Published:Updated:

கன்னியாகுமரி இடைத்தேர்தல்: `வெற்றிபெறுபவர் மத்திய அமைச்சராவார்!’ - பா.ஜ.க பிரசாரம் கைகொடுக்குமா?

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலில் வென்றே தீருவது என்ற நோக்கத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு பணிபுரிகிறது பா.ஜ.க. பொன்.ராதாகிருஷ்ணனும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியையே சுற்றிச் சுற்றி வருகிறார்.

இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக கடந்த முறை வெற்றி பெற்றவர் வசந்தகுமார். கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார். அதன் பின்னர் கன்னியாகுமரி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் இடைத்தேர்தல் நடப்பதை விரும்பவில்லை. ஒருவேளை தங்கள் கூட்டணி வேட்பாளர் தோல்வியடைந்தால், அது சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், இரு அணிகளும் அமைதியாக இருந்தன. அவர்கள் எதிர்பார்த்தபடியே சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்தே கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது.

விஜய் வசந்த்
விஜய் வசந்த்

நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸும் போட்டியிட முன்னணியில் இருக்கின்றன. அதிலும் பா.ஜ.க சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே களமிறங்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்ற தகவலும் பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட் வழங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் பா.ஜ.க தலைவர்கள் அனைவருமே, கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் வெற்றிபெறுபவர் மத்திய அமைச்சர் ஆவார் என்று பேசிவருகின்றனர். இதனால் பா.ஜ.க தரப்பு தேர்தலில் வென்றே தீருவது என்ற நோக்கத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு பணிபுரிகிறது. பொன்.ராதாகிருஷ்ணனும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியையே சுற்றிச் சுற்றிவருகிறார்.

கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன்
கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன்

கோயில் கும்பாபிஷேகம், திருமணம், பிறந்தநாள் விழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆஜராகிவிடுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். தொண்டர்களுடன் பொறுமையாக உரையாடுகிறார். செல்ஃபி எடுக்க ஆசைப்படும் அத்தனை பேருக்கும் பொறுமையாக போஸ் கொடுக்கிறார். தொடர்ச்சியாக ஊழியர்கள் கூட்டம், பூத் கமிட்டி கூட்டம் என பம்பரமாக சுழன்று வேலை செய்கிறார் பொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேசமயம், விஜய் வசந்த் தன்னை வேட்பாளராக அறிவிக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களிடம் பேசி தனக்கு சீட் கிடைப்பதற்கான அனைத்து வேலைகளையும் சைலன்ட்டாகச் செய்கிறார். தென் மாவட்டங்களில் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்துக்கு ஆகும் செலவினங்களைத் தானே முன்னின்று செய்தும்வருகிறார். இதனால் ராகுல் வருகைக்கான விளம்பரங்களில் விஜய் வசந்த் பெயர் பெரிதாக மின்னுகிறது.

காங்கிரஸ் விளம்பரங்களில் மின்னும் விஜய் வசந்த் பெயர்
காங்கிரஸ் விளம்பரங்களில் மின்னும் விஜய் வசந்த் பெயர்

கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க - காங்கிரஸ் மோதப்போகின்றன என்பதும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் விஜய் வசந்துக்கும் கடும் போட்டி இருக்கும் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன. மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கடந்தமுறை கொண்டுவந்த மேம்பாலங்கள், சுற்றுச்சாலைகள் என வளர்ச்சிப் பணிகள் அவருக்கு பலம் சேர்க்கும். இப்போது மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருப்பதால், இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் மாவட்டத்துக்கு மத்திய அமைச்சர் கிடைப்பார் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்குகளைப் பெற முடியும் என பா.ஜ.க நம்புகிறது. வசந்தகுமாரின் புகழும், காங்கிரஸ், தி.மு.க கூட்டணியும் செல்வாக்கோடு இருப்பது விஜய் வசந்துக்கு பலம் சேர்க்கும். மேலும் பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற தோற்றம் இருப்பதால் கிறிஸ்தவர்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறது காங்கிரஸ்.

எனவே, கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் களத்தில் இருமுனைப் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

``அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட நாங்கள் சீட் கேட்கவில்லை!" - பொன். ராதாகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைக்கு