Election bannerElection banner
Published:Updated:

பாஜக-வின் தேர்தல் அறிக்கை ஓர் ஏமாற்று வேலையா? - விமர்சனமும் விளக்கமும்

தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிதின் கட்கரி
தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிதின் கட்கரி

`தொலைநோக்கு பத்திரம் சட்டமன்றத் தேர்தல் 2021' என்ற பெயரில் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கை மீதான விமர்சனங்களையும், அதற்கு பா.ஜ.க-வின் விளக்கங்கலையும் இங்கே பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோல மீனவர்களுக்கும் உதவித்தொகை ரூ.6,000, பஞ்சமி நிலங்கள் மீட்பு, பூரண மதுவிலக்கு, இளம்பெண்களுக்கு இலவசமாக இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், இல்லம் தேடி குடியுரிமைப் பொருள்கள் வழங்க நடவடிக்கை, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக மாவட்டம்தோறும் அரசு பல்நோக்கு மருத்துவமனைகள், சென்னையை மூன்று மாநகராட்சிகளாகப் பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மிகத் தீவிரமாகத் தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கின்றனர் கமலாலயத்தினர்.

 எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க-வினர்
எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க-வினர்

``இரு பெரும் திராவிடக் கட்சிகளின் அறிக்கைகளில் இல்லாத, எங்களால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய, தமிழகத்தின் வளர்ச்சிக்கான அறிக்கை எங்களுடையது” என்று கமலாலய வட்டாரம் பெருமை பேசிக்கொண்டிருக்கும் பா.ஜ.க தேர்தல் அறிக்கை குறித்து பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

பாஜக தேர்தல் அறிக்கை:  பூரண மதுவிலக்கு, பஞ்சமி நிலம் மீட்பு, கோயில்களுக்குத் தனி வாரியம்

``விவசாயிகளுக்கான தனி பட்ஜெட், மீனவர்களுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் உதவித்தொகை, வேளாண் கல்விக்கு என்று தனியாக ஒரு துறை எனப் பல நல்ல அம்சங்கள் இருந்தாலும், `மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ஒரு மாநிலத்தின் தேர்தலை ஒட்டித்தான் இத்தனையையும் செய்ய வேண்டுமா?’ என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்கிறேன். வேளாண்மைக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கி தனி பட்ஜெட் போடப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் பா.ஜ.க 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. ஆனால், இதுவரை எந்த மாநிலத்திலும் விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர்கள் வெளியிட்டிருக்கிறார்களோ என்னவோ? ஒரு குவின்டால் நெல்லுக்கு ஆதார விலையாக 2,500 ரூபாய் நிர்ணயிக்கப்படும் என்கிறார்கள். தஞ்சை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

ஒருபுறம் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து தனியார் துறைக்கு விவசாயத்தைத் தாரைவார்த்துவிட்டு தமிழகத்துக்கு மட்டும் இப்படித் தனியாக ஒரு வாக்குறுதியைக் கொடுப்பது எந்த வகையில் சரி? வேளாண் மற்றும் விவசாயிகள் விஷயத்தில் இவர்கள் போக்கைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

மீனவர்களுக்கான உதவித்தொகையைத் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் தருவோம் என்று இல்லாமல், மத்திய ஆளும் அரசு என்ற வகையில் தற்போதுகூட கொடுக்கலாம். கொரோனா காலத்தில்கூட அப்படியான உதவியை மத்திய அரசு மீனவர்களுக்குக் கொடுத்ததாகத் தெரியவில்லை. உதவித்தொகை இல்லாமல் இருப்பதுதான் உண்மையில் மீனவர்களின் தலையாய பிரச்னையா? தமிழக எல்லையில் மீனே இல்லை. அதுதானே அவர்களின் பிரச்னை. அதனால்தானே இலங்கை எல்லைக்குள் மீனவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தானே சுடப்படுகிறார்கள், கைதுசெய்யப்படுகிறார்கள், படகுகளை இலங்கை ராணுவத்திடம் பறிகொடுக்கிறார்கள். இப்படி தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் பல இருக்கின்றன. இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பதில் உதவித்தொகை தருகிறோம், எல்லையை உணர்த்தும்விதமாக ஜி.பி.எஸ் கருவி பொருத்துகிறோம் என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய போங்கு?

குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு
ஜெரோம்

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப் பரிந்துரைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை என்ற பெயரை மட்டும் சேர்த்தாலே இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையைக் கொடுத்துவிடலாம். அதைவிட்டுவிட்டு அறிக்கையாக வெளியிட வேண்டுமா என்ன?

மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்கிறார்கள். தமிழக மக்களெல்லாம் பணம் கொடுத்தால் மாறிவிடுவார்கள் அல்லது அறியாமையால் மதம் மாறுகிறார்கள் என்று விளக்கம் வேறு. இந்தச் சொற்களெல்லாம் தமிழர்களைப் பற்றி எவ்வளவு மோசமாக பா.ஜ.க-வினர் நினைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணங்கள். உண்மையில், மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவதே இஸ்லாமியர்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதப்பிளவை ஏற்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க தங்களை வளர்த்துக்கொள்வதற்காகத்தான். அதேபோல கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். கோயிலை இந்துக்களிடம் ஒப்படைப்பது என்றால் எந்த இந்துக்களிடம்? நானும் ஓர் இந்துதான் என்னிடம் கொடுப்பார்களா? கோயில் என்பது பொதுச்சொத்து. அதை அரசுதான் பார்க்க வேண்டும். ஆனால், இவர்கள் அதை ஒரு வருமானத்துக்கான இடமாகப் பார்க்கிறார்கள். அதனால்தான் அதை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதை இந்துக்களின் மத உணர்வைத் தூண்டும்விதமாகத்தான் பார்க்க முடிகிறது.

Vikatan

சென்னையை மூன்று மாநகராட்சியாகப் பிரிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். வட, மத்திய, தென் சென்னை மக்களின் தேவை வேறு வேறாக இருக்கிறது எனும்போது அதை மூன்றாகப் பிரிப்பது தேவையானதுதான். ஆனால், டெல்லியிலிருக்கும் மூன்று மாநகராட்சிகளும் பா.ஜ.க கையில்தான் இருக்கின்றன. ஆனால், என்ன செய்திருக்கிறார்கள் என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான் எஞ்சி நிற்கிறது. அதுமட்டுமல்ல, மதுரை எய்ம்ஸ் வருமா வராதா என்றுகூட அவர்கள் அறிக்கையில் தகவல் எதுவும் இல்லை. இ.எஸ்.ஐ மருத்துவமனை வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட திருப்பூர் மக்களின் ஐந்து ஆண்டு கோரிக்கை இது.

பூரண மதுவிலக்கு என்கிறார்கள். நல்லதுதான். ஆனால், எந்த மாடல் மதுவிலக்கு என்பதில் தெளிவில்லை. குஜராத் மாடல் மதுவிலக்கு என்றால் உண்மையில் அது ஒரு தோல்வியடைந்த மாடல். கள்ளு உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்போகிறோம் என்கிறார்கள். இங்கே கள்ளுக்குத் தடைவிதித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றால் அதற்குப் பெயர்தான் பூரண மதுவிலக்கா? மெட்ராஸ் பிரசிடென்சியில் இருக்கும் 12 லட்சம் பஞ்சமி நிலம் மீட்போம் எனக் கூறியிருக்கிறார்கள். பா.ஜ.க சொல்லும் ஒரே பஞ்சமி நிலம் முரசொலி இருக்கும் இடம் மட்டும்தான். அது பஞ்சமி நிலம் என்றால் அதைச் சார்ந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருவிதாங்கூர் அரண்மனைகூட பஞ்சமி நிலம் என்றுதான் சொல்கிறார்கள். அதைப் பற்றி அவர்கள் ஏன் பேச மறுக்கிறார்கள்?

பா.ஜ.க தேர்தல் அறிக்கை: செய்த ஐந்தும், செய்யப்போகும் ஐந்தும் செய்யவேண்டிய பத்தும்! #BJPManifesto2019

மெட்ராஸ் பிரசிடென்சி என்பது ஒடிசா, கேரளா, கோவை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய பகுதி. இதையெல்லாம் சேர்த்துத்தான் 12 லட்சம் பஞ்சமி நிலங்கள். ஆனால், இந்தப் புரிதல்கூட ஒரு தேசியக் கட்சிக்கு இல்லையே என்ற வருத்தம்தான் எனக்கு இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவோம் என்கிறார்கள் பா.ஜ.க-வில். ஆனால், அ.தி.மு.க இருமொழிக் கொள்கைதான் என்கிறார்கள். நீட் தேர்வை நடத்த மாட்டோம் அல்லது நடத்தக் கூடாது என வலியுறுத்துவோம் என்கிறார்கள். ஆனால்,, தமிழகத்திலிருக்கும் எதிர்ப்பைச் சரிசெய்து நீட் தேர்வை சிறப்பாக நடத்திக் காட்டுவோம் என்கிறார்கள் பா.ஜ.க-வினர். ஒரே கூட்டணியில் இருக்கும் இருவேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இப்படிப் பல கொள்கைகள் முன்னுக்குப் பின் முரணாக இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி என்பது வெளிப்படையாகத் தெரிகிறது இல்லையா?

அ.தி.மு.க - பா.ஜ.க பேச்சுவார்த்தை
அ.தி.மு.க - பா.ஜ.க பேச்சுவார்த்தை

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதற்கும், நடைமுறை சாத்தியத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. துளி அளவுகூடச் சாத்தியமில்லாத பல விஷயங்களை ஆராயாமல் எப்படி இவர்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது” என விமர்சனங்களை அடுக்குகிறார்.

பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை மீதான விமர்சனங்கள் குறித்து தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவிலிருந்த தமிழக பா.ஜ.க-வின் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதியிடம் பேசினோம். ``விமர்சனம் வைக்கத்தான் எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மதமாற்ற தடைச் சட்டம் போன்றவை மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆனால், அவற்றுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் முழுமையாக அவற்றை அமல்படுத்த முடியும். அதைத்தான் நாங்கள் சொல்லியிருக்கிறோம். பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை மதக் கலவரத்தை தூண்டுகிறது எனப் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில், மதச்சார்பற்ற ஒரு கட்சி பா.ஜ.க-தான். இதுவரை வாக்குக்காக எந்த ஒரு மதத்தினரையும் நாங்கள் சென்று தாஜா செய்யவில்லை. கிறிஸ்தவர்களிடம் சர்ச் இருக்கிறது, முஸ்லிம்களிடம் மசூதி இருக்கிறது. அதேபோல இந்துக்களிடம் கோயில்கள் இருக்க வேண்டும் என்று சொன்னால் நாங்கள் மதக் கலவரம் செய்கிறோம் என்று சொல்வதா... இது அநியாயமாக இல்லையா? கடந்த ஏழு ஆண்டுகளாக மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஓரிடத்திலாவது மதக் கலவரம் ஏற்பட்டிருக்கிறதா?

பேராசிரியர் கனகசபாபதி, தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்
பேராசிரியர் கனகசபாபதி, தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் கோவாவில் பா.ஜ.க-தான் ஆட்சியில் இருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகாரில் நிறைய முஸ்லிம் இருக்கும் இடங்களில் பா.ஜ.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அதிகமாக இருக்கிறார்கள். அனைவருக்குமான, விஷயங்களையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம். உண்மையில் எங்கள் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்” என்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு