திண்டுக்கல்லில் நடைபெற்ற பா.ஜ.க உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயற்குழுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ``உள்ளாட்சியில் பா.ஜ.க தயாராக வேண்டும். அதற்காகத்தான் வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத அமைப்பாக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு பா.ஜ.க-வில் இருக்கிறது. இந்தப் பிரிவு உள்ளாட்சி அமைப்புகளில் இறங்கி மக்களுக்காக வேலை பார்த்து உள்ளாட்சித் தேர்தலுக்காக இப்போதே தயாராக வேண்டும். கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க-வினர் 9,000 பேர் போட்டியிட்டு தோல்விகண்டிருக்கின்றனர். அவர்களை இந்தப் பிரிவில் இணைத்து மீண்டும் போட்டியிட வைக்க வேண்டும்.

சுயேட்சையாகப் போட்டியிட்டவர்கள், மாற்றுக்கட்சியினரை பா.ஜ.க-வில் இணைக்க வேண்டும். அவர்களுக்கு உள்ளாட்சி என்றால் என்ன என்பது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் திட்டங்களில் மத்திய அரசின் பங்கு குறித்தும் மக்களுக்கு விளக்க வேண்டும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால்தான் தற்போது பா.ஜ.க-வினருக்கு தன்னம்பிக்கை வந்திருக்கிறது. அதே நம்பிக்கையோடு வருகிற 2026 உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். வருகிற 2024 எம்.பி தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது" என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ``முதல்வர் ஸ்டாலின் பலமுறை `தமிழகம்' என்று பேசியிருக்கிறார். ஆகையால், ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது தவறில்லை. அரசியலுக்காக தி.மு.க இதைப் பெரிதுபடுத்துகிறது. ஆளுநர் தமிழக கலாசாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர், பேரவையில் தனது உரையை தமிழில்தான் பேசியிருக்கிறார். ஆளுநர் அறிக்கையில் `தமிழகம் அமைதிப் பூங்கா' என்று குறிப்பிடப்பட்டிருந்தது பொய். அண்மையில்தான் கோவையில் குண்டு வெடித்திருக்கிறது. தி.மு.க கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே ஆளுநர் படிக்கக் கூடாது. தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், உண்மையான தகவல்தான் கொடுக்கிறோமோ என்று பார்த்து ஆளுநரிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பல இடங்களில் மாநில அரசுகள், மத்திய அரசுடன் சுமுகமாகச் செயல்படுகின்றன. அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் மத்திய அரசும் வேண்டும், மாநில அரசும் வேண்டும். வண்டியில் இரு சக்கரங்கள் போன்றது மத்திய அரசும், மாநில அரசும். இரண்டும் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும். தி.மு.க பயன்படுத்தக் கூடிய ஒன்றிய அரசு என்பது தவறான வார்த்தை. 12 பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரை வேந்தராக அறிவிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநர் நிறுத்திவைத்தார். யு.ஜி.சி விதி 156-ன்படி இது வரம்பு மீறியதாகும். இதனால்தான் ஆளுநருக்கும், முதல்வருக்கும் பிரச்னை ஏற்பட்டது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆளுநரை தமிழக மக்களுக்கு எதிரி எனச் சித்திரிக்கக் கூடாது. ஆளுநரை வேலை வாங்க வேண்டியது முதல்வரின் கடமை. அதேபோல் முதல்வரை ஆளுநர் வேலை வாங்கலாம். ஆளுநரிடம் தமிழக அரசு சண்டை போடுவது நியாயமில்லை. இதனால் பாதிக்கப்படுவது சமான்ய மக்கள்தான்.
தமிழக அரசு ஆளுநரிடம் அளித்த 59 சட்டமுன்வடிவுகளில், 15 சட்டமுன்வடிவுகளுக்கு மட்டுமே இதுவரை கையொப்பம் இடவில்லை, மற்ற அனைத்துச் சட்டமுன்வடிவுகளுக்கும் கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. கையொப்பம் போடாததற்கும் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. எனவே ஆளுநரைக் குறைகூறுவது ஏற்புடையது அல்ல.

முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். `கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம்' என வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை தற்போது நிறைவேற்ற மறுத்துவருகிறார். இதன் காரணமாக அரசு ஊழியர்கள், செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்பது திட்டவட்டமாகிவிட்டது" என்றார்.