குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. வேட்பாளர்களாக ஆளும் அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இரு தலைவர்களும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தங்கள் கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு கோரிவருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க `ஆபரேஷன் கமல்' என்ற பெயரில் திட்டம் போட்டு பணியாற்றுவதாக எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றம்சாட்டிவருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ``குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பாஜக 'ஆபரேஷன் கமல்' என்ற திட்டத்தை அரங்கேற்றுகிறது. இதனால் தங்கள் கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய பாஜக அல்லாத உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்துவருகிறது. இது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. சுதந்திரமான மற்றும் நியாயமான குடியரசுத் தலைவர் தேர்தலின் முடிவை நினைத்து பாஜக பயந்துவிட்டது. பாஜக-வின் இத்தகைய மோசடி குறித்து, குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் மாநிலங்களவைச் செயலரும், தேர்தல் கமிஷனும் விசாரணை நடத்த வேண்டும்'' என்றார்.
