தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் மாநாடு துத்துக்குடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகள் சங்கங்கள் தி.மு.க சார்பான சங்கங்கள். அவர்கள் இந்து வியாபாரிகளின் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. எனவே, இந்து வியாபாரிகளின் பிரச்னையைத் தீர்த்துவைப்பதற்காகவே இந்தச் சங்கம் தொடங்கிவைக்கப்பட்டு, இதுவரை தமிழகம் முழுவதும் 6,000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும், 1965-ல் அண்ணாதுரை தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து 34 ஆண்டுகளாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் 1971, ஆகஸ்ட் 31-ல் சாராயக்கடைகளைத் திறந்துவிட்டு, 34 ஆண்டுகளாக சாராயம், மது என்றால் என்னவென்று அறியாத தமிழ்ச் சமுதாயத்தைக் குடிகாரனாக்கி இளைஞர்களை சீரழித்ததுதான் திராவிட மாடல். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. பட்டப்பகலில் படுகொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அரசு ஊழியர்கள் மிரட்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். தமிழக ஆளுநரை ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களை வைத்து சீண்டும் வேலைகளை விட்டுவிட்டு, ஒரு மேம்பட்ட அளவில் ஸ்டாலின் ஆட்சியை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் இந்து கோயில்கள் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், 50,000 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக ஆளுநர் கூறுகிறார். தமிழக அரசு 3,000 ஏக்கர் மீட்கப்பட்டிருப்பதாகப் பொய் சொல்கிறது. இந்த விஷயங்களை ஆளுநர் திறந்த மனதோடு சொல்லியிருக்கிறார். ஏழு நாள்கள் எந்த நிறுவனத்திலும் வருமானவரிச் சோதனை நடந்தது இல்லை. ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரிச் சோதனை நடைபெற்றபோது, அந்த நிறுவனத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று தி.மு.க-வினர் சொன்னார்கள். பின்னர் அமைச்சர் உதயநிதி, `நாங்கள் இது போன்று பல சோதனைகளைப் பார்த்துவிட்டோம்' என்று கூறுகிறார்.

முதலமைச்சரின் மகனும், மருமகனும் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது பற்றி நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கும் நிலையில், அவரை இலாகா மாற்றினால்கூட அவர் பேசியது உண்மை என்று ஆகிவிடும் என்பதால், இந்த அரசு இதில் தெளிவாக இருக்கிறது. ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் உண்மையைக் கூறியிருக்கும் படம். பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துவருகின்றனர். தமிழகத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸைத் தவிர வேறு யாரும் சினிமாத்துறையில் படம் எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது” என்றார்.