Published:Updated:

``திமுக-வும் ஊழலும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!" - திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா காட்டம்

50 வருடங்களுக்கு முன்பு சென்னை வெள்ளத்தில் கருணாநிதி நின்றார். இன்று ஸ்டாலின் நிற்கிறார். ஆனால், காட்சிகள் ஒன்றும் மாறவில்லை.

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் பா.ஜ.க அலுவலகத் திறப்புவிழாவிலும், பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்காக அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று திருப்பூருக்கு வந்திருந்தார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநிலப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணிச் செயலாளர் குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட 351 செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

செயற்குழுல் கூட்டத்தில், `வெற்றிவேல்... வீரவேல்...’ கோஷத்துடன் தமிழில் தன் உரையைத் தொடங்கிய ஜே.பி.நட்டா, ``திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, வ.உ.சி என சுதந்திரத்துக்காக வாழ்வை அர்ப்பணித்த வீரர்கள் வாழ்ந்த நாடு இந்தத் தமிழகம். சிறந்த கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது தமிழ்நாடு. அப்படியான தமிழ்நாட்டின் திருப்பூரில் நடைபெறும் செயற்குழுவில் கலந்துகொண்டதில் பெருமையடைகிறேன். குடும்ப அரசியலுக்கு எதிரானது பா.ஜ.க மட்டுமே. முன்னேற்றம், மக்கள்நலனுக்காவே பா.ஜ.க இயங்கிவருகிறது. காஷ்மீருக்கு சுதந்திரம் பெற்றுத் தந்திருக்கிறோம். தி.மு.க தமிழக கலாசாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது. கொரோனா காலத்தில் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்காமல் செய்தது.

பா.ஜ.க போராட்டத்துக்குப் பிறகு அனுமதியளித்தது. வெற்றிவேல் யாத்திரையைத் தடுக்கப் பார்த்த தலைவர்களெல்லாம் இப்போது வேலோடு போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாசாரத்துக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும்.

50 வருடங்களுக்கு முன்பு சென்னை வெள்ளத்தில் கருணாநிதி வெள்ளத்தில் நின்றார். இன்று ஸ்டாலின் நிற்கிறார். ஆனால், காட்சிகள் ஒன்றும் மாறவில்லை. பா.ஜ.க-வினர் பூத் கமிட்டி மூலம் கடுமையாக உழைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும். பா.ஜ.க-வினர் நீங்களே மாற்றத்துக்கானவர்கள். உங்கள் பகுதியின் தலைவர்கள், நீங்களெல்லாம் பா.ஜ.க-வில் இருக்க பெருமையடைய வேண்டும்" என்றார்.

பா.ஜ.க அலுவலக திறப்புவிழா
பா.ஜ.க அலுவலக திறப்புவிழா

செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு திருப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட பா.ஜ.க அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்துவைத்தார். அதையடுத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பா.ஜ.க அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது,``தமிழ்நாடு ஒரு புனிதமான, கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டான, பக்திமிக்க ஒரு பூமி. இந்த நாளில் திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும் பா.ஜ.க மாவட்ட அலுவலகங்கள் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றன. சித்தாந்தரீதியாக நம்முடைய பணிகள் நடைபெற இந்த அலுவலகங்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

கட்சி அலுவலகங்களெல்லாம் தலைவர்களின் வீடுகளிலிருந்து செயல்படும். அந்தத் தலைவர்கள் போன பிறகு அந்தக் கட்டடங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். ஆனால், நம்முடைய அலுவலகங்கள் காலம் காலமாகக் கட்சியின் தொண்டர்கள் இருந்து பணியாற்றுவதற்காக மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் இடமாக இருக்கும். இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ.க-வுக்கு அலுவலகம் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனடிப்படையில் நாடு முழுவதிலும் இருக்கும் 720 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதில் இன்றோடு சேர்த்து 477 மாவட்ட அலுவலகங்களைத் திறந்துவைத்திருக்கிறோம். இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் மேலும் 16 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்படும். இந்த அலுவலகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``தி.மு.க என்றால் லஞ்சமும் ஊழலும் நிறைந்ததாகவே இருக்கிறது. தி.மு.க-வும் ஊழலும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல. தி.மு.க என்பது வாரிசு குடும்ப அரசியலைக்கொண்டதாக இருக்கிறது. ஆனால், பா.ஜ.க வாரிசு அரசியலுக்கு எதிரானது. வாரிசு அரசியல் இருக்கும் கட்சிகளில் நீங்கள் பணியாற்றும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட தலைவருக்கோ, குடும்பத்துக்கோ பணியாற்றுகிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், அதுவே பா.ஜ.க-வுக்காகப் பணியாற்றினால் அது இந்த நாட்டிலிருக்கும் அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவதாக அர்த்தம். இந்த மேடையிலிருக்கும் தலைவர்கள் அனைவரும் பெரும் பின்புலம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

பிரதமர் மோடி சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் மனிதர்களுக்காக அரசியல் சேவையாற்றிவருகிறார். வங்கிக் கணக்கு இல்லாத 45 கோடி மக்களுக்கு ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்குகளை உருவாக்கியிருக்கிறோம். தமிழகத்தில் 94 லட்சம் பேருக்குப் புதிதாக வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் 20 கோடி பெண்களுக்கு மூன்று மாதங்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கில் தலா 500 ரூபாய் கொடுத்திருக்கிறோம். 32 லட்சம் பேருக்கு இலவச காஸ் அடுப்புகளை பா.ஜ.க அரசு வழங்கியிருக்கிறது. அதேபோல, 11 கோடிக் கழிப்பிடங்கள் இந்தியா முழுவதும் கட்டப்பட்டிருக்கின்றன. 70 லட்சம் மக்கள் குடிநீருக்காகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்கிறார்கள். பிரதமர் மோடி தமிழகத்தின் மீது நல்ல அபிமானம்கொண்டவர். பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்துக்கு வழங்கியிருக்கிறார்” என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: `தனித்துப் போட்டியிட பாஜக தயாரா?!' - என்ன சொல்கிறார் கரு.நாகராஜன்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு