக்குச் செல்ல முடியும். இப்படி நடந்து செல்வதைத் தவிர்க்கவே இப்போது லிபுலேக் கணவாய் வரை 80 கிலோமீட்டருக்கு புதிய சாலையை அமைத்துள்ளது இந்தியா. கடந்த மே 8-ம் தேதி வீடியோ கான்ஃபிரன்ஸ் வழியாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தச் சாலையைத் திறந்துவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சாலை மூலம், சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்துடன் இந்தியாவுக்கு நேரடிப் போக்குவரத்து பாதை கிடைத்துள்ளது. ஏற்கெனவே, இந்தியாவின் தரம்சாலாவில் தலாய்லாமா தலைமையில் நாடு கடந்த திபெத்திய அரசு இயங்கும் விஷயத்தில் தொடர்ந்து சீனா பொருமிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், புதிய சாலைத் திட்டம் அந்தப் பொருமலை அதிகரித்துவிட்டது. இதன் பின்னணியில்தான் நேபாளத்தின் சுற்றுலா அடிவாங்கும் என்கிற ரீதியில் சீனா, நேபாளத்தைத் தூண்டிவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே ‘எங்களுக்குச் சொந்தமான லிபுலேக் கணவாயின் காலாபானி பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளது’ என்று நேபாள பிரதமர் கே.பி.ஒளி சொல்ல ஆரம்பித்தார்” என்றார்கள்.

சீனாவைச் சுற்றியுள்ள மங்கோலியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது இந்தியா. குறிப்பாக, மோடி பதவியேற்ற பிறகு 2015 ஜூலை 7 முதல் 13-ம் தேதி வரை சீனாவைச் சுற்றியுள்ள கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய புவி அரசியல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிராக சீனா கொம்பு சீவுகிறது.

இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா?

தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் கட்டுமான அமைப்புக்கு அதிக அளவு நிதியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது. இந்திய எல்லைகளில் புதிய சாலைகள் உருவாகின்றன. ராணுவத்தளங்கள் முளைக்கின்றன. சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து சீர்குலைக்கத் திட்டமிடுவதாக சந்தேகிக்கிறது சீனா. மோடி அரசின் தொலைநோக்கம் ஒன்றுதான்... ‘அகண்ட பாரதம்’தான் அது.

இது குறித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பிரமுகர்கள் சிலர், “இந்துக்களின் புனிதத்தலமான கயிலாயத்தை சீனாவின் ஆளுகையிலிருந்து மீட்பது மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் அஜெண்டாக்களில் ஒன்று. இந்திய-சீன மோதல், வீரர்களின் உயிர்ப்பலி வரை வந்துவிட்ட பிறகு, வரும் காலத்தில் கயிலாய யாத்திரை சாத்தியமா, அதற்கு சீனா அனுமதிக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தீவிர சிவபக்தரான மோடி, 2019 நாடாளு மன்றத் தேர்தலின்போது சிவத்தலமான கேதார்நாத்திலுள்ள குகையில் ஓர் இரவு முழுவதும் தியானம் மேற்கொண்டார். அப்போது அவரைச் சந்தித்த சைவ சமயப் பெரியவர்கள் சிலர், ‘கயிலாயம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லையே’ எனக் குறைபட்டுக் கொண்டனர். அமைதியாகக் கேட்டுக்கொண்ட மோடி, மர்மப் புன்னகை மட்டுமே பூத்திருக்கிறார். அந்தப் புன்னகைக்குப் பின்னால் கயிலாயத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் இருக்கிறது. விரைவில் மோடி அதைச் சாதிப்பார்” என்றார்கள்!

கயிலாயம்... இந்தியாவின் ஆன்மிக அடையாளம்!

இந்திய ஆன்மிகத்தின் கெளரவம்மிக்க அடையாளம் கயிலாயம். `காரைக்கால் அம்மையார் தொடங்கி ஆதி சங்கரர் வரை சிவனடியார்கள் அனைவருமே கயிலாய தரிசனம் கண்டவர்கள்’ என்கின்றன பக்தி இலக்கியங்கள். `கயிலாயத்தில் சிவபெருமான் வாழ்கிறார்; பார்வதி ஏரியாக வீற்றிருக்கிறார்’ என்கின்றன இதிகாசங்கள். `ராவணன் பெயர்க்க முயன்ற மலையும் கயிலையே’ என்கிறது ராமாயணம். இன்றும் இதன் குகைகளில் சித்தர்கள் வாழ்கிறார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா?

கயிலாயம், இன்றைய சீன எல்லைக்கு உட்பட்ட திபெத்தில் இருக்கிறது. அது இந்துக்களுக்கு மட்டுமல்ல... பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் முக்கியமான இடம். மானசரோவர் ஏரியை பௌத்தர்கள் தங்கள் புனித நூல்களில் கூறப்பட்டிருக்கும் அனவதாப்தா ஏரியுடன் தொடர்புபடுத்துகிறார்கள். சமணர்களுக்கோ முதலாம் தீர்த்தங்கரரான ரிஷப தீர்த்தங்கரருடன் தொடர்புடைய நிலம்.

1951-ம் ஆண்டுக்கு முன்புவரை கயிலாயம் அனைவரும் சென்றுவரும் புனிதத்தலமாகவே இருந்தது. அது ஒரு பொதுப்பகுதி. திபெத்தை சீனா ஆக்கிரமித்த பிறகும்கூட அப்படியே தொடர்ந்தது. திபெத்தில் இரண்டு லாமாக்கள் உண்டு. ஒருவர் தலாய் லாமா. மற்றொருவர் பஞ்சன் லாமா. இவர்களில் தலாய் லாமா சீன கம்யூனிச அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திபெத்திலிருந்து 1958-ம் ஆண்டு இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தார். அப்போதும் யாத்ரீகர்கள் கயிலாயப் பயணம் சென்று வந்தனர்.

எதிர்பாராதவிதமாக சீனா ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியது. `யாரோ ஒருவர் கயிலாயப் பகுதியில் டிரான்ஸ்மீட்டரை மறைத்துவைத்து, சீன நடவடிக்கைகளை உளவு பார்த்தார்’ என்றது. `பக்தர்களுடன் வந்த ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று புகார் சொன்னது. இதை இந்தியா முழுவதுமாக மறுத்து, ‘திபெத்தை ஆக்கிரமித்த சீனா, அடுத்து இந்திய எல்லைகளைக் குறிவைக்கிறது’ என்று பதிலளித்தது. இது இந்திய-சீன உறவில் சிக்கலை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான் இந்திய-சீனப் போர் நடைபெற்றது.

போருக்குப் பிறகான காலகட்டத்தில், கயிலாயத்துக்கு யாத்திரை செல்ல சீன அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. இன்றும் பக்தர்கள் சீனாவின் அனுமதியைப் பெற்றே யாத்திரை மேற்கொள்கின்றனர்.

கயிலாய யாத்திரை என்பது எளிதானதல்ல. ஆனால், அதுவே உச்சபட்ச ஆன்மிக இலக்கான ‘முக்தி’ என்று மக்கள் நம்புகிறார்கள். அதற்காகத்தான் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,600 மீட்டர் உயரத்திலிருக்கும் கயிலாயத்துக்கு உயிரையும் பணயம்வைத்து, பயணம் செய்கிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பயணம், சிக்கலின்றித் தொடர வேண்டும்!