Published:Updated:

`ராஜஸ்தான் பாணியில் புதுச்சேரி?!’ - டெல்லியில் நடக்கும் தீவிர ஆலோசனை

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

காங்கிரஸ் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அரசைக் கவிழ்க்கும் ஆபரேசனை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது பா.ஜ.க. அந்த அடிப்படையில் புதுச்சேரி மீதும் டெல்லி பா.ஜ.க தலைமை கண் வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே நெருக்கடி கொடுத்து வருகிறது பா.ஜ.க தரப்பு. அதே யுக்தியை அடுத்த சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ள புதுச்சேரியிலும் செயல்படுத்த பா.ஜ.க திட்டமிட்டு வருவதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

2018-ம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இது பா.ஜ.க-வுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தவுடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் மீது கண்வைக்க ஆரம்பித்தது.

அதற்கு முதல் பலியாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் காலி செய்தது. அடுத்த கட்டமாக இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அசோக் கெலாட் ஆட்சிக்கு, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மூலம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின் - கேலாட் மோதல்... ‘கை’ கூடுமா ராஜஸ்தான்?

அதேபோல், தென் மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருப்பது புதுச்சேரி யூனியன் பிரதேசம். இங்கு 2016-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி முதல்வராக இருக்கிறார். ஆனால், இந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடிக்கும் முதல்வர் நாரயணசாமிக்கும் தொடர்ந்து சிக்கல் இருந்துக்கொண்டே உள்ளது. 30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாநில சட்டமன்றத்தில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளார்கள்.

அதன் கூட்டணியான தி.மு.க வசம் 3 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதேபோல் பிரதான எதிர்க்கட்சியான ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்களும், அ.தி.மு.க-வுக்கு 4 உறுப்பினர்களும் சுயேச்சையாக ஒரு உறுப்பினரும் இருக்கிறார்கள். நியமன உறுப்பினர்களாக பா.ஜ.க-வைச் சேர்ந்த மூவர் இருக்கிறார்கள். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட பாகூர் சட்டமன்றத் தொகுதி தனவேலு எம்.எல்.ஏ-வின் பதவியைப் பறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடியாக உத்தரவிட்டார்.

கிரண்பேடி, நாராயணசாமி
கிரண்பேடி, நாராயணசாமி

காங்கிரஸ் ஆளும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்த அரசைக் கவிழ்க்கும் ஆபரேஷனை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது பா.ஜ.க. அந்த அடிப்படையில் புதுச்சேரி மீதும் டெல்லி பா.ஜ.க தலைமை கண் வைத்துள்ளது. சமீபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர்கள் டெல்லி சென்றுள்ளார்கள். அங்கு இதுகுறித்து நீண்ட ஆலோசனையும் செய்துள்ளார்கள். ஏற்கெனவே ஆளுநர் கிரண்பேடியும் தொடர்ந்து நாராயணசாமி மீது புகார்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். இதனால் இந்த விவகாரத்தில் தீவர ஆலோசனையை மேற்கொண்டுள்ளது பா.ஜ.க தலைமை.

புதுச்சேரி:`ராஜீவ்காந்தி திட்டத்துக்கு கருணாநிதி பெயர்?’- கொதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்

இதுகுறித்து நேற்று டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலோடு ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆலோசனை நடந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை உறுப்பினர்கள் வேண்டும், எதிர்க்கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று ஆலோசனை செய்திருக்கிறார்கள். அதோடு முதல்வர் நாராயணசாமி மீது அதிருப்தியில் உள்ளவர்கள் யார் என்கிற விவரத்தையும் உளவுத்துறையை வைத்துத் திரட்டியிருக்கிறார்கள்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தோடு புதுச்சேரி மாநிலத்துக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்பாகவே இந்த மாத இறுதிக்குள் புதுச்சேரி நாராயணசாமி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தினால், அடுத்த ஆண்டு தேர்தல் வரை துணை நிலை ஆளுநரை வைத்து அரசு இயந்திரத்தை நகர்த்தலாம். அதை வைத்து பா.ஜ.க-ஆதரவு அரசு ஒன்றை அடுத்த தேர்தலில் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டுள்ளது பா.ஜ.க தலைமை.

இந்தத் தகவல் நேற்று மாலையே டெல்லியிருந்து கசிந்துள்ளது. காங்கிரஸ் தலைமையும் நாராயணசாமியிடம் இதுகுறித்து பேசியிருப்பதாகக் கூறுகிறார்கள் அந்த கட்சியினர். புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கையைக் கடந்த திங்கள் அன்று ஆளுநர் உரை இல்லாமலே தாக்கல் செய்தார் மாநில முதல்வர் நாராயணசாமி. இதுகுறித்து கிரண்பேடி டெல்லி தலைமையிடம் புலம்பியிருக்கிறர். அதற்கு பிறகுதான் இந்த ஆபரேசனில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பா.ஜ.க தலைமை என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு