அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

நித்தியானந்தாவுக்காக நான் நியாயம் கேட்கிறேன்! - பொங்கும் சூர்யா சிவா

சூர்யா சிவா
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா சிவா

நாங்கள் அவரை ஆதரித்திருந்தால், அவர் இந்தியாவுக்குள்தானே இருந்திருக்க வேண்டும்... எதற்கு ஓடி ஒளிய வேண்டும்...

இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தாவிடமிருந்து, ‘தர்ம ரக்‌ஷகா’ விருதுபெற்றிருக்கிறார் திருச்சி சிவாவின் மகனும், தமிழக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு பொதுச் செயலாளருமான சூர்யா சிவா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“என்ன காரணத்துக்காக உங்களுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டதாம்?”

“தொடர்ந்து இந்து மதத்தை ஆதரித்து உலக அளவில் நான் பல கருத்துகளைப் பேசிவருவதால் சுவாமிஜி எனக்கு இந்த விருதைக் கொடுத்திருக்கிறார். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் இது. ரொம்பப் பெருமையாக இருக்கிறது.”

சூர்யா சிவா
சூர்யா சிவா

“விருதோடு சேர்ந்து, நித்தியானந்தா கோடிக்கணக்கில் பரிசுத்தொகையும் கொடுத்ததாகப் பேசிக்கொள்கிறார்களே?”

“எங்கள் தாத்தா காலத்திலேயே நாங்கள் விவசாய நில புலன்களோடு வசதியாக வாழ்ந்த குடும்பம். 50 வருட அரசியல் வாழ்க்கையில், ஏறத்தாழ முப்பது வருடங்கள் என் அப்பா எம்.பி-யாக இருக்கிறார். நான் பா.ஜ.க-வுக்குப் போனால் பணத்துக்காகச் சென்றேன் என்றும், நித்தியானந்தா விருதுகொடுத்தால் அவரிடமும் பணம் வாங்கிவிட்டேன் என்றும் சொல்வது அபத்தமாக இருக்கிறது.”

“நித்தியானந்தா உங்களைத் தொடர்புகொண்டு பேசினாரா?”

“விருது பெறுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாக 2 நிமிடங்கள் மட்டுமே பேசினேன். ‘உங்களின் தீவிர பக்தன் நான். உங்களைப் பார்ப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்’ என்றேன். அதற்கு சிரித்துக்கொண்டே, ‘நன்றி’ என்றவர் தொடர்ந்து, ‘நல்லதே நடக்கும். அரசியல் பயணம் நல்லபடி தொடரும். வாழ்த்துகள்’ என்றார்.”

“உங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிந்துதான் இந்த விருதை வாங்கினீர்களா?”

“தலைவர் அண்ணாமலை அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதால் அவருடன் பேச முடியவில்லை. இருந்தாலும் அவர் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் என்னை ஃபாலோ செய்கிறார். அதனால், கண்டிப்பாகப் பார்த்திருப்பார். வரும் 13-ம் தேதி அவர் சென்னைக்கு வந்ததும், நேரில் இது பற்றித் தெரிவிப்பேன்.”

“கைலாசா பற்றி உங்களுக்கு ஏதாவது விவரம் தெரிந்ததா... அங்கே போகும் திட்டம் இருக்கிறதா?”

“நித்தியானந்தா கைலாசா நாட்டில்தான் இருக்கிறார். நான் ‘ஜூம் கால்’ மூலம் பேசியபோதுகூட, அந்த நாட்டுக்கென பல அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் சிறுவயது முதலே நித்தியானந்தாவின் தீவிர பக்தன். வெளிநாடுகளில் இருக்கக்கூடிய பல பிரபலங்கள் அவருடைய தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். இப்போதும் அவர்தான் எனது ஆன்மிக குரு, நான் அவருக்கு ஆன்மிகத் தொண்டன். கைலாசா செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகச் சென்றுவருவேன்.”

நித்தியானந்தாவுக்காக நான் நியாயம் கேட்கிறேன்! - பொங்கும் சூர்யா சிவா

“சிறுவயது முதலே பக்தன் என்கிறீர்கள்... எத்தனை முறை அவரை நேரில் சந்தித்திருக்கிறீர்கள்?”

“இல்லையே... இல்லையே... (ஆதங்கப் படுகிறார்). அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், வீட்டில் நித்தியானந்தாவின் படத்தை வைத்திருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் அவர் முகத்தில்தான் விழிப்பேன்.”

“தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு வக்காலத்து வாங்குவதாக விமர்சனங்கள் வருகின்றனவே?”

“வக்காலத்து என்று அதைச் சொல்லாதீர்கள். அவருக்காக நியாயம் கேட்கிறேன் என்று சொல்லுங்கள். தலைமறைவாக இருப்பதாலேயே அவரைக் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. நித்தியானந்தாவின் மீதான புகார்களெல்லாம் சித்திரிக்கப்பட்டவை. பாலியல் புகாருக்குப் பின்னாலும்கூட அரசியல் இருக்கிறது. தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தவறு என்று நிரூபித்து விட்டுத்தான் அவர் வெளியே வருவார்...”

“கடைசிக் கேள்வி... அப்படியென்றால் பா.ஜ.க நித்தியானந்தாவை ஆதரிக்கிறதா?”

“முதலிலேயே இந்தக் கேள்வியைக் கேட்பீர்கள் என்று நினைத்தேன். நாங்கள் அவரை ஆதரித்திருந்தால், அவர் இந்தியாவுக்குள்தானே இருந்திருக்க வேண்டும்... எதற்கு ஓடி ஒளிய வேண்டும்... அவர் மேலான குற்றச்சாட்டுகளைப் பொய் என நிரூபித்துவிட்டுத்தான் நித்தியானந்தா இந்தியாவுக்குத் திரும்புவார். 100 சதவிகிதம் அவர் வெளியே வருவார். அவர் மீண்டு வருவார்... மீண்டும் வருவார்.”