Published:Updated:

`கூட்டணி தொடரும்; முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தேசியத் தலைமை அறிவிக்கும்!’ - எல்.முருகன் அதிரடி

எல்.முருகன்
எல்.முருகன்

``அ.தி.மு.க., பி.ஜே.பி கூட்டணி தொடரும். யார் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பி.ஜே.பி-யின் தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும்” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தா.பழூரில் பி.ஜே.பி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டதுடன், வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கிக் கூறிப் பேசினார்.

எல்.முருகன் - கலந்துரையாடல் நிகழ்ச்சி
எல்.முருகன் - கலந்துரையாடல் நிகழ்ச்சி

பின்னர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வணிகர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பம், இரட்டிப்பு மகசூல் போன்ற நன்மைகள் இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்குக் கிடைக்கும். இதனால் பி.ஜே.பி-க்கு விவசாயிகள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்த நல்ல பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தி.மு.க போராட்டங்களை முன்னெடுத்து நடத்திவருகிறது. எல்லாமே அரசியலுக்காகச் செய்யப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கது.

`ரஜினி கட்சி தொடங்கட்டும்... தலைமை அட்வைஸ்படி கருத்து சொல்வோம்!’ - பா.ஜ.க எல்.முருகன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணி தொடரும். ஆனால், யார் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பி.ஜே.பி-யின் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக நானும் அவரைச் சந்தித்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ஆனால், யார் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கூடிய விரைவில் பி.ஜே.பி-யின் தேசியத் தலைமை முடிவு செய்து விரைவில் அறிவிக்கும்.

எல்.முருகன் - கலந்துரையாடல் நிகழ்ச்சி
எல்.முருகன் - கலந்துரையாடல் நிகழ்ச்சி

எனது தலைமையிலான வேல் யாத்திரையைத் தமிழக அரசு தடுத்தது ஏன் என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால், வேல் யாத்திரை மூலம் எங்களுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. வேல் யாத்திரை மூலம் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நாங்கள் இதுவரை 20 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டோம். விவசாயிகளைச் சந்தித்து 1,000 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். மத்திய அரசு நல்லது செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பதே கமல்ஹாசனின் எண்ணம்” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு