Published:Updated:

``சரத்குமார் வந்தால் பாஜக நிச்சயம் ஏற்கும்!" - கரு.நாகராஜன் பளிச்

கரு.நாகராஜன்

ஆ.ராசா எம்.பி-மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அந்த விவகாரம் மற்றும் சமகால அரசியல் நடப்புகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``சரத்குமார் வந்தால் பாஜக நிச்சயம் ஏற்கும்!" - கரு.நாகராஜன் பளிச்

ஆ.ராசா எம்.பி-மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அந்த விவகாரம் மற்றும் சமகால அரசியல் நடப்புகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Published:Updated:
கரு.நாகராஜன்

இந்து மதம் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க துணைச் செயலாளர் ஆ.ராசா எம்.பி-மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அந்த விவகாரம் மற்றும் சமகால அரசியல் நடப்புகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``ஆ.ராசா மட்டுமின்றி திருமாவளவன் போன்றோர் இந்தக் கருத்தை இதற்கு முன்னர் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இப்போது மட்டும் ஏன் வலுவான எதிர்ப்பு?’’

``அந்தந்த நேரங்களில் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பெரும்பான்மை மக்களைத் தொடந்து தலைகுனிவுக்கு ஆளாக்கிவருவதால் எங்கள் குரலும் இப்போது உரக்க இருக்கிறது. இதைச் சாதாரண வீரமணியோ அல்லது அவர் தொண்டர்களோ பேசியிருந்தால் மக்களும், ‘அவர்கள் அப்படித்தான்’ என்று விட்டிருப்பார்கள். ஆனால், ‘90% இந்துக்கள் உள்ள கட்சி எங்களுடையது’ என மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர் பேசும்போதுதான் அதை அம்பலப்படுத்துகிறோம்.”

``இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் மனுஸ்மிருதியில் இருந்துதானே குறிப்பிட்டிருக்கிறார்?’’

“நாம் இப்போது மனுஸ்மிருதிப்படியா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... இந்திய அரசியலமைப்புச் சட்டப்படிதானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... அல்லது அந்த நூல் பாடத்திட்டங்களில் ஏதும் இருக்கிறதா... அன்று இருந்த சூழலுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்து, பெரியவர்கள் ஏதாவது சொல்லியிருந்திருப்பார்கள். அன்றைக்கு அது பொருந்தக்கூடியதாக இருந்திருக்கும். அதையே இன்றைக்கு வரைக்கும் சொல்லி ஏன் மக்கள் உணர்ச்சியையும், இந்துக்களிடையே பிரிவினையையும் தூண்ட வேண்டும்?”

ஆ.ராசா
ஆ.ராசா

``ஆ.ராசா வைக்கும் வாதங்களுக்கு ‘விவாதிக்கலாம்’ என்று அழைப்புவிடும்போது, அதை எதிர்கொள்ளாமல் காவல்துறையில் புகாரளிப்பதெல்லாம், எங்கு விவாதத்துக்குப் போனால் தோற்றுவிடுவோம் என்கிற அச்சத்தினாலா?’’

“விவாதிக்க எங்கள் இந்து மதம்தான் கிடைத்ததா... இது முட்டாள்தனமில்லையா... தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற விவாதத்துக்கு வராமல் மதத்தைவைத்து விவாதிக்க அழைப்பது அசிங்கமாக இல்லையா...  தி.மு.க-வில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் நீங்களே, `இந்துக்கள் பெற்ற மகன் விபசாரியின் மகன்' என்று சொன்னால் என்ன நியாயம்... இதைப் போய் விவாதிக்க வெட்கமாக இருக்காதா... சூடு சொரணை உள்ளவன் விவாதிப்பானா... தமிழ்நாட்டில் இந்து மதம் குறித்து முன்பு இவர்கள் பேசியதையெல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு மக்கள் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டார்கள்.”

நரேந்திர மோடி, அமித் ஷா
நரேந்திர மோடி, அமித் ஷா

``தமிழ்நாட்டில் பா.ஜ.க ரூ.100 கோடி நிதி வசூலிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின்றனவே?’’

“நிதி வசூல் என்பது எல்லா கட்சிகளுக்கும் பொதுவானது. நிதி என்பது கட்சியின் செயல்பாட்டுக்கு மட்டுமல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்கும் தேவைப்படுகிறது. 100 கோடி ரூபாய் என்பது இலக்கு இல்லை. நிர்வாகிகளை உற்சாகப்படுத்த அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். மாநிலம் முழுவதும் கட்சிப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பல்வேறு மாவட்டங்களில் கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம். எனவே, அதற்கான நிதி திரட்டும் பணியாக இருக்கலாம். அவ்வாறு வசூல் செய்யும் நிதி, ‘நிதி வசூல் கமிட்டி’ மூலமே பெறப்படும். அதற்கென பொருளாளர் இருக்கிறார். நிதியை மீறி அநீதியாகவும் சில கட்சிகள் நிதி வசூல் செய்கிறார்கள். அப்படியல்லாமல் முறையான கணக்கு வழக்குகளோடு பா.ஜ.க நிதி வசூல் செய்துவருகிறது.”

அண்ணாமலை
அண்ணாமலை

`` `மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் கட்சியை வளர்க்காமல், விளையாட்டுப் போட்டிகள் என்று நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்று உங்கள் கட்சியினர் சிலரே விமர்சிக்கிறார்களே?’’

“ஓட்டு வாங்குவோம் என்பது முக்கியம் கிடையாது. நண்பர்களாக நெருங்கி வரும்போதுதானே திட்டங்கள் பற்றிச் சொல்ல முடியும்... நட்பு வட்டத்தில் அவர்களைக் கொண்டுவருவதற்கு விளையாட்டு நிச்சயம் பயன்படும். இளைஞர்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைமீது மிகப்பெரிய ஈர்ப்பில் இருக்கிறார்கள். ஒதுங்கி நின்று கிரேஸில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருவதற்கு விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறோம். அதன் ஒரு பகுதியாக கபடிப் போட்டி நடத்தியிருக்கிறோம். திரும்பாத இளைஞர்களை இன்று பா.ஜ.க பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறோம். விரைவில் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்போகிறது. அதனால் பெரிய மாற்றத்தை தமிழ்நாடு பார்க்கும்.”

சரத்குமார்
சரத்குமார்

``எத்தனையோ பேரை பா.ஜ.க-வில் இணைக்கிறீர்கள். உங்களின் உறவுக்காரர் சரத்குமாருக்கு எப்போது உறுப்பினர் கார்டு கொடுக்கப்போகிறீர்கள்?’’

``வந்தால் நிச்சயம் வரவேற்போம்... அவர் தனியாகக் கட்சி நடத்திக்கொண்டிருக்கும்போது நான் ஏதும் கருத்து சொல்ல முடியாது.”

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

`` `சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1,000 சதுர கிலோமீட்டர் இந்திய மண்ணை தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி’ என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?’’

``இதை ராகுல் காந்தி சொல்வதுதான் வேடிக்கை. பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நம் எல்லையில் சீனாவின் அத்துமீறலை துணிவுடன் எதிர்கொண்டார். அந்த நேரத்தில் இந்தியா, சீனா எல்லையில் போர் மூண்டுவிடுமோ என்று உலகமே உற்று நோக்கியது. அப்போது சீனத் தூதர்கள் இருவர் ராகுல் காந்தியைப் பார்த்துச் சென்றிருக்கிறார்கள். அதை மறுத்த ராகுல், அவர்கள் சீன இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்ட பிறகு ஒப்புக்கொண்டார். எனவே, இந்த தேசத்தின் துரோக பிம்பம்தான் ராகுல். காங்கிரஸ்காரர்களைப்போல் எல்லை பிரச்னையிலோ, தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கோ பா.ஜ.க அரசு என்றும் `லவ் லெட்டர்' எழுதாது. துணிவான நடவடிக்கையே இருக்கும்.”

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

``உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வில் பா.ஜ.க., இ.பி.ஸ் பக்கமா, ஓ.பி.எஸ் பக்கமா?’’

``இது குறித்து, ‘உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை’ என்று தலைவர் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறார். சீக்கிரம் அவர்கள் பிரச்னைகளெல்லாம் முடியும். அப்போது இது பற்றிய கேள்விக்கு பதில் கிடைக்கும்.”

``முடியும் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள். எப்படி பா.ஜ.க தலையிட்டு முடித்து வைக்கப்போகிறதா?’’

``தி.மு.க-கூட இப்படி ஒரு பழி போடாது. அப்படியெல்லாம் ஏதும் கிடையாது. எங்கள் திட்டத்துக்கான வேலை, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி  ஓடிக்கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கமிட்டி, மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டுசெல்வது எனப் பரபரப்பாக இருக்கிறோம். எனவே, எங்கள் இலக்கை அடையவே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதன் பலன் வரும் தேர்தல்களில் தெரியும்.”