Published:Updated:

`ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான சைக்கிள்; 2,000 போலீஸ், 40 கார்!’ - ஸ்டாலின் சைக்கிளிங் குறித்து அண்ணாமலை

``கடந்த நான்கு மாதங்களில், முதல்வர் 2.5 லட்சம் ரூபாயிலான சைக்கிளில் பயணித்ததுதான் சாதனை. சைக்கிளில் பயணிக்கும் நேரத்தில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபட்டால், மக்கள் நிச்சயம் அவர் பக்கம் இருப்பார்கள்." - அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசார பொதுக்கூட்டத்தில் தீவிரம் காட்டிவருகின்றனர். அந்த வரிசையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள முருக்கேரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ``திமுக-வைப் பொறுத்தவரை புது மாப்பிள்ளையாக ஐந்தாவது மாதத்தில் இருக்கிறார்கள். அந்த ஐந்து மாதங்களுக்குள்ளாகவே தேர்தல் வந்திருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போடுவோம் என்று மக்கள் சிலர் நினைக்கின்றனர். அந்த மாதிரியான தேர்தல் இது கிடையாது. உள்ளாட்சிகளுக்கு வரும் 80% நலத்திட்டங்கள் பாரத பிரதமர் மூலம்தான் வருகிறது. 1980-90-களில் மாநில அரசு நிதி கொடுத்து உள்ளாட்சிப் பணிகள் நடைபெறும். 2021 மோடியின் காலம். அனைத்து அரசுத் திட்டங்களும் கிராம பஞ்சாயத்து மூலம் மக்களைச் சென்றுகொண்டிருக்கின்றன. 20% நிதி மட்டும்தான் மாநில அரசு தருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

வீட்டின் வாசலிலேயே மக்கள் தண்ணீர் பிடிக்கும்படி 'ஜல் ஜீவன் திட்டம்' கொண்டு வந்தது மோடிதான். திமுக-வுக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்றால்... மத்திய அரசின் இந்தக் குடிநீர் திட்டத்துக்கு நீங்கள் 10,000 கொடுத்து டோக்கன் வாங்கினால்தான் குடிநீர் குழாய் இணைப்பு வரும். கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ஒரு இணைப்புக்கு ரூ.500, ரூ.1,000, ரூ.10,000 என வசூல்வேட்டை நடப்பதைப் பார்க்கிறோம். இந்த திட்டத்துக்குப் பணம் கொடுப்பது மத்திய அரசு. போன வருடம் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு செலவு செய்துள்ளது. மத்தியில் மோடி ஆட்சி இருக்கும்போது, மாநிலத்தில் தாமரை இருந்தால், மத்திய திட்டங்கள் நேரடியாக உள்ளாட்சி மூலம் லஞ்சம், லாவண்யம் இன்றி மக்களை வந்து சேரும்.

திமுக-வின் சாதனை என்னவென்றால், 10 மாதகாலம் சுமந்து பெற்றெடுத்த பாரதப் பிரதமரின் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் போட்டி காட்டுகிறார்கள். மோடி அவர்கள் கொண்டுவந்த திட்டத்துக்கு, 'நாங்கள்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தோம்' என ஸ்டிக்கரை மாற்றி ஒட்டுகிறார்கள்.

அதெல்லாம் அண்ணாமலை அள்ளிவீசும் பொய்! - சுளீர் சு.வெங்கடேசன்

இவர்களின் கபட நாடகத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நான்கு மாதகால திமுக ஆட்சியின் சாதனை என்னவென்றால், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளில் முதல்வர் ஸ்டாலின் போனதுதான். அது நீங்களும் நாங்களும் போகும் சாதாரண சைக்கிள் இல்லை. அதன் விலை 2.5 லட்சம். ஒரு கிலோமீட்டர் வரை சைக்கிளில் போகிற அவருக்கு, 2,000 போலீஸ் செக்யூரிட்டி. சைக்கிளுக்கு முன்னாடியும், பின்னாடியும் 40 கார்கள். இப்படி சைக்கிளில் போனால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நம்மை ஏமாற்ற முதல்வர் முயன்றுகொண்டிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அந்த நேரங்களில் பாடுபட்டால் மக்கள் நிச்சயம் அவர்கள் பக்கம் இருப்பார்கள். ஆனால், அவர்களால் நிச்சயம் செய்ய முடியாது. அவர்கள் சொன்னது அனைத்துமே பொய்தான். பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1,000 தருகிறேன் என்றார். ஆனால், யாருக்கும் தரவில்லை. இலவச காஸ் சிலிண்டர் யாருக்கும் வரலை. நகைகளை வங்கியில் அடகுவைத்தவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கிறார்கள். இவ்வளவு பொய்களை நான்கு மாதங்களிலேயே மக்கள் கண்டுகொண்டார்கள். ஆனால் பொய்களை அதிகம் பேசும் அரசாகத்தான் இது இருக்கிறது" என்றார்.

மிஸ்டர் கழுகு: நேர்த்திக்கடன்... ஆன்மிக யாத்திரை கிளம்பும் துர்கா ஸ்டாலின்!

அதைத் தொடர்ந்து நேற்று மாலை அன்னியூர் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை பேசியபோது, அங்கிருந்த நபர் ஒருவர் பெட்ரோல் விலை குறைப்பு பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ``பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைப்பதற்கு பாஜக தயாராக இருக்கிறது, குறையும். பெட்ரோல் விற்பனையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்து விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தாச்சு" என்று பேசியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு