Published:Updated:

அறுபது தொகுதிகள்... அதிரடி முடிவுகள்... பா.ஜ.க-வின் பரபர வியூகங்கள்!

பா.ஜ.க
பிரீமியம் ஸ்டோரி
News
பா.ஜ.க

அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை உருவாக பா.ஜ.க தலைமை விரும்பவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தலைவிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் பா.ஜ.க-வின் பிரதான இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் வாக்குவங்கியை அதிகரித்துக்கொண்டு, தமிழகத்தில் வலுவான கட்சியாகக் காலூன்றிவிட பா.ஜ.க முயல்கிறது. அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியைத்தான், இந்தச் சட்டமன்றத் தேர்தல் வாயிலாக முன்னெடுக்கவிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழகத்தில் 200 குடியிருப்புகள் உள்ள ஒவ்வோர் ஊரிலும் பா.ஜ.க கொடிக்கம்பம் நடப்படுகிறது. மோடியின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் கிராமம்தோறும் ஒட்டப்பட்டன. கடந்தகாலத்தைவிட கட்சி இப்போது வளர்ச்சி பெற்றிருக்கிறது. இன்று தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி பா.ஜ.க-தான். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது 2.9 சதவிகித வாக்குகள் பெற்ற பா.ஜ.க., தற்போது 7 சதவிகித வாக்குவங்கியை வைத்திருப்பதாக நம்புகிறோம். இந்தச் சதவிகிதத்தின் அடிப்படையில்தான் அ.தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம்.

சென்னையில் ஆலந்தூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, வில்லிவாக்கம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள், தென்காசி, ஆலங்குளம், ராதாபுரம், பெருந்துறை, திருவள்ளூர், மதுரை தெற்கு, கோவை தெற்கு மற்றும் வடக்கு, சேலம் வடக்கு மற்றும் தெற்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி தொகுதிகள், ராமநாதபுரத்திலுள்ள நான்கு தொகுதிகள், சிவகங்கையில் மூன்று தொகுதிகள், திருப்பூரில் ஆறு தொகுதிகள் உள்ளிட்ட 60 தொகுதிகள் பா.ஜ.க-வின் வெற்றிப் பட்டியலில் இருக்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வெறும் ஐந்து தொகுதியை ஒதுக்கிவிட்டு, 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு எங்கள் ஆதரவைப் பெற்றுக்கொண்டதுபோல இந்தமுறை அ.தி.மு.க எங்களை ஏமாற்ற முடியாது. எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால், தனித்துப் போட்டியிடும் முடிவிலிருக்கிறோம். இதுதான் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க-வின் வியூகம்.

தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு திராவிடக் கட்சிகள் மீதும் சவாரி செய்துதான் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுவருகிறது. 1991 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கினார். ராஜீவ் காந்தி மரணித்த அனுதாப அலையில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை அதிகாரி ஒருவர் மூலமாக காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதா முயல்வதை அறிந்தவுடன், காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்குவதாக இருந்த கருணாநிதி, பதினைந்து தொகுதிகளை ஒதுக்கினார். அவற்றில், எட்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆக, திராவிடக் கட்சிகளின் மீது மாறி மாறி சவாரி செய்துதான், தமிழகத்தில் அதிகப்படியான எம்.பி-க்களை காங்கிரஸ் பெறுகிறது. இதை உடைப்பதுதான் பா.ஜ.க-வின் நீண்டநாள் திட்டம்.

அறுபது தொகுதிகள்... அதிரடி முடிவுகள்... பா.ஜ.க-வின் பரபர வியூகங்கள்!

இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றை வீழ்த்தினால் மட்டுமே, காங்கிரஸ் இதுநாள் வரை நடத்திவந்த பூச்சாண்டி அரசியல் முடிவுக்கு வரும். அ.தி.மு.க வலுவில்லாமல் போய்விட்டால், தி.மு.க கொடுப்பதை காங்கிரஸ் வாங்கிக்கொண்டுதானே ஆக வேண்டும்...

அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை உருவாக பா.ஜ.க தலைமை விரும்பவில்லை. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி அதற்கு முயன்றால், ஓ.பன்னீர்செல்வம் மூலமாக இரட்டை இலையை முடக்குவதற்கும் டெல்லி தயாராக இருக்கிறது.

அருந்ததியர், தேவேந்திர குல வேளாளர், முத்தரையர், பறையர், கவுண்டர், வன்னியர் ஆகிய சமூகங்களை ஒருங்கிணைத்த சமூக அரசியலை பா.ஜ.க கையில் எடுக்கப்போகிறது. இந்தச் சமூகங்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி, அதை வாக்குவங்கியாக நிலைக்கவைப்பதுதான் திட்டம்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்திலுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பா.ஜ.க வென்றது. இதன் பின்னணியில் இருந்தவர் சுனில் தியோதர். அந்தத் தேர்தலின்போது, ஒரு லட்சம் தெருமுனைக் கூட்டங்களை உ.பி-யில் நடத்தி மோடியின் பாராட்டைப் பெற்றவர். மணிப்பூரில் 2.1 சதவிகிதமாக இருந்த பா.ஜ.க-வின் வாக்கு வங்கியை ஐந்தே வருடங்களில் 36.3 சதவிகிதமாக உயர்த்தி ஆட்சிக்கட்டிலில் பா.ஜ.க-வை அமரவைத்தவர். இவர்தான் முரளிதர ராவுக்கு பதிலாக, பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளராகத் தமிழகத்திற்கு வரவிருக்கிறார். அதேபோல, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தமிழகக் கட்சி விவகாரங்களைக் கையாளப்போகிறார். இவர்கள் இருவரின் வரவுக்குப் பின்னர், தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழும்” என்றார்கள்.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் களம், பல சுவாரஸ்யக் காட்சிகளைக் காணப்போகிறது.

***

- ந.

‘அண்ணாமலை’ கணக்கு!

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஸ்மிருதி இரானி. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதே அமேதி தொகுதியில் ராகுலை வீழ்த்தி, கணக்கை நேர் செய்தார் ஸ்மிருதி. இதேபாணியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலையைக் களமிறக்க முடிவுசெய்திருக்கிறதாம் பி.ஜே.பி.

ஊர் சுற்றுவது நோக்கமல்ல!

சமீபத்தில் பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை. இது தமிழக பா.ஜ.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்துப் பேசிய டெல்லி பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், ``பழைய தலைவர்களில் தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமே கட்சி வளர்ச்சிக்கு உளமார முயன்றார் என டெல்லி கருதுகிறது. அதற்குப் பரிசாகத்தான் தெலங்கானா ஆளுநர் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. மற்ற தலைவர்களெல்லாம் கட்சியை ஒரு காமெடிப் பொருளாக மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டனர். அவர்களின் பிடியிலிருந்து கட்சியை மீட்டெடுப்பதுதான் டெல்லியின் முதல் ஆக்‌ஷன். அதற்காகத்தான் பழைய நிர்வாகிகள் யாருக்கும் தேசிய அளவில் பொறுப்பு அளிக்கப்பட வில்லை. அதேசமயம், எல்.முருகன், அண்ணாமலை எனப் புதியவர்கள் பலர் கட்சிக்குள் மாநில நிர்வாகப் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். தேசிய அளவில் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு இவர்களுக்கு அனுபவம் போதாது. தமிழகத்தில் கட்சியை வலுவாகக் காலூன்றவைப்பதுதான் டெல்லியின் திட்டமே தவிர, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தேசிய அளவில் ஒரு பொறுப்பைக் கொடுத்து ஊர் சுற்றவைப்பது அல்ல” என்றார்.