Election bannerElection banner
Published:Updated:

நெல்லை: `போடுங்கம்மா ஓட்டு...’ தொகுதிப் பங்கீடு முடியும் முன்பே பிரசாரத்தைத் தொடங்கிய பா.ஜ.க!

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குஷ்பு
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குஷ்பு

`எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றியைக் கைப்பற்றுவார்கள்’ என்று பாரதிய ஜனதா துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லை தொகுதியில் நடிகை குஷ்பு பிரசாரத்தைத் தொடங்கிவைத்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றியும், எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாகவும் பா.ஜ.க தலைவர் முருகன் தலைமையில் நான்குகட்டமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும், இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

`முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்!’ - பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன்

இந்தநிலையில், நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பா.ஜ.க-வினர் சுவர் விளம்பரங்களை எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஏற்கெனவே மாநிலத் தலைவர் எல்.முருகன் நேரில் வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அத்துடன் தேர்தல் காரியாலயத்தைத் தொடங்கிவைக்கவும் திட்டமிட்டிருந்தார். தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பாக பா.ஜ.க-வினரின் செயல்களால் உள்ளூர் அ.தி.மு.க-வினர் அதிருப்தி அடைந்ததால் தேர்தல் காரியாலயம் திறப்பதை பா.ஜ.க ஒத்திவைத்தது.

இந்தநிலையில், நெல்லை டவுன் பகுதியில் பா.ஜ.க சார்பாக பேரணி நடந்தது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளரான குஷ்பு கலந்துகொண்டு பேரணியைத் தொடங்கிவைத்தார். இந்தப் பேரணியின்போது, தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படும் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.

நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம்
நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம்

பேரணியின்போது திறந்த ஜீப்பில் வேட்பாளர்போலவே நயினார் நாகேந்திரன் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பேரணியில் பங்கேற்றவர்கள், `போடுங்கம்மா ஓட்டு... தாமரைச் சின்னத்தைப் பார்த்து...’ என கோஷமிட்டபடியே முக்கியச் சாலைகள் வழியாகச் சென்றார்கள்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, ``வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். பாரதிய ஜனதா அரசு தமிழக மக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது.

குஷ்பு - செய்தியாளர் சந்திப்பு
குஷ்பு - செய்தியாளர் சந்திப்பு

தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும் தமிழக மக்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்திருக்கிறது. மத்திய அரசு மீதும், மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு மீதும் இதுவரை எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே மக்கள் மிகப்பெரிய வெற்றியைத் தருவார்கள்.

கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விரைவில் தமிழகத்தில் பாரதிய ஜனதா எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும். பொதுவாக, நிதியாண்டின் இறுதியில் அல்லது தொடக்கத்தில் எரிபொருள் விலை உயர்வு இருக்கத்தான் செய்யும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். அதனால் விரைவில் விலை உயர்வு குறைக்கப்படும்.

நெல்லையில் பா.ஜ.க தேர்தல் பிரசாரம்
நெல்லையில் பா.ஜ.க தேர்தல் பிரசாரம்

மீனவர்களுடன் கடலில் குதித்து குளிப்பது, மீன் பிடிப்பது, பள்ளி மாணவர்களிடம் குஸ்தி போடுவது என ராகுல் காந்தியின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது. அது நல்ல தலைவருக்கும் அழகல்ல. மக்களுக்காக என்ன திட்டம் இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமே தவிர, இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என்றார்.

`தமிழகத்தில் பெண் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையே...’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``அந்தப் பிரச்னை தொடர்பாக உயரதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எங்கோ ஓர் இடத்தில் நடக்கும் செயலுக்காக ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்லிவிடக் கூடாது” என்று குஷ்பு கூறினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு