கட்டுரைகள்
Published:Updated:

படையெடுக்கும் மத்திய அமைச்சர்கள்... எடுபடுமா ‘ஷோ’ அரசியல்?

படையெடுக்கும் மத்திய அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
படையெடுக்கும் மத்திய அமைச்சர்கள்

மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு தங்களது திட்டம்போல பிரசாரம் செய்கிறது. அந்தத் திட்ட

சமீபகாலமாக, தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியோடு நடைபெறும் திட்டங்கள், கட்டுமானப் பணிகளை அவர்கள் ஆய்வுசெய்கிறார்கள். சில சமயங்களில், தி.மு.க-வை விமர்சித்தும் தடாலடி அரசியல் வெடிகளை வீசுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதற்காக, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் சமீபத்தில் சிறப்பு அரங்குகள் சென்னையில் அமைக்கப்பட்டன. இதைத் தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க சரியாக அமல்படுத்தவில்லை. தி.மு.க குடும்ப ஆட்சி செய்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த நவம்பர் மாதத்தில் மட்டுமே, 50 மத்திய அமைச்சர்களைத் தமிழகத்தில் களமிறக்க பா.ஜ.க திட்டம் வைத்திருக்கும் நிலையில், ‘அவர்கள் எதற்காக தமிழகத்துக்குப் படையெடுக்கிறார்கள்’ என்கிற பின்னணி குறித்து விசாரித்தோம்.

இது பற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிலர், “மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு தங்களது திட்டம்போல பிரசாரம் செய்கிறது. அந்தத் திட்டங்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறுவதில்லை. ‘திட்டம் எந்த அரசால் செயல்படுத்தப்படுகிறது’ என்கிற புரிதலும் மக்களிடம் இல்லை. இதை மக்களிடம் கொண்டுசெல்லவே, நேரடியாகச் சிறப்பு அரங்குகளை அமைத்து, திட்டப் பயனாளர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து அங்கேயே நிறைவேற்றவிருக்கிறோம். பல இடங்களில், மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடுகளும் ஊழலும் மலிந்துவிட்டன. உதாரணமாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், மாநில அரசைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முடியாததால், திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். அது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கவேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது.

படையெடுக்கும் மத்திய அமைச்சர்கள்... எடுபடுமா ‘ஷோ’ அரசியல்?

மத்திய அமைச்சர்களின் வருகையில், அரசியல் கணக்குகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில், பா.ஜ.க-வுக்குச் சாதகமாக இருக்கும் சில நாடாளுமன்றத் தொகுதிகளை ‘ஏ கிரேடு’ எனப் பட்டியலிட்டு தனியாகப் பிரித்திருக்கிறோம். மத்திய சென்னை, தென்சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட தொகுதிகள் ‘ஏ’ கிரேடில் அடக்கம். இந்தத் தொகுதிகளுக்கு மத்திய அமைச்சர்கள் சிலர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்

கிறார்கள். இந்தத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பூத் கமிட்டிகள், மண்டல் தலைவர்களின் செயல்பாடுகள், தி.மு.க-வுக்கு எதிராக நடந்திருக்கும் போராட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நடந்திருக்கும் பிரசாரங்கள் பற்றியெல்லாம் இவர்கள் ஆய்வுசெய்கிறார்கள். கட்சியை வலுப்படுத்தும் யுக்தியோடு இந்த வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது” என்றனர் விரிவாக.

வியூகமெல்லாம் தடாலடியாக இருந்தாலும், களத்தில் ஒன்றும் செயலாகவில்லை என்கிறது கமலாலய வட்டாரம். கடந்த அக்டோபர் 14-ம் தேதி, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோவைக்கு வந்திருந்தார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் அவர் கலந்தாலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோவை ஈஷா மையத்தில் வழிபாடு நடத்திய கையோடு விமானம் ஏறிவிட்டார். அக்டோபர் 28-ம் தேதி வேலூருக்கு வந்திருந்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், விமான நிலையப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பா.ஜ.க-வினர் ஓரிருவரோடு கலந்துரையாடிவிட்டு கிளம்பிவிட்டார். கட்சிரீதியாக எந்த ஆய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தவில்லை. நவம்பர் 9-ம் தேதி, சென்னை மெட்ரோ பணிகளைப் பார்வையிட வந்திருந்தார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி. அவரை மெட்ரோ ரயிலில் ஏற்றி, வடபழனியிலிருந்து ஆலந்தூர் வரை சுற்றிக் காண்பித்துவிட்டு அழைத்துச் சென்றுவிட்டார்களாம் பா.ஜ.க நிர்வாகிகள்.

படையெடுக்கும் மத்திய அமைச்சர்கள்... எடுபடுமா ‘ஷோ’ அரசியல்?

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர், “மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போதெல்லாம், அவர்கள் முன்னால் ‘ஷோ’ காட்டுவதோடு நின்றுவிடுகிறார்கள் பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள். மத்திய அமைச்சர்களின் வருகையும் ஒரு நாள் செய்தியோடு கடந்து போய்விடுகிறது. டெல்லியிருந்து வருபவர்களுக்குத் தமிழகத்தின் அரசியல் களம் ஓரிரு மணி நேரத்தில் எப்படிப் புரியும்? இந்தப் பயணங்களால் கட்சி வளர்ச்சிக்கு எதுவும் நடந்துவிடவில்லை. நிர்வாகிகளின் நேரமும், பணமும்தான் வீணாகின்றன. இனியாவது களப்பணிகளில் கவனம் செலுத்தி, கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் தலைமை தீவிரமாக வேண்டும். ‘ஷோ’ காட்டும் அரசியல் நீண்டகாலத்துக்கு எடுபடாது” என்றார்.

மத்திய அமைச்சர்களை அடுத்தடுத்து அனுப்பி, தமிழகத்தின் அரசியல் தட்பவெப்பத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறது பா.ஜ.க. ஆனால், கள அரசியலில் சுணங்குவதால், எதிர்பார்த்த அளவு ரிசல்ட் வருமா என்பது சந்தேகமே!