Published:Updated:

தமிழகத்தில் தாமரை... மிஷன் 234

அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

- பி.ஜே.பி-யின் ‘திரிபுரா ஸ்டைல்’ அட்டாக்!

தமிழகத்தில் தாமரை... மிஷன் 234

- பி.ஜே.பி-யின் ‘திரிபுரா ஸ்டைல்’ அட்டாக்!

Published:Updated:
அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

த்து வருடங்களுக்கு முன்னர், ஹரியானா மாநிலத்தில் சிறு கட்சியாக மட்டுமே இருந்தது பா.ஜ.க. 2009-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது சதவிகித வாக்குகளுடன் நான்கு தொகுதிகளில் மட்டுமே அங்கு வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த ஐந்து வருடங்களில் அமைப்புரீதியாக அங்கு பா.ஜ.க செய்த மாற்றங்களும், ஜாட் சமூகம் அல்லாத பிற சமூகத் தலைவர்களையும் கட்சிக்குள் கொண்டுவந்த ‘ஹைஜாக்’ நடவடிக்கைகளும் 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை 33.3 சதவிகித வாக்குகளுடன் ஆட்சியைப் பிடிக்கவைத்தன. அக்டோபர் 21-ம் தேதி ஹரியானாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று தெம்பாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது பா.ஜ.க!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கே பிரமித்தால் எப்படி? ஹரியானாவில் பி.ஜே.பி எடுத்தது சிங்கிள்ஸ் மற்றும் டபுள்தான்... ஆனால், திரிபுராவில்தான் அடித்ததெல்லாம் சிக்ஸர் மட்டுமே! அங்கு நடைபெற்ற 2008, 2013 சட்டமன்றத் தேர்தல்களில் வெறும் 1.5 சதவிகித வாக்குவங்கியை வைத்திருந்த பா.ஜ.க., போட்டியிட்ட 50 தொகுதிகளில் 49-ல் டெபாசிட் இழந்தது. 2013-க்குப் பிறகு கட்சியை அமைப்புரீதியாக பலப்படுத்தியவர்கள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆட்களை இழுத்துக்கொண்டனர். 25 வருட கம்யூனிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, தங்களால் மட்டுமே முடியும் என மக்களிடம் கருத்தை விதைத்தனர். 2018-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 52 மத்திய அமைச்சர்கள் பிரசாரத்துக்காக திரிபுராவுக்கு அனுப்பப்பட்டனர். விளைவு, அந்தத் தேர்தலில் 43.4 சதவிகித வாக்குகளைப் பெற்று பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. ஐந்தே வருடங்களில் 34,000 வாக்குகளிலிருந்து பத்து லட்சம் வாக்குகளாக பி.ஜே.பி வளர்ச்சி பெற, திரிபுராவில் அவர்கள் முன்னெடுத்த தந்திர அரசியல்தான் பிரதான காரணம்.

இதே வழிமுறையைத்தான் தமிழகத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. முதற்கட்டமாக அமைப்புரீதியாகக் கட்சியைப் பலப்படுத்துவது அவர்களின் திட்டம். அம்பேத்கரைப் பற்றி பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் (இதுவரை 18 முறை) புகழ்ந்து பேசியுள்ளார். தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களின் வாக்குவங்கி 17 சதவிகிதமாக உள்ள நிலையில், மோடியின் அம்பேத்கர் புகழுரை அந்தச் சமூகத்தினரிடையே கட்சியின் செல்வாக்கு வேரூன்ற உதவும் என்பது அவர்களின் திட்டம். இதுபோக வன்னியர், நாடார், முத்தரையர் சமூகத்தினரையும் பா.ஜ.க குறிவைத்துள்ளது. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி பின்னால் கவுண்டர்களும், டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் பின்னால் முக்குலத்தோரும் அணிதிரளும்பட்சத்தில், அந்தச் சமூகத்தைத் தவிர்த்த, பிற சமூக வாக்குவங்கிகளையும் ஒருங்கிணைக்க நினைக்கிறது பா.ஜ.க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிற கட்சிகளில் வலுவாக உள்ளவர்கள் மற்றும் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களை, தங்கள் கட்சிக்குள் இழுக்கத் திட்டமிட்டுள்ளனர். தர்மபுரி முல்லைவேந்தன், முன்னாள் அமைச்சர் கே.பி.ராமலிங்கம், தொட்டியம் ராஜசேகர், தஞ்சாவூர் செல்வராஜ், அ.தி.மு.க-வின் ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர், ஓர் ஆன்மிகவாதி என பி.ஜே.பி-யின் பட்டியலில் உள்ளவர்கள் ஏராளம். இதுபோக... திரிபுரா பாணியில், ஏற்கெனவே உள்ள மற்றொரு கட்சியின் கட்டமைப்பு, ஆள்பலத்தையும் தனதாக்கிக்கொள்ளும் திட்டமும் கையில் இருக்கிறது.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இன்னொரு பக்கம் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் 60 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது, 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குள் 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தி ஆட்சியைப் பிடிப்பது ஆகியவற்றை திட்டங்களாக வைத்துள்ளனர். இந்த ஏழு வருட செயல்திட்டத்துக்கு, குறிப்பிட்ட சிலரை தளகர்த்தர்களாக நியமித்து வேலையை ஆரம்பித்துள்ளது பி.ஜே.பி மேலிடம்.

பி.ஜே.பி ஏற்பாடு செய்த தேச ஒற்றுமைப் பிரசாரக் கூட்டம், சமீபத்தில் ஓசூரில் நடைபெற்றது. மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷான் ரெட்டி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில் பேசிய கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி-யும் பி.ஜே.பி நிர்வாகியுமான நரசிம்மன், ‘அடுத்த தேர்தலில் பி.ஜே.பி-தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். பாலகிருஷ்ணன் போன்றோர் பி.ஜே.பி-க்கு வந்து மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்’ என்று பேசியுள்ளார். நரசிம்மனின் இந்தப் பேச்சு அ.தி.மு.க-வில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் பி.ஜே.பி செயல்தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துவிட்டு வந்த நரசிம்மனிடம் பேசினோம். ‘‘சீனப் பிரதமரை மாமல்லபுரத்துக்கு அழைத்துவந்து, தமிழர்களின் கலைத்திறனையும், தொழில்வளத்தையும் உலகறியச் செய்கிறார் மோடி. ரஷ்யாவுடன் போடப்பட்டுள்ள கடல்வணிக ஒப்பந்தத்தின்படி, சென்னை துறைமுகம் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையப்போகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில், தமிழில் பேசி நமது மொழிக்கான அங்கீகாரத்தை வழங்குகிறார். முத்ரா திட்டம், க்ளீன் இந்தியா திட்டம், மக்கள் மருந்தகத் திட்டம் என மத்திய அரசின் எவ்வளவோ சமூகநலத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன.

ஆனால், இங்கு உள்ள தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் தவறான பிரசாரத்தைக் கட்டமைக்கின்றன. இனி எங்களுக்கு வேலையே, மோடி அரசின் திட்டங்களை 234 தொகுதிகளிலும் எடுத்துச் செல்வதுதான். தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மூலமாக பிரசாரம் செய்ய

விருக்கிறோம்” என்றவரிடம், தமிழகத்தில் நிலவும் பா.ஜ.க எதிர்ப்பு அலை குறித்து கேட்டோம்.

‘‘அது ஊடகங்களால் கட்டப்பட்ட பிம்பம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மேற்குவங்கத்தில் பா.ஜ.க பெரிய கட்சி கிடையாது. 2011 வரை 35 வருடங்கள் கம்யூனிஸ்டுகள்தான் அந்த மாநிலத்தை ஆண்டனர். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆள்கிறது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், வெறும் 4.1 சதவிகிதமாக இருந்த பி.ஜே.பி-யின் வாக்குவங்கி, 2016-ம் ஆண்டு தேர்தலில் 10.3 சதவிகிதமாக உயர்ந்தது. மூன்று எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்துக்கு அனுப்பினோம். நடந்து முடிந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40.23 சதவிகித வாக்குகள் மூலம், 18 எம்.பி-க்களைப் பெற்றுள்ளது. கடந்த ஒன்பது வருடங்களில், அந்த மாநிலத்தில் அமைப்புரீதியாக நாங்கள் செய்த மாற்றங்கள், இன்று பலன் அளிக்கின்றன.

திரிபுராவில் பூஜ்ஜியம் நிலையிலிருந்து, இன்று 35 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சியைப் பிடித்துள்ளோம். திரிபுரா, ஹரியானா, மேற்குவங்க மாநிலங்களில் எங்களின் திட்டம் வெற்றியடையும்போது, எங்களது ‘மிஷன் 234’ ஏன் தமிழ்நாட்டில் வெற்றி அடையாது? தமிழக மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம். இதை மக்களிடம் புரியவைத்தாலே போதும். எங்களுக்கு நல்லவர்களுடன் வல்லவர்களும் அவசியம். தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஆட்சியமைக்கும். வரும் காலங்களில் திராவிட, தமிழ்த் தேசிய அரசியல் தமிழகத்தில் எடுபடாது” என்றார்.

திட்டம்போட்டு ஜெயிப்பதில் கில்லாடி என்பதை நிரூபித்துக்கொண்டேதான் இருக்கிறது பா.ஜ.க. ஆனால், தமிழகத்தில்தான் அதன் பாச்சா இதுவரையில் பலிக்கவில்லை. அதேசமயம், இனிமேலும் பலிக்காது என்றே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் சூழலில், பா.ஜ.க அடுத்தடுத்து நகர்த்தவிருக்கும் காய்கள்தான் அதை தீர்மானிக்கும்!

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘‘ `பெரியாரின் மண்’ என்றே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படித்தான் திரிபுரா, மேற்குவங்கம் எல்லாம் `புரட்சி மண்’ என்றே பேசிக்கொண்டிருந்தன. தற்போது அங்கெல்லாம் பா.ஜ.க கொடி பறக்கிறது. இங்கேயும் அதுபோன்ற திட்டங்களுடன் களம் இறங்கியிருக்கும் அந்தக் கட்சியை, உங்களால் எதிர்கொள்ள முடியுமா?’’ - இப்படியொரு கேள்வியை சில எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கேட்டோம். அவர்களின் பதில்கள் இங்கே...

‘‘கொக்கு பிடித்த கதைதான்!’’

‘‘ஹஹ்ஹாஹ்ஹா..! `கொக்கு தலையில வெண்ணெய்யை வெச்சு, அது கண்ணை மூடும்போது பிடிச்சுக்கலாம்’னு ஒரு முட்டாள் சொன்னானாம். அதுபோல, ரோட்டுல போற வர்றவங்கள கட்சியில சேர்த்து காமெடி பண்ணிட்டு இருந்தவங்க, இப்ப ஆட்சியைப் பிடிக்கப்போறோம்னு சொல்லிட்டிருக்கிறது வெட்டிக்கதை. இது, பெரியார் மண். மற்ற மாநிலங்களை மாதிரியில்ல. அவங்க கனவு, தூங்கி எழுந்துட்டா கலைஞ்சுடும்.’’

- துரைமுருகன், பொருளாளர், தி.மு.க.

துரைமுருகன், மல்லை சத்யா, பாலகிருஷ்ணன், சி.ஆர்.சரஸ்வதி, வன்னியரசு
துரைமுருகன், மல்லை சத்யா, பாலகிருஷ்ணன், சி.ஆர்.சரஸ்வதி, வன்னியரசு

‘‘ட்ரோஜன் ஹார்ஸ் திட்டம் பலனளிக்காது!’’

‘‘செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் தலைவர் வைகோ பேசும்போது, ‘டிராய் நகரப் போரில் தோற்றுவிட்டதாக கிரேக்கர்கள் அறிவித்து, நகரின் வாயலில் மரக்குதிரை ஒன்றை வைத்திருப்பார்கள். அப்போது வெளியே வந்த டிராய் நகரின் அரசர் மரியம், அந்த மரக்குதிரையை நகருக்குள் கொண்டுசெல்வார். வெற்றிக் களியாட்டங்கள் ஓய்ந்த பிறகு, நள்ளிரவில் அந்த மரக்குதிரையில் இருந்து வெளியே வந்த கிரேக்க வீரர்கள், தூங்கிக்கொண்டிருந்த டிராய் மக்களைக் கொன்று, அந்த நகரையும் தீயிட்டுக் கொளுத்தினர். இதுபோலத்தான் பா.ஜ.க தமிழ்நாட்டிலும் காலூன்ற முயல்கிறது’ என்று பேசினார். படைத்த கடவுளையே வேண்டாம் என்று சொல்லி புறக்கணித்த தமிழர்கள், பா.ஜ.க-வைப் புறக்கணிப்பது பெரிய விஷயமல்ல. தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்கிற கொதிப்பு எல்லோரிடமும் இருக்கிறது. அவர்களிடம் திட்டமிருக்கலாம். ஆனால் தோல்வியைத்தான் தழுவுவார்கள்.”

- மல்லை சத்யா, துணை பொதுச்செயலாளர், ம.தி.மு.க.

‘‘மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டது!’’

‘‘ஹரியானா, திரிபுரா போன்ற இடங்களில் பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்த சூழ்நிலை வேறு. மோசமான பொருளாதார நெருக்கடி, ஒற்றைக் கலாசாரத்தைக் கொண்டுவருவது, வடமாநிலங்களில்கூட கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மோடிமீது முன்பிருந்த ஆதரவு, செல்வாக்கு சரிந்துவிட்டது. வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு, பா.ஜ.க-வை கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வே கூப்பிடவில்லையே. அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், விழும் ஓட்டும் விழாது என்பது அவர்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் வேரூன்ற நினைக்கும் அந்த முயற்சி பலனளிக்காது!’’

- பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.எம்.

‘‘கட்டாயப்படுத்தினால் தோல்விதான்!’’

‘‘திராவிடக் கட்சிகளை அவ்வளவு எளிதாக தமிழ்நாட்டிலிருந்து அகற்ற முடியாது. அம்மா இருந்தபோது அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் தி.மு.க-வுக்கும், அங்கு இருப்பவர்கள்

அ.தி.மு.க-வுக்கும் என கட்சி தாவுவார்கள். யாரும் தேசிய கட்சிக்குப் போக மாட்டார்கள். கோவா, கர்நாடகத்தில் செய்தது போன்று தங்கள் திட்டத்தை கட்டாயப்படுத்திச் செய்ய பா.ஜ.க முயன்றால், தமிழ்நாட்டில் அது தோல்வியில்தான் முடியும்!’’

- சி.ஆர்.சரஸ்வதி, கொள்கை பரப்புச் செயலாளர், அ.ம.மு.க.

‘‘மக்களின் மனதை ஒருபோதும் வெல்ல முடியாது!’’

``வடமாநிலத்தில் பா.ஜ.க கையாண்ட மதவெறி அரசியல், தமிழகத்தில் பொய்த்துவிட்டது. இப்போது புதிய உத்தியைப் புகுத்த முயற்சி செய்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் என்ன முயற்சி எடுத்தார்களோ, அவை எல்லாம் தமிழருக்கும் தமிழ் மண்ணுக்கும் எதிரானவை. பெரியார் சிலையை உடைப்போம் எனச் சொல்வது உட்பட இந்தி திணிப்பு, ஸ்டெர்லைட், எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் என தமிழர்களின் உணர்வுக்கு எதிரான அரசியலைத்தான் அவர்கள் செய்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு தலைவர்கூட கிடைக்காத பரிதாபநிலையில்தான் பா.ஜ.க உள்ளது. தமிழ் மக்கள் மனதை ஒருபோதும் அந்தக் கட்சி வெல்ல முடியாது.

- வன்னியரசு, துணை பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism