Published:Updated:

``ஆமைக்கறி சாப்பிட்டால், சீமான் மாதிரி மூளை வளரும்" - தன் மீதான விமர்சனத்துக்கு அண்ணாமலை காட்டம்!

''சீமான் எப்போது பா.ஜ.க-வை ஆதரித்தார்? பா.ஜ.க-வையெல்லாம் அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. மீடியா வெளிச்சம் தன்மீதும் விழ வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசக்கூடியவர் சீமான்.'' - அண்ணாமலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் நோக்கில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு, தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதிக்க, கொதித்துப்போன இந்து அமைப்பினரும், தமிழக பா.ஜ.க-வினரும் தடையை மீறி ஆங்காங்கே விநாயகர் ஊர்வலம் நடத்திக் கைதாகியுள்ளனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் அடுத்தடுத்து தீர்மானங்கள் நிறைவேறிவரும் இந்தக் காலகட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் பேசினேன்....

சட்டப்பேரவை - ஸ்டாலின்
சட்டப்பேரவை - ஸ்டாலின்

''மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக அடுத்தடுத்த தீர்மானங்களை இயற்றிவருகிறதே தமிழக அரசு?''

''தமிழ்நாட்டில், எதிர்க்கட்சியாக இருந்தபோது தாங்கள் சொல்லிவந்ததை, இப்போது ஆளுங்கட்சியானதும் தீர்மானமாகக் கொண்டுவருகிறார்கள் தி.மு.க-வினர். அதற்கு அவர்களது கட்சி உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆக, அரசியல் காரணங்களுக்காக தி.மு.க அரசு செய்திருக்கும் காரியமாக மட்டுமே இதை நாங்கள் பார்க்கிறோம். அவ்வளவுதான்!''

''தி.மு.க தலைமையிலான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருவது, தமிழக பா.ஜ.க., அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அரசியல்ரீதியாக பெரும் பின்னடைவுதானே?''

''அது உங்களுடைய கருத்து. அப்படி இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என்று மக்கள் வரவேற்கிறார்கள்? 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு காணாமல் போய்விடும்' என்று சொன்னார்கள். அது நடந்ததா, இல்லையே! ஏனெனில், 'நீட் தேர்வு ரத்து' என்பது மாநில அரசால் செய்ய முடியாதது என்பது தி.மு.க-வுக்கே தெரியும். அதனால்தான் 'வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம்' என்ற பெயரில், ஆங்காங்கே ஒவ்வொன்றாக அரைகுறையாகச் செய்துவருகிறார்கள்.

உதாரணமாக, 'மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்' என்றார்கள். ஆனால், அதை முழுமையாகச் செயல்படுத்த முடியாததால், நடைமுறையில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று இன்றுகூட பத்திரிகைச் செய்தி வெளியாகியிருக்கிறது. இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற பாணியில் அரைகுறையாக எதையோ செய்துவருகிறார்களே தவிர... ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. எனவே, தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருவதாக நான் எங்கேயும் பார்க்கவில்லை!''

பன்னீரின் மணிமண்டபக் கோரிக்கை முதல் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய கட்சி நிர்வாகி வரை! -கழுகார் அப்டேட்ஸ்
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''மத்திய பா.ஜ.க அரசின் கொரோனா கட்டுப்பாடு அறிவுறுத்தலின்படியே, 'விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' எனும்போது தமிழக பா.ஜ.க அதை மீற முயன்றது நியாயம்தானா?''

''எல்லா மாநிலங்களுக்குமான பொதுவான சுற்றறிக்கையைத்தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. அதிலேயே, 'உங்களுடைய மாநில நிலைமையைக் கருத்திற்கொண்டு, நீங்களே இது விஷயமாக முடிவெடுங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு, எதிர்க்கட்சியாக இருந்த இதே தி.மு.க-வினர்தான் கொரோனா முதல் ஊரடங்கின்போது, 'இது போன்ற அறிவுறுத்தல்களைச் சொல்வதற்கோ, ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ மத்திய அரசுக்கு உரிமையே கிடையாது' என்று சொன்னவர்கள்தான். மேலும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கையே அமல்படுத்த மாட்டோம்' என்று சொன்னவர்கள் இப்போது ஏன் ஜகா வாங்கிவிட்டார்கள்?''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'' 'பொதுவெளியில், கூட்டமாகக் கூடிதான் நாங்கள் விநாயகரை வழிபடுவோம்' என்று தமிழக பா.ஜ.க சொல்வதன் பின்னணியில், 'மத அரசியல்'தானே இருக்கிறது?''

''பொதுவான இடத்தில் மக்கள் ஒன்றுகூட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சொல்லவேயில்லை! பொதுவான இடத்தில் விநாயகர் வழிபாட்டுக்கான உரிமையைத்தான் நாங்கள் கேட்கிறோம். அந்த வழிபாட்டுக்காக மக்கள் இரண்டு பேராகக் கூடவேண்டுமா அல்லது ஐந்து, பத்து பேராகக் கூட வேண்டுமா என்பதெல்லாம் மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். எனவே, அந்த விதிகளையெல்லாம் மாநில அரசே சொல்லட்டும்! அதை விட்டுவிட்டு, ஏ.சி அறையில் இருந்துகொண்டு, `விநாயகர் சதுர்த்திக்குத் தடை' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது! இது விஷயமாக அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்தையெல்லாம் கூட்டித்தானே மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்!''

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

''விநாயகர் சதுர்த்தி தடை மீறி ஊர்வலம், வேல் யாத்திரை என கடந்தகால தமிழக பா.ஜ.க தலைவர்கள் பயணித்த அதே வழியில் புதிய தலைவர் அண்ணாமலையும் பயணிக்கிறாரே?''

''அதே வழியில் நான் பயணிக்கவில்லை... ஆனால், தமிழக அரசியல் அந்த நிலைமையில்தான் இருக்கிறது. 'மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியும்' என்று உலகுக்கே காட்டியவர்கள் தி.மு.க-வினர்தான். 1999-ல் பா.ஜ.க-வோடு தி.மு.க கூட்டணி வைத்திருந்தபோது, 'மதச்சார்பற்ற கட்சி பா.ஜ.க என்று தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்வது தி.மு.க தொண்டர்களின் கடமை' என கருணாநிதி, 'முரசொலி'யில் எழுதியிருக்கிறார். அப்படியென்றால், கருணாநிதி தலைமையிலான தி.மு.க வேறு; மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வேறு என்று சொல்வார்களா? பா.ஜ.க., எந்த மதத்துக்கும் எதிராகச் செயல்பட்டது கிடையாது. அதேசமயம், ஒரு மதத்துக்குப் பிரச்னை என்றால், அது குறித்துக் கேள்வி எழுப்பவும் தயங்காது!''

நடிகர் சூரி வீட்டுத் திருமண விழாவில் நகை திருடியவர் நகைக்கடை உரிமையாளர் மகனா?! - அதிர்ச்சித் தகவல்

''கடந்த வருடமும், நோய்த் தடுப்பு காரணத்தை முன்வைத்து அ.தி.மு.க அரசு, விநாயகர் சதுர்த்திக்குத் தடை விதித்திருக்கும்போது, தி.மு.க அரசு விதித்த தடை மட்டும் எப்படி மத அரசியலாகும்?''

''நான் பொத்தாம் பொதுவாகப் பேசவில்லை... கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பேசுகிறேன். கடந்த வருடம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோது, அ.தி.மு.க அரசு, தடை அறிவிப்பு செய்திருந்தது. அப்போதும்கூட கட்டுப்பாடுகளில் கொஞ்சம் தளர்வுகள் செய்யுமாறு அரசுடன் நாங்கள் பேசினோம்... அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு தளர்வுகள் அளித்தனர். ஆனால், நோய்த்தொற்றே இல்லாத இந்தச் சூழலிலும்கூட, 'எதிர்காலத்தில் இப்படித்தான் நோய்த்தொற்று ஏற்படும்' என்று தி.மு.க அரசு, முன்னரே வரையறுத்துக்கொண்டு தடை விதித்திருப்பது தவறு. அடுத்து, ஊரடங்கு விஷயத்தில், எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க எடுத்த நிலை என்ன, ஆளுங்கட்சியாக ஆன பிறகு எடுத்த நிலை என்ன என்பது பற்றியும்தான் நாங்கள் பேசுகிறோம்!''

ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு

''எல்லா எதிர்க் கேள்விகளுக்கும் காங்கிரஸ் கட்சியையும் ஜவஹர்லால் நேருவையுமே குறை சொல்கிற மத்திய பா.ஜ.க., தற்போது ஆக்கபூர்வமாக என்னதான் செய்துகொண்டிருக்கிறது?''

''கடந்த 70 ஆண்டுக்காலமாக ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. ஏழு ஆண்டுகளாகத்தான் பா.ஜ.க இருந்துவருகிறது. எனவே, எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து பெரும்பான்மையான ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்திருக்கிறது?

உதாரணமாக, 'இந்தியா மதச் சார்பற்ற நாடு' என்று காட்டுவதற்காக 'செக்குலர்' என்ற வார்த்தையை 1976-ல் பயன்படுத்தியதே இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான். ஏன் அதற்கு முன்பு இந்தியா, மதச்சார்பற்ற நாடாக இல்லையா? ஏன்... இப்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் செக்குலர் இல்லையா? கேரளாவின் தற்போதைய ஆளூநர் ஓர் இஸ்லாமியர்தான்; மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இஸ்லாமியர்தான்.

ஆக, வாக்கு அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி செய்துவந்ததையெல்லாம் தற்போது பா.ஜ.க அரசு முறியடித்துவருகிறது. அதனால்தான், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் மாநிலங்களுக்குக் கிடைத்த நலன்களைவிடவும், பா.ஜ.க ஆட்சியின் கீழ்தான் அதிக அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக முதல் இரண்டு இடங்களுக்குள்ளாக வரும் அளவுக்கு தமிழ்நாடு அதிக பலனடைந்திருக்கிறது! இப்படி ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் காங்கிரஸ் கட்சியைக் குறை சொல்கிறோம்.''

கள்ளக்குறிச்சி: சிறுமியை காரில் கடத்திய கும்பல்! - கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

''அண்மையில், 'சீமான் ஏன் பா.ஜ.க-வை ஆதரிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்' என்று பேசியிருக்கிறீர்களே..?''

''சீமான் எப்போது பா.ஜ.க-வை ஆதரித்தார்? பா.ஜ.க-வையெல்லாம் அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. மீடியா வெளிச்சம் தன் மீதும் விழ வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசக்கூடியவர் சீமான். அதைத்தான் நான் சொன்னேன். எந்த விஷயம் சூடாக இருக்கிறதோ, அந்த விஷயம் குறித்து ஒரு நிலைப்பாடு எடுத்துக்கொண்டு பேசுவார். மற்றபடி அரசியலில் அவருக்கென்று ஒரு சித்தாந்தம் இருப்பதாகவோ அல்லது ஒரு நிலைத்தன்மை இருப்பதாகவோ நான் பார்க்கவில்லை. காற்று அடிக்கிற திசையில் அரசியல் செய்துவருபவர் சீமான்!''

சீமான்
சீமான்

''பா.ஜ.க-வை நான் ஆதரிக்கிறேனா அல்லது எதிர்க்கிறேனா என்பதுகூட தெரியாத ஒருவரைத்தான் தமிழக பா.ஜ.க-வுக்குத் தலைவராக்கியிருக்கிறார்கள் என்று சீமான் உங்களை விமர்சித்திருக்கிறாரே?''

''சந்தோஷம்... அவரது கருத்து அப்படியே இருக்கட்டும்! ஒருவேளை ஆமைக்கறி சாப்பிட்டால், சீமான் மாதிரி மூளை வளரும் என்று நினைக்கிறேன். ஆனால், எனக்கு கறி சாப்பிடும் பழக்கம் கிடையாது. இனி முயன்று பார்க்கிறேன்!''

''ஹெச்.ராஜா ஊழல் புகார், கே.டி.ராகவன் வீடியோ ஆகிய விவகாரங்களில், 'பா.ஜ.க-வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும்' என்ற அரசியல் பின்புலம் ஏதேனும் இருப்பதாக நினைக்கிறீர்களா?''

''அப்படி எந்தப் பின்புலமும் கிடையாது... எங்களுக்குச் சந்தேகமும் கிடையாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு