Published:Updated:

`இந்துக் கோயிலில் தமிழ் அர்ச்சனை... மசூதி, தேவாலயங்களில்..?' - தி.மு.க-வைக் கேள்வி கேட்கும் பா.ஜ.க

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''எந்தப் பள்ளிவாசலிலும் பெண்களுக்கு தொழுகை நடத்த அனுமதி இல்லை. எந்தக் கிறிஸ்தவ ஆலயத்திலும் பெண் பாதிரியார்கள் இல்லை. இந்து மதத்தில் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவராமல், அனைத்து மதங்களிலும் தி.மு.க அரசு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்...'' என்கிறார் ஶ்ரீனிவாசன்.

கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் ஆரம்பித்த இந்து அறநிலையத்துறையின் அதிரடி, 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; தமிழிலேயே அர்ச்சனை', 'பெண் அர்ச்சகர்கள் நியமனம்' என அடுத்தடுத்த உச்சங்களைத் தொட்டுவருகிறது.

அறநிலையத்துறையின் இந்த அதிரடி அறிவிப்புகள் முற்போக்காளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. குறிப்பாக, 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற அறிவிப்பு, இந்தியச் சமூகத்தில், ஆழ வேரூன்றியிருக்கும் சாதிய ஆதிக்கத்தை அறுத்தெறிவதோடு, ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாகச் சாதியின் பெயரால், மறுக்கப்பட்டுவந்த உரிமையை மீட்டெடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

2006-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சர் பொறுப்பிலிருந்தபோது 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராலாம்' எனச் சட்டம் இயற்றியதோடு, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆனால், இவர்களது பணி நியமனத்துக்குத் தடை கேட்டு நீதிமன்ற வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து, பயிற்சியை முடித்த மாணவர்கள் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்யப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது.

தற்போது, தி.மு.க தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன், இந்து அறநிலையத்துறை, துறைரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறது. இதில், 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் திட்டம் 100 நாள்களில் செயல்படுத்தப்படும்' என்று சேகர்பாபு அறிவித்திருப்பது பொதுமக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும், 'ஆணுக்குப் பெண் சமம்!' என்ற நீதியை நிலைநாட்டும்விதமாக, 'பெண் அர்ச்சகர்களும் நியமிக்கப்படுவார்கள்', 'தமிழிலேயே அர்ச்சனை' என அமைச்சர் அடுத்தடுத்து அறிவித்துவருகிறார்.

மாற்றத்தை விரும்பும் புரட்சிகர எண்ணம்கொண்டோர் அனைவரும் தி.மு.க அரசின் இந்தத் திட்டங்களை வரவேற்றுவரும் அதேவேளையில், 'மக்களின் மத நம்பிக்கை மற்றும் மரபு சார்ந்த விஷயங்களில், தமிழக அரசின் எடுத்தேன் கவிழ்த்தேன் செயல்பாடு கண்டனத்துக்குரியது' என்று பழைமைவாதிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

''இந்து சமய அறநிலையத்துறை' எனும் அரசு நிர்வாகத்தை நிர்வகிக்கும் பொறுப்புதான் தமிழக அரசுக்கு உண்டே தவிர.... மக்களின் மத நம்பிக்கைகளை, ஆண்டாண்டுகாலமாக ஆகம விதிமுறைகளைப் பின்பற்றிக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் மரபுசார்ந்த விஷயங்களை அதிரடியாக மாற்றியமைக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

'தமிழில் அர்ச்சனை' என்று சொல்லி இந்து மத பழக்கவழக்கங்களை மாற்ற நினைப்பவர்கள், இதேபோல் மற்ற மதங்களில் நடைபெற்றுவரும் அரபி மொழி மற்றும் ஹீப்ரு, ஆங்கில மொழி வழிபாடுகளையும் தமிழுக்கு மாற்ற ஆணையிடுவார்களா?'' என்று ஆவேசக் கேள்விகளை எழுப்புகின்றனர்.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்

அதேசமயம், இந்த விவகாரத்தில் யாரும் எதிர்பாராத திடீர் மாற்றமாக தமிழக பா.ஜ.க-வினர் சிலரும் இந்து அறநிலையத்துறையின் அதிரடி அறிவிப்புகளை வரவேற்றிருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தச் செய்திருக்கிறது. இதையடுத்து தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளரும், பேராசிரியருமான ஶ்ரீனிவாசனிடம் பேசினோம். ''அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கவில்லை. ஆனால், பாராட்டுகிறோம். ஏனெனில், இந்தத் திட்டங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க என எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்லாண்டுகளாக சொல்லிவருவதுதான். ஆனால், 50 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த திராவிடக் கட்சிகள் ஏன் இதையெல்லாம் முன்னரே செய்யவில்லை... அப்போதெல்லாம் உங்கள் சமூகநீதி எங்கே போயிற்று?

'அனைத்து மதத்தினரும் அர்ச்சகராகலாம்' என்ற திட்டத்தை ஏற்கெனவே கேரள அரசு செய்துகாட்டிவிட்டது. எனவே, தி.மு.க அரசுதான் இதைப் புதிதாக, முதன்முறையாக செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல், தமிழில் அர்ச்சனை என்பதையும் ஏதோ இவர்கள்தான் புதிதாக அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதுபோல் அறிவிக்கிறார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல கோயில்களில் தமிழில்தான் அர்ச்சனை நடைபெற்றுவருகிறது. எனவே அதுவும் புதிதல்ல என்பது என் கருத்து.

"தேவ பிரசன்னம் முடிந்த பின் விசாரணை அறிக்கை..."- மண்டைக்காடு தீ விபத்து குறித்து அமைச்சர் சேகர்பாபு!

இந்துக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஆர்வம்காட்டுகிற தி.மு.க அரசு, மசூதிகளிலும் அரபி மொழி தவிர்த்து, தமிழில் ஓதச் செய்யலாமே! மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்கிற தி.மு.க அரசு ஏன் அதைச் செய்யவில்லை? தமிழ்நாட்டில், எந்தப் பள்ளிவாசலிலும் பெண்களுக்குத் தொழுகை நடத்த அனுமதி இல்லை. எந்த கிறிஸ்தவ ஆலயத்திலும் பெண் பாதிரியார்கள் இல்லை. இந்து மதத்தில் மட்டும் மாற்றங்களைக் கொண்டு வராமல், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களிலும் தி.மு.க அரசு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்... அப்படியென்றால்தான் அது மதச்சார்பற்ற அரசு!'' என்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பா.ஜ.க எழுப்புகிற கேள்விகளுக்குப் பதில் கேட்டு, தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது, ''அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என 1970-களிலேயே தி.மு.க அரசு முனைப்புகாட்டியது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனசங்கம் உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் முகமூடிகளாகச் செயல்படும் அமைப்புகள் இதற்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை வாங்கின. பின்னர் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று முடிந்து, மறுபடியும் தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகுதான் இந்தப் பிரச்னையை கையிலெடுக்க வேண்டியதாயிற்று.

சென்னை: சொகுசு காரில் ஆடுகளைத் திருடிய தம்பதி; போலீஸிடம் பிடிபட்டது எப்படி?!

அடுத்து, உருது இஸ்லாமியர்கள் உருது மொழியில் தங்கள் தொழுகைகளை அமைத்துக்கொள்கிறார்கள். மற்ற இடங்களைப் பொறுத்தவரையில், குரானில் கூறப்பட்டுள்ள வசனங்களை மட்டும் அரபி மொழியில் ஓதுபவர்கள் அதற்கான அர்த்தத்தை தமிழில்தான் விளக்குகின்றனர். அடுத்து, மதக் கோட்பாடுகளிலேயே அவர்கள் பெண்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். அதையே பின்பற்றியும் வருகிறார்கள்.

அதேசமயம் இந்து மதத்தில், 'பெண்களை அனுமதிக்கக் கூடாது, தமிழில் மந்திரங்கள் சொல்லக் கூடாது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடாது' என்றெல்லாம் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? தமிழ்ச் சமூகமே தாய்வழிச் சமூகம். இங்கே பெண்களுக்குத்தான் முதல் மரியாதை.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

ஆனால், மதத்தின் பெயரால், நம்மை இத்தனை ஆண்டுக்காலமும் ஏமாற்றிவந்தவர்கள், நமது பண்பாட்டைச் சிதைத்து பெண்ணை அடிமையாக்கி, மனிதர்களுள் ஒருவனுக்குக் கீழே இன்னொருவன், அவனுக்குக் கீழே மற்றொருவன் என்ற படிநிலைச் சாதியச் சமூகத்தை உண்டாக்கி சுரண்டிக் கொழுத்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தமிழில்தான் பிரார்த்தனை நடைபெறுகிறது. தமிழ் மொழியில் பைபிள் உள்ளது. வேளாங்கண்ணி, பூண்டி மாதா, சாந்தோம் சர்ச் எனக் குறிப்பிட்ட சில தேவாலயங்களில், குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் ஆங்கில மொழியில் பிரார்த்தனை நடைபெறும்.

காரணம் அங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, வெளி மாநிலத்தவர்களும் பெரும்பான்மையாக வருவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு. அதேபோல், பாதிரியார்களைப்போல், கன்னியாஸ்திரிகளும் கிறிஸ்தவ மதத்தில் உள்ளனர். ஆலய நிகழ்வுகளில் பாதிரியார்களுக்கு ஈடாக கன்னியாஸ்திரிகளும் முக்கியப் பங்காற்றுகிறார்கள்'' என்கிறார் விளக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு