Published:Updated:

"அண்ணாமலை வந்த பிறகு, பழைய நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை..!" - திமுக-வில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி

அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் சிவபாலன்

``அண்ணாமலை மாநில நிர்வாகியான பிறகு பழைய நிர்வாகிகளுக்கான மரியாதை கிடைக்கவில்லை." - சிவபாலன்

Published:Updated:

"அண்ணாமலை வந்த பிறகு, பழைய நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை..!" - திமுக-வில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி

``அண்ணாமலை மாநில நிர்வாகியான பிறகு பழைய நிர்வாகிகளுக்கான மரியாதை கிடைக்கவில்லை." - சிவபாலன்

அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் சிவபாலன்

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். பா.ஜ.க மாநில ஓ.பி.சி அணிச் செயலாளராக இருந்த சிவபாலன், நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான சிவபாலன், தி.மு.க-வில் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க-வில் இணைந்த சிவபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நான் கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.க-வில் இளைஞரணி மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறேன். தற்போது இருக்கும் மாநிலத் தலைமை பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை. தமிழக அரசு தற்போது மாநிலத்தில் நல்லாட்சி புரிந்துவருகிறது. அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்டத்துக்கான வளர்ச்சியில் முக்கியத்துவமளித்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். அதனடிப்படையில் நான் அவர் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்.

அமைச்சர் மனோ தங்கராஜிடன் சிவபாலன்
அமைச்சர் மனோ தங்கராஜிடன் சிவபாலன்

பா.ஜ.க-வில் முன்பு வேலை செய்தவர்களுக்கான மரியாதை சரியாகக் கிடைக்கவில்லை. பல விஷயங்கள் இருக்கின்றன... அதற்குள் போகவிரும்பவில்லை. நான் உணர்வுபூர்வமாக வந்திருக்கிறேன். அண்ணாமலை மாநில நிர்வாகியான பிறகு பழைய நிர்வாகிகளுக்கான மரியாதை கிடைக்கவில்லை. அவர் வந்தபிறகு என்ன வேலை செய்தார்கள் என்பதைத்தான் பார்க்கிறார். கடந்த 20 வருடங்களாக என்ன வேலை செய்தோம் என்பதை அவர் பார்க்கவில்லை. ஒரு சதவிகிதம் பேர் வேலை செய்யவில்லை என்பதற்காக, 99 சதவிகிதம் பேரைத் தண்டிக்கக் கூடாது" என்றார்.

இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க இந்துக்களை வாக்குவங்கிகளாகப் பயன்படுத்திவருகிறது. தி.மு.க சமூகநீதி, மதச்சார்பின்மை என எல்லோருக்குமான கொள்கையை வகுத்து, மக்களைத் தெளிவான பாதையில் அழைத்துச் செல்கிறது. இதனால் பா.ஜ.க-விலிருந்து பலர் தி.மு.க-வில் இணைந்து வருகிறார்கள்.‌ மத்தியில் ஆட்சிபுரியும் பா.ஜ.க அரசு மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்திவருகிறது. நம்மிடமிருந்து ஜி.எஸ்.டி-யாக ரூ.9 வசூலித்துவிட்டு, அதில் ரூ.1.50 மட்டுமே திருப்பியளிக்கிறது. ஜி.எஸ்.டி வருவாயில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்த பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலச் செயலாளர் சிவபாலன்
அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்த பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலச் செயலாளர் சிவபாலன்

ஆனால் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிவிட்டு, தமிழகத்துக்குக் குறைவான நிதியை ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிறார்கள்.

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. அவர்கள் வாங்கும் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. அதே சமயம் சமான்ய மக்களின் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வசூலிப்பதில் கடுமை காட்டுகிறது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள்மீது வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க அரசியல் செய்கிறது.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்கள் பிரச்னைக்காகக் குரல் கொடுப்பதை விட்டுவிட்டு, மக்களிடையே பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து பதிவிட்ட கருத்துகள் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். ஓர் அரசியல் கட்சியின் கருத்து உரிமையில் தலையிட முடியாது. ஆனால் பா.ஜ.க சாதி, மதம், மாநிலரீதியாகப் பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடுவதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றார்.