Published:Updated:

`என்னை விமர்சித்தாலும் பரவாயில்லை, கேட்ட கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்லட்டும்’- பா.ஜ.க ஶ்ரீனிவாசன்

Stalin - srinivasan
Stalin - srinivasan

பையனூர் பங்களா பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது குறித்து, ஸ்டாலினுக்கு முன்பே தெரிந்திருந்தால், தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது அதை மீட்பதற்கான நடவடிக்கையில், ஏன் ஈடுபடவில்லை?

``முரசொலி இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, ராமதாஸ் முன் வருவாரா? அவரை ஶ்ரீனிவாசன் வலியுறுத்த முன்வருவாரா?'' என முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை கோரி, ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், மனு அளித்திருக்கும் பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் ஶ்ரீனிவாசனை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

Asuran
Asuran

`பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதியச் சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள்” என அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு மு.க ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்தக் கருத்துகள்தாம் ஒரு சங்கிலித் தொடர்போல மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்”
நடிகர் தனுஷ் (ட்விட்டரில்)

ஸ்டாலினின் ட்விட்டர் பதிவுக்கு ``அசுரன் கற்றுத்தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், பதில் ட்வீட் செய்தார். அப்போதுதான் வார்த்தைப் போர் தொடங்கியது.

தொடர்ந்த ஸ்டாலின், ``ராமதாஸ் பொய் சொல்கிறார். முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். இல்லாத பட்சத்தில் மருத்துவர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகுவார்களா?'' என சவால் விடுத்தார். அதோடு, முரசொலி அலுவலகப் பட்டாவையும் ஆதாரமாகக் காட்டினார்.

Ramadoss - Stalin
Ramadoss - Stalin

தொடர்ந்த மருத்துவர் ராமதாஸ், ''1985-ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஸ்டாலின் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குக் காட்ட வேண்டிய ஆதாரம், நிலப்பதிவு ஆவணமும் மூல ஆவணங்களும்தான். மேலும், முரசொலி இடம் வழிவழியாகத் தனியாருக்குச் சொந்தமான நிலம் என்றால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?'' என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

நிச்சயமாக அந்த இடம் பஞ்சமி நிலம்தான். 1990-களில் பஞ்சமி நிலப் போராட்டக் குழுவின் சார்பாக, நான், கருப்பன் ஐ.ஏ.எஸ், பிருந்தாவன் மோசஸ் ஆகியோர் இணைந்து திரட்டிய தகவலில் முரசொலி அலுவலகம், எல்.ஐ.சி அலுவலகம் ஆகியவை பஞ்சமி நிலத்தில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்தோம். அப்போதே, அது குறித்த செய்திகளையும் வெளியிட்டோம். அப்போது, பஞ்சமி நிலம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் எங்களால் பெரிதாக எந்த முன்னெடுப்பையும் செய்ய முடியவில்லை.
தடா பெரியசாமி (பஞ்சமி நில மீட்பு இயக்கம்)

அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின் ``முரசொலி நில விவகாரம் தொடர்பாக அறைகூவல் விடுத்திருந்தேன். நான் விடுத்த அறைகூவலை ராமதாஸ் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! அவர் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்! இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார்'' எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

Stalin
Stalin

அதோடு அந்த விவாதம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், பஞ்சமி நில மீட்புப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தடா பெரியசாமியும், முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம்தான் என ராமதாஸின் கருத்துக்கு வலு சேர்த்தார். மேலும், ராமதாஸ், ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையான பிரச்னையின் வழியாக தலித் மக்களின் பஞ்சமி நில மீட்புக்குத் தீர்வு கிடைக்கட்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

``பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகம், அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயம் ஆகியவை குறித்து கருணாநிதி வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என்பதை அவர் விளக்கவேண்டும்!" திருமாவளவன் - (26.07.2006)

இந்தநிலையில், பா.ஜ.கவின் மாநிலப் பொதுச்செயலாளரான ஶ்ரீனிவாசன், 'முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் தானா என்பதைப் பரிசோதனையிட வேண்டும்?' எனப் பட்டியல் இன மக்களுக்கான தேசிய ஆணையத்தில், மனு அளித்தார். மனுவை ஏற்றுக் கொண்ட ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஒரு வாரத்தில் இதுகுறித்து விசாரித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ஜ.க முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் இந்தச் சம்பவம் தொடர்பாக குரல் எழுப்பியுள்ளார்.

Thada periyasamy
Thada periyasamy

இந்தச் சம்பவம் குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ''முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை கோரி ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பா.ஜ.க மாநிலச் செயலாளர் டாக்டர் ஶ்ரீனிவாசன் மனு அளித்திருக்கிறார். ராமதாஸின் கூற்றை நம்பி, ஶ்ரீனிவாசன் அவருடைய நேரத்தை வீணடித்திருக்கிறார். இதற்குப் பதிலாக, அ.தி.மு.க. முன்னாள் தலைவி ஜெயலலிதாவால், பையனூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டால் ஏதாவது பலன் கிடைக்கும்'' எனக் காட்டமாகப் பதிலளித்திருந்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்து குறித்து, பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஶ்ரீனிவாசனிடம் பேசினோம்,

''முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை நான் எழுப்பவில்லை. சில வருடங்களுக்கு முன்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோதான் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஆதாரமிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து சமீபத்தில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸும் அதே கருத்தைத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்துதான் நான் ஆணையத்தில் புகார் மனு அளித்தேன்.

Srinivasan
Srinivasan

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா என்பதை விசாரிக்கத்தான் மனு அளித்தேன். அந்த மனு தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அதுகுறித்து ஒருவாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விசாரணை நடந்து, முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இல்லையென்று முடிவு வந்தால், அது ஸ்டாலினுக்கு நல்லதுதானே?

தங்களை நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்புதானே, பிறகு ஏன் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும். நான் அரசியல் நோக்கத்தோடுதான் புகார் அளித்தேன். அரசியல்வாதி அரசியல் காரணங்களுக்காகத்தான் செயல்படமுடியும். அதில் எந்தத் தவறும் இல்லை.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கெனவே ஆதாரத்தைக் காட்டியுள்ளார். அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்.
பொன்.ராதாகிருஷ்ணன்.
``சாவு தொண்டனுக்கு... சரித்திரம் தலைவனுக்கா?" தி.மு.க-விலிருந்து விலகிய திருச்சி பேச்சாளர்

உள்நோக்கத்தோடு குதர்க்கமான அரசியலில்தான் ஈடுபடக்கூடாது. மற்றபடி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கப்பட்ட நிலத்தில், ஒரு அரசியல் கட்சி தங்களின் அலுவலகத்தைக் கட்டியிருப்பதும், அதிலும் சமூக நீதியின் பாதுகாவலர்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் தி.மு.க அதைச் செய்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுகிறபோது, ஒரு அரசியல்வாதியாக அதில் இருக்கும் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருவது என் கடமை.

நான் என் கடமையைத்தான் செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தி.மு.கவினர் தங்களை நேர்மையானவர்கள் என நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இதைக் கருதவேண்டும்.

Notice
Notice

உரிய ஆவணங்களைக் கொடுத்து நிரூபித்துக் கொள்ளட்டும். தங்களின் சொந்த நிலம் என்பதை நிரூபித்துவிட்டால், அவரின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபணம் ஆகிவிடும்.

அதோடு, இதுவரைக்கும் நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் ஸ்டாலின் பதிலளிக்கவில்லை. தாய்ப் பத்திரத்தையும் வெளியிடவில்லை. குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல், குற்றம் சாட்டிய என்னை விமர்சித்திருக்கிறார். மாறாக பையனூர் பங்களா குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். பையனூர் பங்களா பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது குறித்து, ஸ்டாலினுக்கு முன்பே தெரிந்திருந்தால், தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது அதை மீட்பதற்கான நடவடிக்கையில் ஏன் ஈடுபடவில்லை?

நான் கேட்ட கேள்விகளுக்கு நியாயமான பதிலை, ஸ்டாலினிடம் இருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்'' என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு