Published:Updated:

“பா.ஜ.க-வில் ரௌடிகள் சேர்ந்ததைக் கடுமையாக எதிர்க்கிறேன்!”

- அண்ணாமலை அதிரடி

பிரீமியம் ஸ்டோரி
‘ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர்’ என்று பரபரக்கப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்தது, அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது... இவையெல்லாம் ‘அண்ணாமலை’ திரைப்படத்தின் காட்சிகளையே மிஞ்சுபவை. கரூர் மாவட்டம், தொப்பம்பட்டியிலுள்ள வீட்டில் தமிழகத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிப்பதற்கான ‘தீவிர’ டிஸ்கஷனில் இருந்த அண்ணாமலையைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘நீங்கள் ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்தது, ஆடு வளர்ப்பில் இறங்கியது, பா.ஜ.க-வில் இணைந்தது... என எல்லாமே சங் பரிவார் அமைப்பு போட்டுக்கொடுத்த திட்டங்கள்தான் என்கிறார்களே?”

‘‘இது தி.மு.க கிளப்பிவிட்ட புரளி. நான் விருப்பப்பட்டே அரசியலுக்கு வந்தேன். கைலாயம் மற்றும் மானசரோவர் ஆன்மிகப் பயணங்கள் பா.ஜ.க-வை நோக்கி என்னை ஈர்த்தன. அதனாலேயே அந்தக் கட்சியில் இணைந்தேன்.’’

‘‘ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், பா.ஜ.க-வுக்குள் நுழைந்திருக்கிறீர்கள். ரஜினி உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?’’

‘‘ஆமாம், வாழ்த்து தெரிவித்தார். ஆனாலும், ரஜினி எனது ஆன்மிக குரு மட்டுமே; அரசியல் குரு அல்ல. அதேபோல ‘அரசியலுக்கு வா’ என்றும் அவர் என்னிடம் சொன்னதில்லை. ஆன்மிகம் பற்றிப் பேசியிருக்கிறார். அவரது அரசியல் பார்வையே வேறு. நிச்சயம் அவர் ஒரு மாற்று அரசியலைத் தருவார். அதேசமயம் அவர் சொன்ன முதல்வர் வேட்பாளர் நிச்சயம் நானில்லை.’’

‘‘தமிழகத்தில் இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி பா.ஜ.க-வை வளர்த்துவிட முடியும் என்று எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?’’

‘‘எதிர்ப்புகள் இருக்கின்றன என்றாலே பா.ஜ.க-வை மக்கள் சீரியஸாகப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். ஏற்கெனவே பவரில் இருந்த வர்கள், பவருக்கு வர நினைப்பவர்கள்தான் பா.ஜ.க-வைப் பார்த்து பயப்படுகிறார்கள். அந்தவகையில் எங்களைப் பார்த்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பயப்படுகின்றன.’’

அண்ணாமலை
அண்ணாமலை

‘‘சமீபத்தில், ‘கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்துடனும் தமிழகத்தை ஒப்பிட முடியாது’ என்று சொல்லியிருந்தீர்கள். அப்படியென்றால், அந்த வளர்ச்சியைக் கொண்டு வந்தது இங்கு ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சிகள்தானே... அந்த இயக்கங்களைத் தாண்டி, பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் என்ன தேவை இருக்கிறது?’’

‘‘திராவிடக் கட்சிகளால் தமிழகத்துக்கு எந்த வளர்ச்சியும் வந்துவிடவில்லை. சுதந்தரத்துக்கு முன்னர் ஜஸ்டிஸ் பார்ட்டி ஆட்சியில் இருந்த போதே தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுவிட்டது. தொடர்ந்து ராஜாஜி, ஓமந்தூரார், காமராஜர் ஆட்சிகளில் அடுத்தடுத்து முன்னேற்றம் கண்டது. ஏற்கெனவே முன்னேற்றப்பட்ட தமிழகத்தில்தான், திராவிடக் கட்சிகள் 53 வருடங்களாக மாறி மாறி வண்டி ஓட்டுகிறார்கள். நாங்கள் அவர்களைப்போல் 20 சதவிகிதம் கமிஷன் வாங்க மாட்டோம். சுடுகாட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று ஊழல்கள் செய்ய மாட்டோம். எங்களுக்குப் பிறகு மகன், பேரன் என்று கட்சியில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க மாட்டோம். நவீன மாநிலத்தைக் கட்டமைக்க, தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியமைக்க வேண்டியது அவசியம்!’’

‘‘ஆனால், கட்சியில் ரௌடிகளையும், சினிமா நடிகைகளையும் அல்லவா சேர்த்துக்கொண்டே போகிறீர்கள்?”

‘‘தெரியாமல் இது நடந்துவிட்டது. ‘இனி கவனமாக இருப்போம்’ என்று மாநிலத் தலைவர் முருகன் சொல்லியிருக்கிறார். ரெளடிகள் சிலர் எங்கள் கட்சியில் சேர்ந்ததை நானும் கடுமையாக எதிர்க்கிறேன்.’’

‘‘பெரியார் கொள்கைகளைக் கண்டு பா.ஜ.க அஞ்சுகிறதா?”

‘‘பெரியாருக்கு பயப்படுவது பா.ஜ.க அல்ல... தி.மு.க-தான். மேலும், பெரியாரின் கருத்துகளுக்கு எதிராக இருக்கும் ஒரே கட்சியும் தி.மு.க-தான். ‘தேர்தலில் போட்டியிடக் கூடாது’ என்று பெரியார் சொன்னார். ஆனால், அண்ணா கட்சி ஆரம்பித்து, தேர்தலைச் சந்தித்தார். ‘குடும்ப அரசியல் செய்யக் கூடாது’ என்றார் பெரியார். இப்போது அந்தக் கட்சியில் குடும்ப அரசியல் மட்டுமே நடக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியை ஒரு தொழிலாகவே நடத்திக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் குடும்பம்.’’

‘‘சமூக வலைதளங்களில், ‘இந்தி தெரியாது போடா’ என்று சொன்னால், பதிலுக்கு ‘தமிழ் தெரியாது போடா’ என்று குழாயடிச் சண்டை போடுவதால் மட்டுமே தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?”

‘‘அதை நான் கண்டிக்கிறேன். சமூக வலைதளங்களில் தேவையில்லாத விஷயம் டிரெண்டாக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. சமூக வலைதளங்களை இப்படி சந்தைக்கடை யாக்குவது தி.மு.க-தான்!’’

‘‘தி.மு.க-வை விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் அ.தி.மு.க-வை விமர்சிப்பதில்லையே... ‘பா.ஜ.க-வின் இந்தப் பாசத்துக்குக் காரணம், அதன் கைப்பாவையாக அ.தி.மு.க இருப்பதுதான்’ என்று கூறப்படுவது உண்மைதானா?’’

‘‘நிச்சயம் இல்லை. நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், கிசான் முறைகேடு உள்ளிட்ட தவறுகளைக் கண்டிக்கவே செய்கிறோம். மற்றபடி, அ.தி.மு.க அரசை டெல்லி ஆட்டுவிக்கிறது என்று சொல்வதெல்லாம், சில கட்சிகள் கிளப்பும் வதந்திகள். எடப்பாடி பழனிசாமி, கட்சியின் கொள்கை பிறழாமல், தன்னிச்சையாக, திறமையாக ஆட்சி செய்கிறார்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு