Published:Updated:

`வேணும்னா பேட்டியைப் போடுங்க, வேண்டாட்டி குப்பையில போடுங்க!'-அண்ணாமலை பேட்டியின்போது நடந்தது என்ன?!

நாகர்கோவிலில் பேட்டி அளித்த அண்ணாமலை
News
நாகர்கோவிலில் பேட்டி அளித்த அண்ணாமலை

``பயந்தெல்லாம் பிரஸ் மீட் பண்ண முடியாது. இப்பிடித்தான் பேசுவோம். எங்க பதில் இப்படித்தான் இருக்கும்' என்று ஆவேசமானார் ..அண்ணாமலை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சிறுபான்மையினர் பா.ஜ.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். அதிமுக-விலிருந்து பாஜக-வில் சேர்ந்த சகாயம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ-க்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பேசிய அண்ணாமலை, `ஒவ்வொரு மாநிலத்துக்கும் கட்டம் கட்டமாக பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குகிறது. டிசம்பர் 31-ம் தேதி 3,331 கோடி ரூபாய், மே 2021 வரை நடந்த பேரிடருக்காக ஆறு மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நடந்த பேரிடர்களுக்கு அடுத்தகட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும். தமிழகத்துக்கு மத்திய அரசு 75 சதவிகிதமும், மாநில அரசு 25 சதவிகிதமும் எஸ்.டி.ஆர்.எஃப் பண்ட் மூலம் பேரிடர் நிதி வழங்கப்படுகிறது. மாநில அரசு 300 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு முன்பு மத்திய அரசு தனது பங்கான 75 சதவிகிதம் நிதியை வழங்கிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை கூட்டணி, கூட்டணி இல்லை என்பது பிரச்னை இல்லை. ஃபார்மலா பேஸில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. பாரதப் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், டெல்டா பகுதியில் 100 சதவிகித விவசாய நிலங்கள் வருகின்றன.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை

சோஷியல் மீடியாவில் ஏதோ போட்டதற்காக பா.ஜ.க-வின் 24 பேர் மீது தி.மு.க-வினர் புகார் கொடுத்தன் அடிப்படையில் போலீஸார் கைதுசெய்கிறார்கள். தமிழக போலீஸுக்கு என கம்பீரம் இருக்கிறது. அந்தக் கம்பீரத்தை அரசியலுக்காக விட்டுக் கொடுக்காதீர்கள் என டி.ஜி.பி-யிடம் கேட்டுக்கொண்டேன். அதனால்தான் தமிழக போலீஸார் கடமை தவறாமல் செயல்பட வேண்டும் என டி.ஜி.பி அறிக்கை வெளியிட்டுள்ளர். டி.ஜி.பி-யின் அறிக்கையை மனதார வரவேற்கிறேன்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தப் பேட்டியின்போது ஒரு செய்தியாளர் `பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட கைதுசெய்யப்பட மாட்டார்கள் என கூறினார்கள். ஆனால் இப்போது தமிழக மீனவர்களை இலங்கை கைதுசெய்கிறதே...’ எனக்கேட்டார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ``தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியில இருந்தபோது, 2004-ல இருந்து 2014 வரை... தயவு செய்து உங்க டி.வி சானலில டிபேட் நடத்துங்க. நானே வர்றேன். உங்க டி.வி-க்கு நான் சொல்லுறேன், நானே ஸ்பெஷலா வந்து உக்காருறேன்" என்றதும் செய்தியாளர்கள், ``நீங்கள் குறிப்பிட்ட டி.வி செய்தியாளர் அவர் இல்லை. எதற்காக ஒரு டி.வி-யை அடையாளப்படுத்திப் பேசுகிறீர்கள்?” எனக் கேட்டனர். இதனால் செய்தியாளர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

வாக்குவாதத்தின்போது பேசிய அண்ணாமலை, ``நீங்கள் கேள்வியை அடையாளப்படுத்திக் கேட்டால், நானும் அடையாளப்படுத்தித்தான் சொல்லுவேன். போடுறதுன்னா போடுங்க, போடாட்டி விட்டுருங்க. போடுறதும் போடாததும் உங்க இஷ்டம்னா, சொல்லுறதும் சொல்லாததும் என் இஷ்டம். உங்க கேள்வியில அஜெண்டா இருந்தா, என் பதில்லயும் அஜெண்டா இருக்கும். வேணும்னா பேட்டியைப் போடுங்க, வேண்டாட்டி குப்பையில போடுங்க. நான் இப்படித்தான் பேசுவேன்.

நான் பேசுனதுல உண்மை இருக்கு, நான் சொன்ன டேட்டாவுல பொய் இருக்குன்னு நீங்க புரூஃப் பண்ணிக் காட்டுங்க. கட்சியினுடைய புரொபகண்டாவ நடத்துறதுக்காக டி.வி சேனலை வெச்சுக்கிட்டு பிரஸ் மீட்டுன்னாலே புரொபகண்டாதான்னு நாலு பேரு சுத்திக்கிட்டு இருக்காங்க. பயந்தெல்லாம் பிரஸ் மீட் பண்ண முடியாது. இப்படித்தான் பேசுவோம். எங்க பதில் இப்படித்தான் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்ப நேர்மையாக, நாணயமாக தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய பல சேனல்கள் மாறுதோ அன்னைக்கு என் பேச்சு மாறும். நானெல்லாம் அன்பா, பண்பா பேசக்கூடிய ஆள். அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் இப்படியெல்லாம் மாறியிருக்கு. ஒரு கட்சியைப் பழிக்கணும், பாரதப் பிரதமரைப் பழிக்கணும்னே சில பேர் டி.வி சேனல் நடத்துறாங்க. காலையில இருந்து நைட்டு வரைக்கும் இதுதான் அஜெண்டா. அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு மாநிலஹ் தலைவரா உட்கார முடியாது. மாநிலத் தலைவர் சேரைவிட்டுட்டு விவசாயியா அண்ணாமலை மாறும்போது அன்பா நீங்க கேட்கிறதுக்கெல்லாம், பொறுமையா பதில் சொல்லுவேன்.

ஆவேசமான அண்ணாமலை
ஆவேசமான அண்ணாமலை

டி.வி டிபேட்ல என்ன ஆப்ஷன் கொடுக்கிறார்கள், முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சிபுரிகிறாரா, சூப்பரா ஆட்சிபுரிகிறாரா, கிரேட்டா ஆட்சிபுரிகிறாரா, அருமையா ஆட்சிபுரிகிறாரான்னு நாலு ஆப்ஷன் கொடுக்கிறாங்க. நீங்க நேர்மையா மாறுங்க. நாங்க டிபேட்ல கலந்துக்கிறோம். பாதி ஜர்னலிஸ்டுகளோட சோஷியல் மீடியா, ட்விட்டரை எடுத்து அவங்க கருத்துகளைப் பாருங்க. நீங்க நேர்மையா மாறுங்க... நாங்க வர்றோம்" என்றார்.