Election bannerElection banner
Published:Updated:

``ரஜினி - அர்ஜுனமூர்த்தி தொடர்பு லேட்டாகத்தான் தெரிந்தது!’’ - விளக்கும் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

``ரஜினிகாந்த் - அர்ஜுனமூர்த்தி தொடர்பு தமிழக பா.ஜ.க-வுக்கு லேட்டாகத்தான் தெரியவந்தது... எனவே, அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்!'' என்கிறார் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம், மேற்குவங்க அரசியல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் என நாடு முழுக்கப் படு பிஸியாக அரசியல் செய்துவருகிறது பா.ஜ.க. இந்தச் சூழ்நிலையில், பா.ஜ.க-வின் முன்னாள் தேசியச் செயலாளரும், தமிழக பா.ஜ.க-வின் மூத்த மற்றும் அதிரடித் தலைவருமான ஹெச்.ராஜாவிடம் கேள்விகளை முன்வைத்தேன்.

``ஹெச்.ராஜாவின் தடாலடிப் பேச்சுகள், தேர்தலில் எதிர்விளைவை உண்டாக்கும் என்பதால், கட்சியிலிருந்து ஒதுக்கப்படுகிறார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றனவே... உண்மையா?’’

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

``கொரோனா காலகட்டம் என்பதால், அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திக்க முடியவில்லை. மற்றபடி இப்போதுகூட தமிழக பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும் குழுவின் தலைவராக என்னை நியமித்திருக்கிறார்கள்தான். 1996-லிருந்து தொடர்ந்து ஆறு தேர்தல்களிலும் எனக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. டபுள் ஹாட்ரிக்!''

``2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக பா.ஜ.க தேர்தல் அறிக்கையின் ஸ்பெஷல் என்ன?''

``விவசாயம், கல்வி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான விஷயங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.''

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

``20 நாள்களைக் கடந்து போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயம்தானா?’’

``சி.ஐ.ஏ சட்டம் வந்தால், முஸ்லிம்களின் குடியுரிமையே ரத்தாகிவிடும் என்று கூப்பாடு போட்டார்கள். ஆயிற்று ஒரு வருடம், எந்த ஒரு முஸ்லிமின் குடியுரிமையாவது பறிக்கப்பட்டிருக்கிறதா... மோடி ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தையே ஒழித்துக்கட்டிவிடுவார்கள். இனி ரேஷன் கடைகளே இருக்காது என்றெல்லாம் அரசியல் தீய சக்திகள் தொடர்ந்து பொய்யைப் பரப்பிவந்தன. இப்போது, `புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆபத்து' என்று திட்டமிட்ட பொய்யைப் பரப்பி, விவசாயிகளைத் தூண்டிவருகிறார்கள் எதிர்க்கட்சியினர்.''

``பெருமளவிலான சீக்கியர்களைக் குடிமக்களாகக்கொண்ட கனடா நாட்டின் பிரதமர், நம் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், அதையும்கூட மத்திய அரசு எதிர்க்கிறதே..?''

``சர்வதேச விதிமுறைகளை மீறி, அந்நிய நாட்டின் உள்விவகாரங்களில் ஒருவர் எப்படித் தலையிடலாம்... தங்கள் நாட்டிலுள்ள சீக்கிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், சாலை வசதி, தண்ணீர் வசதி என்று அவர்கள் நாட்டிலேயே செய்துகொள்ளட்டும். இந்தியாவில் வந்து வாலாட்டக் கூடாது!''

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

``அந்நிய நாடுகளின் தூண்டுதலால்தான் போராடுகிறார்கள் என்று சொல்வதே, நமது நாட்டு விவசாயிகளை அவமதிப்பதுதானே?’’

``சென்ற ஆண்டு நடைபெற்ற சி.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் நடந்ததைத்தான் நான் சொல்கிறேன். அதனால்தான் இப்போதும் சந்தேகம் வருகிறது. காரணம், உண்மையான விவசாயிகள் இந்தப் புதிய சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.''

``போராட்டத்தை ஒடுக்கும் உத்தியாக, `சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்' என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பா.ஜ.க சொல்லிவருகிறதே..?''

``சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களால் மதக் கலவரம் ஏற்பட்டதா இல்லையா... `மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்’ என்று நான்தான் ட்வீட் போட்டேன். மாட்டை தெய்வமாக நினைத்து வளர்த்துவரும் உண்மையான தமிழன் நான்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஆனால், மெரினாவில் நின்றுகொண்டிருந்தவர்களெல்லாம் மாட்டை வெட்டித் தின்கிறவர்கள்தான். அதனால்தான், `நான்கூட இது தானாகச் சேர்ந்த கூட்டம் என்றுதான் நினைத்துப் போராட வந்தேன். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராக தவறான வார்த்தைகளைப் பேசச்சொல்லி என்னை அவர்கள் நிர்பந்தித்தார்கள். அதனாலேயே நான் போராட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட்டேன்' என்று ஹிப்ஹாப் தமிழா ஆதியும் கூறியிருக்கிறாரே..!''

``இடைத்தரகர்களை ஒழித்துக்கட்டுவதாகச் சொல்லும் இந்தச் சட்டங்கள், கார்பரேட் நிறுவனங்களின் கைகளில் விவசாயிகளை அடகுவைக்கின்றனவே?''

``புதிய சட்டம், விவசாயிகளுக்கு ஆதரவாக இயற்றப்பட்டிருக்கும்போது அது எப்படி விவசாயிகளை அடகு வைப்பதாக அமையும்... விவசாயிகளை அரசுக்கு எதிராக திசை திருப்ப இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள்தான் சொல்லிவருகின்றன. ஏற்கெனவே மத்தியப் பிரதேசத்தில், ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் பெரிய அளவில் ஒப்பந்தப் பண்ணையம் முறையில் கோதுமைக் கொள்முதலைச் செய்துவருகிறது. இதேபோல், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் பெப்ஸிகோ என்கிற பன்னாட்டு நிறுவனம் ஒப்பந்தப் பண்ணைய முறையில் கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. ஆக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்தால் நல்ல விஷயம்... மோடி அரசாங்கம் கொண்டுவந்தால் மட்டும் கெட்ட விஷயம் என்று சொல்லி எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?''

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

``ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தியில், விவசாயிகளுக்கு உரிய தொகையை நிறுவனங்கள் வழங்குவதில்லை என்பதுதானே நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது?''

``விவசாயிகள் இதுபோல் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டுதான், ஒப்பந்த விலையைக் கொடுக்காத நிறுவனங்கள், ஒன்றரை மடங்கு விலையைக் கொடுப்பதற்கான வழிமுறைகளை இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் வகுத்திருக்கின்றன. அதுவும் 30 நாட்களுக்குள் விவசாயிக்குத் தீர்வு கொடுக்கவும் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், எந்த நேரத்திலும் விவசாயி தனது விருப்பத்தின்பேரில் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இது நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஆக, இவ்வளவு நாள் ஒப்பந்தப் பண்ணையத்தில் பாதுகாப்பு இல்லாமல் இருந்த விவசாயிகளுக்கு, இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் பாதுகாப்புதானே கொடுத்திருக்கின்றன... பாதிப்பு எங்கே கொடுத்திருக்கிறது?''

மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு ஈமச்சடங்கு... நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

``ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தி நடைமுறைக்கு வந்தால், `குறைந்தபட்ச ஆதார விலை'யை அரசு நிர்ணயிக்க வாய்ப்பில்லை என்ற விவசாயிகளின் அச்சம் நியாயமானதுதானே?''

``குறைந்தபட்ச ஆதார விலை என்பது அரசாங்க உத்தரவுதான். சூழலைப் பொறுத்து `இந்த முறை சன்னரக அரசி குவிண்டாலுக்கு 1,880 ரூபாய், மோட்டா ரகம் 1,800 ரூபாய்...’ என்று குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துவருகிறது அரசு. அடுத்த முறை இந்த நிர்ணயத்தில் கூடுதல் குறைவாக மாற்றமும் வரலாம். இதுதான் நடைமுறை.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இதுவரையிலும் 15 பொருள்களுக்குத்தான் குறைந்தபட்ச ஆதார விலை இருந்துவந்தது. ஆனால், மோடி அரசாங்கம் வந்த பிறகுதான், இந்த எண்ணிக்கை 21 பொருள்களுக்கென விரிவாக்கப்பட்டது. தற்போதுள்ள `இந்த நடைமுறை ரத்து செய்யப்படும்' என்று இந்தப் புதிய சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை என்பது உள்ளபடியே தொடரும் என்றுதான் மத்திய அரசும் சொல்கிறது.

அதுவும் கூடாது... புதிய வேளாண் சட்டத்திலேயே இதையும் ஒரு ஷரத்தாகச் சேர்க்க வேண்டும் என்றால், எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று சொல்வதுதான் ஆட்சேபனை!''

OLX-ல் விளம்பரம்: `பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனைக்கு!’ - 4 பேரை கைதுசெய்த போலீஸ்

``ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகுதானே, பா.ஜ.க-விலிருந்தே அர்ஜுனமூர்த்தி நீக்கப்படுகிறார்?''

``தமிழக பா.ஜ.க-வுக்கு வந்திருக்கும் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் போன்ற தலைவர்கள் தி.மு.க-வின் மூத்த தலைவர்கள். அவர்களைப் போன்று கட்சியில் பல்லாண்டுகளாக இருந்த மூத்த தலைவர் அல்ல அர்ஜுனமூர்த்தி. அவர் தமிழக பா.ஜ.க-வில் பொறுப்புக்கு வந்தே 100 நாள்கள்தான் ஆகின்றன. 101-வது நாள் இதற்காக தன் நண்பர்களுக்கெல்லாம் விருந்தும் வைத்திருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. ஆனால், அதற்கடுத்த நாளே கட்சியும் மாறிவிட்டார். எனவே, இதையொன்றும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகப் பார்க்க வேண்டியது இல்லை!''

அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்த், தமிழருவி மணியன்
அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்த், தமிழருவி மணியன்

``அர்ஜுனமூர்த்தியிடமே, 'நீங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர்தானே?' என்று ரஜினிகாந்த் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் வீடியோ, சந்தேகத்தை வலுப்படுத்துகிறதே?''

``உங்களது சந்தேகத்துக்கு அவசியமே இல்லை. அர்ஜுனமூர்த்தி தொடர்ந்து பல ஆண்டுகளாக ரஜினிகாந்தின் சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட்டில் ஈடுபட்டுவந்திருக்கிறார். அந்தத் தொடர்பில் இருந்துகொண்டேதான் பா.ஜ.க-விலும் வந்து இணைந்திருக்கிறார் என்ற தகவல்களெல்லாம் இப்போதுதான் கிடைத்திருக்கின்றன. எனவேதான், கட்சியிலிருந்து அவரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டோம். அவரும் அதேநேரத்தில் ராஜினாமா செய்துவிட்டார்.''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு