Published:Updated:

“கும்பல் வன்முறை செய்பவர்கள் மிருகங்கள்!”

பொன் ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
பொன் ராதாகிருஷ்ணன்

மும்மொழிக்கொள்கை, புதிய கல்விக்கொள்கை, முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என பா.ஜ.க தலைவர்கள் படு ‘பிஸி!’

“கும்பல் வன்முறை செய்பவர்கள் மிருகங்கள்!”

மும்மொழிக்கொள்கை, புதிய கல்விக்கொள்கை, முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என பா.ஜ.க தலைவர்கள் படு ‘பிஸி!’

Published:Updated:
பொன் ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
பொன் ராதாகிருஷ்ணன்

த்திய ஆளுங்கட்சியின் அடுத்தடுத்த மூவ் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வியோடு, முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தேன்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`ஜம்மு காஷ்மீரில், சட்டசபையைக் கலைத்து, தலைவர்களைக் கைது செய்து... இப்படியொரு அதிரடியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?’’

“இந்தியாவில் பிற மாநிலங்களில் இல்லாத, சிறப்பு அந்தஸ்து சலுகையை ஜம்மு காஷ்மீர் மட்டும்தான் பெற்றிருந்தது. ஆனால், இந்த மாபெரும் சலுகையை வைத்துக்கொண்டு கடந்த 72 ஆண்டுகளில், அந்த மாநிலம் சாதித்தது என்ன? அங்குள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்? எந்த லாபத்தையும் அவர்கள் அடையவில்லை. இப்போது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டி ருக்கின்றன. இனிவரும் ஐந்தாண்டுகளில், வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் என நல்லதொரு முன்னேற்றத்தை அம்மக்கள் எட்டிப் பிடிப்பார்கள்!’’

‘`ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில், இப்படி ஜனநாயகப் படுகொலை செய்திருப்பது நியாயம்தானா?’’

‘`565 சமஸ்தானங்களை ஒன்றாக இணைக்கும்போது அந்தந்த மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியா இணைத்தார்கள்? நம் சகோதரர்களாக நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினராக இருந்த மக்களைப் பிரித்துத் தனி நாடாக அறிவிப்பதற்கு முன், வாக்கெடுப்பு நடத்தாத காங்கிரஸ் கட்சி, இப்போது ஒரு பகுதியை நாட்டோடு இணைக்கும் முயற்சிக்கு, ‘வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று கேட்பது எந்த ஊர் நியாயம்?

“கும்பல் வன்முறை செய்பவர்கள் மிருகங்கள்!”

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கலாம் என்று அன்றைக்கு நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு எடுத்த முடிவுதான் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை.’’

‘`கடந்த மாதம், ‘காஷ்மீர் விவகாரத்தில், மத்தியஸ்தம் செய்ய மோடி என்னை அழைத்தார்’ என்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ‘இல்லை’ என மறுத்தது மத்திய அரசு. உண்மைதான் என்ன?’’

‘`130 கோடி மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டுதான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்படி ட்ரம்ப்பை அழைத்ததாக, எழுத்துபூர்வமாகவோ, அல்லது வேறு ஆதாரங்களோ எதுவும் இருக்கிறதா? அமெரிக்க அதிபரைக் கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. அதேசமயம் என் நாட்டின் பிரதமர்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.’’

‘`ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை அந்த மாநில மக்களே வரவேற்கிறார்கள் என்று கூறும் மத்திய அரசு, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களைக் காஷ்மீரில் நிறுத்தியிருப்பதும் அம்மாநிலத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்து வைத்திருப்பதும் ஏன்?’’

‘`ஜம்மு காஷ்மீரின் ஒரு பக்கம் பாகிஸ்தான், மற்றொரு பக்கம் சீனா எல்லை நாடுகளாக இருக்கின்றன. சுற்றிலும் பிரச்னைகளைக் கொண்ட, 72 ஆண்டுக்காலமாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிற ஒரு மாநிலப் பிரச்னையில், ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சில வழிமுறைகளைக் கையாளத்தான் வேண்டியிருக்கிறது. இந்தச் சமயத்தில், ஏதேனும் ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து விட்டால்கூட, அப்போதும் நீங்கள் மத்திய அரசுமீதுதானே குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டி ருப்பீர்கள்!’’

‘`முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமியப் பெண்களின் நலனில் அக்கறை காட்டும் மத்திய பா.ஜ.க அரசு, இந்து மதத்தின் பெயரால் நாட்டில் நடைபெறும் கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தச் சட்டம் இயற்றாமல், வெறுமனே கண்டித்து அறிக்கை மட்டும் வெளியிடுகிறதே?’’

“மனிதத் தன்மையே இல்லாத மிருகத்தனமான செயல்களைச் செய்துவரும் மிருகங்களும் நாட்டில் இருக்கின்றன. இந்த மிருகங்களுக்குத் தண்டனைகளும் வழங்கப்பட்டுதான் வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்காகத்தான் இவர்கள் இப்படி நடந்துகொண்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? மனிதர்களாகவே இல்லாத இவர்களை இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என்று குறிப்பிட்ட மதத்துக்காரர்களாக எப்படிப் பார்க்க முடியும்?’’

‘`நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள்தான் முதுகெலும்புடன் செயல்படுவதாகச் சொல்லியிருக்கிறார்களே?’’

“(சிரிக்கிறார்) அந்தக்காலத்தில், வீட்டு வேலையெல்லாம் செய்துமுடித்த பின், ஏதாவதொரு வேலையைச் செய்தாக வேண்டுமே என்று எண்ணும் பெண்கள், பேன் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள், அவ்வளவுதான். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!’’

‘`புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா எழுப்பியிருக்கும் கேள்விகள் நியாயமானதுதானே?’’

‘`சூர்யா நல்ல நடிகர்; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். புதிய கல்விக்கொள்கை குறித்து அவரது கருத்தை முன்வைத்திருக்கிறார். நாடு முழுவதுமிருந்து வரக்கூடிய பல்வேறு கருத்துகளில், சூர்யாவின் கருத்தும் ஒன்று.’’

‘`சூர்யா வன்முறையைத் தூண்டுகிறார், அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுகிறார் - என்றெல்லாம் அரசியல் ரீதியான விமர்சனங்கள் வருகின்றனவே?’’

‘`சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விஷயம். எல்லோரும் அவரவர் கருத்தைச் சொல்வதற்குத்தான் கருத்துக்கேட்புக் கூட்டங்களே நடத்தப்படுகின்றன. அந்தவகையில், ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் கருத்து சொல்வார்கள். அதையே நாம் குறை சொல்லிவிடக் கூடாது. அப்படிச் சொன்னால், இந்தக் கருத்துக்கேட்பின் நோக்கமே அடிபட்டுப்போகும்.’’

‘`மதத்தின் ஆணி வேராக இருக்கக்கூடிய சாதியத்தை ஒழிக்காமல், ஊரும் சேரியுமாக உள்ளூரிலேயே பிரிந்துகிடக்கும் மக்களை ‘ஒரே தேச’த்துக்குள் அடைப்பதென்பது வாக்கு அரசியலுக்குத்தானே பயன்படும்?’’

‘`மதம் சார்ந்துதான் சாதி இயங்குகிறது என்பதை நான் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒருகாலத்தில், சாதியக்கொடுமைகள் நடந்தன... அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால், எந்த சாமியும் மனிதர்களில் ஏற்றத்தாழ்வு பார்த்ததாக எனக்குத் தெரியவில்லை. சண்டாளர் உருவில் வந்த சிவன், ‘எனக்குள் இருப்பவனும் உனக்குள் இருப்பவனும் ஒன்றேதான்; யாரை ஒதுங்கிநிற்கச் சொல்கிறாய்?’ என்று ஆதிசங்கரரையே கேட்டுத் தெளிவடைய வைத்ததாக ஆன்மிகம் சொல்லியிருக்கிறது.’’

‘`அதே சிவன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நந்தனாரைக் கோயிலுக்குள் வரவழைக்க முடியாமல், நந்தியை மட்டும் விலகியிருக்கச் செய்ததாகவும் ஆன்மிகம் சொல்கிறதே?’’

‘`இதை நீங்கள் அப்படிப் பார்க்கக்கூடாது. நான் எவ்வளவு பெரிய பக்தன் என்றாலும்கூட, நந்தியைப் பார்த்து நான்தான் விலகிச்செல்ல வேண்டும். ஆனால், நந்தனாருக்கு மட்டும்தான் நந்தியே விலகி நின்றது.’’

``உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடும், அரசுப் பணிக்கான தகுதித்தேர்வில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மிகக் குறைந்த அளவிலான மதிப்பெண் விகிதங்களையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“இது குறிப்பிட்ட சில பகுதிகளுக்கானது. தமிழ்நாட்டுக்கு இது பொருந்தவே பொருந்தாது. இங்கே எல்லோருமே நன்றாகத்தான் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் ரொம்பவும் பின்தங்கியிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பின்தங்கி யிருக்கிறார்கள்தான். எல்லோருமே சேர்ந்து முன்னேறுவோம். யாரையும் தாழ்வாகப் பார்க்கவேண்டாம். ‘அவர்களுக்கு அத்தனை சதவிகிதம், இவர்களுக்கு இத்தனை சதவிகிதம்’ என்று யாரையும் குரோதமாகப் பார்த்துப் பார்த்தே நாம் நாசமாகப் போய்விட்டோம். இந்த நிலையை மாற்றவேண்டும்.’’

“கும்பல் வன்முறை செய்பவர்கள் மிருகங்கள்!”

‘` ‘கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுடன், தமிழக காங்கிரஸ் கட்சியினர் பேசி காவிரித் தண்ணீரை வரவழைக்க வேண்டியதுதானே’ என்று கேட்ட தமிழக பா.ஜ.க தலைவர்கள், இப்போது கர்நாடக பா.ஜ.க அரசுடன் பேசி, காவிரிப் பிரச்னையைத் தீர்ப்பீர்களா?’’

‘`அப்படிப் பேசித் தீர்க்க வேண்டிய அளவுக்குச் சூழ்நிலைகள் இருக்காது என்று நான் நம்புகிறேன். தமிழகத்தின் முன்னேற்றத்திலும், காவிரிப் பிரச்னையில், தமிழகம் பக்கம் இருக்கும் நியாயத்திலும் பிரதமரோ அல்லது எங்கள் கட்சியின் தலைமையோ இரண்டாவது கருத்து கொள்ளாது என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.’’

‘`கர்நாடக அரசியல் தலைவர்கள், கட்சி பேதம் மறந்து மாநில நலனில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். தற்போதுகூட, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ‘மேக்கேதாட்டூ’ அணை கட்டுவதற்குத் தமிழக அனுமதி தேவையில்லை என்று பிரதமருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறாரே?’’

‘`தமிழக பா.ஜ.க தலைவராக நான் பொறுப்பு வகித்த காலங்களில், ‘தமிழகத்துக்கு உரிய காவிரித் தண்ணீரைத் திறந்து விட வேண்டும்’ என்று கர்நாடக பா.ஜ.க அரசை வலியுறுத்தித் தீர்மானம் இயற்றி, தண்ணீரைத் திறந்து விடச் செய்திருக்கிறோம்.இப்போதும்கூட கர்நாடகத்தின் கோரிக்கையைப் பிரதமர் ஏற்கவில்லை. ‘தமிழகத்தின் அனுமதி இல்லாமல், அணை கட்ட முடியாது’ என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துவிட்டது.’’

‘`ராஜ்ய சபா சீட் உங்களுக்குக் கிடைக்கும் என்று பேச்சு அடிபடுகிறதே..?’’

‘`நான் பா.ஜ.க-வின் அடிமட்டத் தொண்டன். எந்தச் சூழ்நிலையிலும் கட்சிக்காக, நாட்டுக்காக உழைக்கக்கூடியவன். மற்றபடி பதவிகளைப் பற்றி நான் என்றைக்குமே கவலைப்பட்டதில்லை!’’

‘`அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தானே வேலூர்த் தேர்தல் முடிவும் நிரூபித்திருக்கிறது?’’

‘`இது தி.மு.க-வுக்கு உரிய வெற்றி இல்லை. கடந்த முறை மாநிலம் முழுக்க பெரும் வித்தியாசத்தில் தி.மு.க-வை ஜெயிக்க வைத்த மக்கள், இம்முறை வெறும் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, தி.மு.க-வின் வீழ்ச்சிக்கு இது ஒரு தொடக்கம்!’’