Published:Updated:

“பா.ஜ.க-வில் இரண்டு குழுக்கள் இருக்கின்றன!’’

திருச்சி சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சி சூர்யா

அடித்துச் சொல்கிறார் திருச்சி சூர்யா

ஆடியோ லீக், ஆபாசப் பேச்சு, அக்கா-தம்பி சென்டிமென்ட், ஆறு மாதங்கள் சஸ்பெண்ட்’ என தடதடத்துவந்த தமிழக பா.ஜ.க-வில், ‘கட்சியிலிருந்தே விலகுகிறேன்’ என்று தடாலடி காட்டியிருக்கிறார் திருச்சி சூர்யா. போதாக்குறைக்கு, ‘அண்ணாமலை சுதந்திரமாகச் செயல்பட எல்.முருகன், கேசவ விநாயகம் இருவரும் ஒத்துழைக்க வேண்டும்’ எனவும் கூறியிருக்கிறார். அவரின் கருத்து கட்சிக்குள் கலகத்தை உருவாக்கியிருக்கும் சூழலில், அது குறித்து அவரிடமே பேசினோம்.

“பா.ஜ.க-வில் இரண்டு குழுக்கள் இருக்கின்றன!’’

“அண்ணாமலை ஆதரவாளரான நீங்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் ஆகியோருக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாகச் சொல்கிறார்களே..?’’

“அப்படியெல்லாம் யாருக்கு எதிராகவும் நான் செயல்படவில்லை. அண்ணாமலைதான் கட்சியின் மாநிலத் தலைவர் என்கிற முறையில் அவர் சொல்வதைக் கேட்டு வேலைகளைச் செய்து வருகிறோம். ஆனால், அண்ணாமலைக்கு எதிராக இருப்பவர்களுக்கு இது பிடிக்கவில்லை. எனவே, டெய்ஸியுடன் நான் பேசிய ஆடியோவை லீக் செய்து என்னைக் காலி செய்யப் பார்த்தார்கள். இதுதான் நடந்த உண்மை.’’

“அப்படியென்றால், ஆடியோ விவகாரத்தில், நீங்கள் தவறாக எதுவும் பேசவில்லை என்கிறீர்களா?”

“நான் பேசியது தவறுதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எதனால் அப்படிப் பேசினேன் என்பதையும் பார்க்க வேண்டுமல்லவா... முதலில் என் குடும்பத்தினரைப் பற்றித் தவறாகப் பேசி ஆடியோ அனுப்பியதே டெய்ஸிதான். இந்தப் பிரச்னை அண்ணாமலையிடம் சென்றபோதே, என்னையும் டெய்ஸியையும் அழைத்துப் பேசி கண்டித்தார். அதன் பிறகு இந்த ஆடியோ கேசவ விநாயகம் கைகளுக்குப் போனதால்தான், பொதுவெளியில் லீக்காகியிருக்கிறது.”

‘‘ஆடியோவில், கேசவ விநாயகத்தை நீங்கள் தவறாகப் பேசியிருக்கும் நிலையில், அவரே எப்படி அதை லீக் செய்வார்?”

“பா.ஜ.க-வில் ஒருவரைக் காலி செய்ய வேண்டுமென்றால், ஆபாச வீடியோ, ஆடியோ, சிறுபான்மையினர் என ஏதாவது ஒரு விஷயத்தைக் கையில் எடுக்கிறார்கள். நான் கேசவ விநாயகத்துக்கு எதிராக இருப்பதால், என்னை கார்னர் செய்ய ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.”

“பா.ஜ.க-வில் இரண்டு குழுக்கள் இருக்கின்றன!’’

“அப்படியென்றால், தமிழக பா.ஜ.க இரு குழுக்களாகச் செயல்படுகிறது என்கிறீர்களா?”

“அதில் என்ன சந்தேகம்... அண்ணாமலை வந்த பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், அவரைச் செயல்படவிடாமல் கேசவ விநாயகம் சில காய்களை நகர்த்துகிறார். அதற்கு எல்.முருகன் டெல்லியில் லாபி செய்கிறார்.”

“அண்ணாமலைக்கும் கேசவ விநாயகத்துக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்னை?’’

“பா.ஜ.க-வில் தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. எந்தவொரு முடிவுக்கும் அமைப்புச் செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும். அமைப்புச் செயலாளர் பொறுப்பில் ஆறு ஆண்டுகளாக இருந்துவரும் கேசவ விநாயகம், எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில்வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதிலிருந்தே தெரிந்திருக்கும், அண்ணாமலைக்கு எந்த வகையிலெல்லாம் இடையூறுகள் இருக்கின்றன என்பது.’’