புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா மே 28-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, `சாவர்க்கர் பிறந்த தினமான மே 28’, `குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை’, `மத்திய அரசு அரசியலமைப்பு உரிமையை மதிக்கவில்லை’, `பிரதமருக்கு பதிலாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் கட்டடத்தைத் திறக்க வேண்டும்’ எனச் சர்ச்சைகள் எழுந்து பேசுபொருளாகியிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ``புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்கலாமா, அது முறையா, குடியரசுத்தலைவர்தானே திறந்து வைக்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர் எதிர்க்கட்சியினர். நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவரே என்றும், நாடாளுமன்ற அவைகளின் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவரே என்றும், பழங்குடியினத்தவர் என்பதால் தான் ஓதுக்கிறார்கள், அவமானப்படுத்திகிறார்கள் என்றும் மலிவான அரசியலை முன்வைத்து, இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றைத் தெரிவிப்பதுபோல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
1975-ம் ஆண்டு நாடாளுமன்ற இணைக் கட்டடத்தை (Annexe) திறந்துவைத்தவர் இந்திரா காந்திதானேயன்றி, அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அல்ல. இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் பக்ருதீன் அலி அகமது அவர்களை ஒதுக்கி, அவமானப்படுத்தியதா காங்கிரஸ்?
1987-ம் ஆண்டு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியது அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திதானேயன்றி, அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அல்ல. தமிழர் என்பதால்தான் ஆர்.வெங்கடராமன் அவர்களை ஒதுக்கியதா காங்கிரஸ்?

கடந்த தி.மு.க ஆட்சியில், மார்ச் 13, 2010-ம் ஆண்டு ஓமந்தூரார் மாளிகையில் புதிய தமிழக சட்டசபைக் கட்டடத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில் திறந்துவைத்தார்கள் என்பதை நினைவில்கொள்ளவும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத்தலைவர்தான் திறக்க வேண்டுமென்றால், புதிய சட்டசபைக் கட்டடத்தை, சட்டமன்றத்தின் தலைவர் அன்றைய ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர்தானே திறந்திருக்க வேண்டும்... பிரதமரும், காங்கிரஸ் கட்சித் தலைவரும் எதற்கு அழைக்கப்பட்டார்கள்... அன்று ஒரு பெண் குடியரசுத் தலைவரையும், சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த ஆளுநரையும் அவமானப்படுத்தியது ஏன் என்று திமுக விளக்குமா?
தெலங்கானாவில் புதிய சட்டசபை மற்றும் புதிய தலைமைச் செயலகத்தை அந்த மாநிலத்தின் முதல்வரே திறந்துவைத்ததோடு, அரசியலமைப்புச் சட்டப்படி அந்த மாநிலத்தின் தலைவரான ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அழைக்காது இருந்தபோது வாய் மூடி மௌனம் காத்தவர்கள், இப்போது நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திறக்கிறார் எனும்போது மூடிய வாயைத் திறந்து ஓலமிடுவது ஏன்... ஒரு பெண், அதிலும் ஒரு தமிழர் என்பதால்தான் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை ஒதுக்கி, அவமானப்படுத்தியதா அந்த மாநில அரசு என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காதது ஏன்?

எது நடைமுறையோ அதை முறையே செய்துவருகிறது பாரதிய ஜனதா கட்சி அரசு. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கேலி பேசிய எதிர்க்கட்சிகள், குறை சொன்ன எதிர்க்கட்சியினர், பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுகிறார் என்று கதைவிட்டுக்கொண்டிருந்த மலிவான அரசியல்வாதிகள் இன்று பொழுது போகாமல் பொங்கியெழுந்து அரசியலமைப்புச் சட்டம் குறித்து நமக்குப் பாடம் எடுப்பது விந்தையிலும் விந்தை.
தங்களுக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு அநியாயம் என்ற அக்கப்போர் அரசியலைக் கைவிட்டு ஆக்கபூர்வ அரசியலை முன்னெடுப்பதே எதிர்க்கட்சிகளுக்குச் சிறப்பை தரும்” என்றிருக்கிறார் காட்டமாக!