Published:Updated:

சாவில்கூட மதம் பார்க்கிறதா தி.மு.க அரசு? - மாரிதாஸ் கைதில் கொந்தளிக்கும் ஹெச்.ராஜா...

ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெச்.ராஜா

தமிழக முதல்வர் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லட்டும்.

சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்ட பா.ஜ.க ஆதரவாளர்களை அடுத்தடுத்து கைது செய்துவருகிறது தமிழகக் காவல்துறை. சும்மாவே கோபம் கொப்பளிக்கும் அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜா இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார், இந்த விவகாரத்தில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய அவரைச் சந்தித்தோம்...

“சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி பா.ஜ.க ஆதரவாளர் மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டிருக்கிறாரே?’’

“முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முதுகுளத்தூர் மணிகண்டன் இறப்பு குறித்து மாரிதாஸ் மட்டுமல்ல... நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். இதில், பிபின் ராவத் மரண சம்பவத்தில் கறுப்புப் பெட்டியை ஆய்வுசெய்து அரசே உண்மைகளை அறிவிக்கும். அதுவரை எந்தக் கருத்தையும் நான் தெரிவிக்க மாட்டேன். அதேசமயம், மணிகண்டன் மரணம் குறித்து மாரிதாஸ் எழுப்பியிருக்கும் கேள்விகள் நியாயமானவை. ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை விதைக்கிறவர்களைவிட, தேசவிரோதமாக மாரிதாஸ் எதுவும் பேசிவிடவில்லை. சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், கனிமொழி இருவருமே சாத்தான்குளம் சென்றார்கள்... இப்போது ஏன் மணிகண்டன் மரணத்தில் மட்டும் கண்டன அறிக்கையையோ, வருத்தத்தையோ பதிவு செய்யவில்லை... சாவில்கூட மதம் பார்க்கிறதா தி.மு.க அரசு... நியாயமான கேள்வியைக் கேட்டால் கைதுசெய்து முடக்குவீர்களா? இவ்வளவு நடந்த பிறகு தாமதமாக அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் சென்று, மணிகண்டனின் குடும்பத்தினரிடம் லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆனால், பணத்தை அவர்கள் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டனர்... தேவையா இந்த மூக்கறுப்பு?!’’

“மணிகண்டன் மரணம் குறித்த உண்மை நிலவரங்கள் தெரியவரும் முன்னரே சாதி, மதரீதியாக கருத்து தெரிவித்து சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவதுதான் கருத்துரிமையா?’’

“சாத்தான்குளம் சம்பவத்துக்கும், முதுகுளத்தூர் சம்பவத்துக்கும் இடையே மதத்தைத் தவிர்த்து வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்து விரோத திராவிட அரசு, இந்து செத்தால் ஒன்றும் கேட்காது. இந்து மதத்தை இழித்தும் பழித்தும் பேசிய லியோனியை, பாடநூல் கழகத் தலைவராகவே நியமித்தவர்மீதே நான் குற்றச்சாட்டுவைக்கிறேன். காரணம், தமிழக அரசு நிர்வாகம் கேவலமாக நடந்துகொண்டிருக்கிறது.’’

“ஆனால், ‘தமிழக முதல்வர் சிறப்பாகச் செயல்படுகிறார்’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதியே பாராட்டியிருக்கிறாரே?”

“தமிழக முதல்வர் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லட்டும்... அதுவரை இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.’’

“முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து மாரிதாஸ் எழுப்பியிருக்கும் சந்தேகத்தை ஹெச்.ராஜாவும் ஏற்றுக்கொள்கிறாரா?’’

“இந்த விவகாரத்தில், ‘விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டரில், பிரதமர் மோடி இருந்திருக்க வேண்டும்’ என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டவனை இந்த அரசாங்கம் கைது செய்திருக்கிறதா? அந்த நபரைக் கைதுசெய்யாதவரை, வேறு யாரையும் தொடக் கூடாது. எனவே, மாரிதாஸ் கருத்தில் தவறு இல்லை.’’

சாவில்கூட மதம் பார்க்கிறதா தி.மு.க அரசு? - மாரிதாஸ் கைதில் கொந்தளிக்கும் ஹெச்.ராஜா...

“பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘தொடர்ச்சியாக தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைதுசெய்கிறது’ என்கிறார். யார் அந்த தேசியவாதிகள்?’’

“தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி.க ஆகிய கட்சிகளை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேசியவாதிகள்தான். ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோரைப் பற்றிப் புத்தகங்களில் வெளிவந்திருக்கும் தகவல்களை கிஷோர் கே.சுவாமி பதிவு செய்தால், அதில் என்ன தவறு... கல்யாணராமன், மாரிதாஸ் என வரிசையாக ஏன் கைதுசெய்துவருகிறார்கள்? அதைத்தான் அண்ணாமலை கேட்கிறார்.’’

‘‘ஆனால், ‘நடிகர் சூர்யா, விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்குப் பரிசுத்தொகை’ என்று அறிவிப்பவர்களையெல்லாம் கண்டிக்காத ஹெச்.ராஜா, தேர்ந்தெடுத்த சில விஷயங்களில் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?’’

‘‘அது எனது உரிமை. ‘பகுத்தறிவு, நாத்திகத்தைத் தொண்டர்கள் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று பிரசாரம் செய்யும் தலைவர்களிடம், ‘முதலில் உங்கள் வீட்டிலுள்ளவர்களைக் கடைப்பிடிக்கச் சொல்லுங்கள்’ என்று செய்தியாளர்கள் என்றைக்குக் கேள்வி கேட்கிறார்களோ... அன்றைக்குத்தான் இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்பதற்கு உரிமை இருக்கிறது.’’

“சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ படம் உங்களை மிகவும் எரிச்சலூட்டியிருந்தது. இப்போது ‘ஆன்டி இண்டியன்’ படமும் வெளியாகியிருக்கிறதே?’’

“அந்தப் படத்தில் என்னைப் பற்றியும் பேசியிருப்பதாக அறிந்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.’’

“நாம் தமிழர் கட்சியின் சீமான், ‘தமிழகக் கோயில்களில் மத நிகழ்வுகளை ஒளிபரப்பிய பா.ஜ.க-வினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறாரே?’’

“கேதார்நாத்தில் நடைபெற்ற கோயில் திறப்புவிழா நிகழ்ச்சிதான் தமிழகக் கோயில்களில் எல்.இ.டி திரைவைத்து ஒளிபரப்பப்பட்டது. இதில் எந்தத் தவறும் இல்லை. மற்றபடி பா.ஜ.க கொடியை யாரும் கோயிலுக்குள் கட்டியிருந்தார்களா... இல்லையே! ஆக, இந்த நிகழ்ச்சியில் அரசியல் எங்கிருந்து வந்தது?’’

“சமீபத்தில் உச்ச நீதிமன்றம், ‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதித்ததை ஏற்க முடியாது’ என்று தெரிவித்திருக்கிறதே?’’

“எதற்காக ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்? ஏழு பேருக்கும் தண்டனை கொடுத்தது நீதிமன்றம். விடுதலை செய்ய வேண்டு மென்றாலும் அதை நீதிமன்றம்தான் செய்ய வேண்டும். ‘ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்’ என்றுதான் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது, ‘விடுதலை செய்ய வேண்டும்’ என்று சொல்லவில்லை. ஏழு பேரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லையென்றால், ‘விடுதலை செய்ய வேண்டாம்’ என்ற முடிவை ஆளுநர் எடுத்திருக்கலாம்.’’