Published:Updated:

என் வீடியோ இருந்தால், சன் டி.வி-யில் ஒளிபரப்புங்கள்!

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

- அதிரவைக்கிறார் அண்ணாமலை

என் வீடியோ இருந்தால், சன் டி.வி-யில் ஒளிபரப்புங்கள்!

- அதிரவைக்கிறார் அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

தமிழக மின்வாரிய ஒப்பந்தங்களில் முறைகேடு’ என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வாசிப்பதும், ‘ஆதாரத்தைக் காட்டாவிட்டால் 24 மணி நேரத்தில் வழக்கு தொடுப்பேன்’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு விதிப்பதும் தமிழக அரசியலில் தொடர்கதையாகிவருகிறது. இந்தக் கண்ணாமூச்சி ஆட்டங்களுக்கு இடையே, தமிழக பட்ஜெட் குறித்தான விவாதங்களும் சூடு கிளப்பிவரும் நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் பேசினோம்...

“ ‘மத்திய அரசின் திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்திருக்கிறார்கள்’ என்று தமிழக பட்ஜெட் குறித்து விமர்சித்த நீங்களே, ‘இது பகல் கனவு பட்ஜெட்’ என்றும் சொல்லி மத்திய அரசையே விமர்சிக்கிறீர்களே..?’’

“அப்படியில்லை... தமிழக பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடனேயே, ‘அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் இந்த பட்ஜெட்’ என்று முதல்வர் குறிப்பிட்டார். ‘25 ஆண்டுகள்’ என்ற இதே வார்த்தையை ஏற்கெனவே மத்திய பட்ஜெட் தாக்கலின்போது மத்திய அரசும் அறிவித்திருந்தது. அதாவது, ‘கட்டமைப்பு, எதிர்காலத்தில் என்னென்ன நிகழும், சொத்து பணமாக்கல் (Asset Monetization) மூலமாகக் கிடைக்கும் ஆறு லட்சம் கோடி ரூபாயை எப்படியெல்லாம் முதலீடு செய்யப்போகிறோம்’ என்பது உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்களோடு சமர்ப்பிக்கப்பட்டது மத்திய அரசின் பட்ஜெட்.

2021-2022 நிதியாண்டில், ஆறு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி இந்தியாவிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. அடுத்த ஆண்டிலிருந்து ‘ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையும் வராது’ என்ற சூழலில், இந்த ஆறு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையோடு, நிதி நிர்வாகத்தை எப்படிச் செயல்படுத்தப் போகிறது தமிழக அரசு? இது குறித்தெல்லாம் தொலைநோக்குப் பார்வையோடு பட்ஜெட்டில் எதையுமே குறிப்பிடாமல், ‘இது 25 ஆண்டுகளுக்கான அடித்தளம்’ என்று மட்டும் சொல்வதைத்தான் நாங்கள் விமர்சிக்கிறோம்.’’

“தமிழக மின்வாரியத்தில் முறைகேடு என்ற உங்கள் குற்றச்சாட்டுக்கு, ‘பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் கடந்த 2019-ல் அ.தி.மு.க ஆட்சியில்தான் ஒப்பந்தம் போடப்பட்டது’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் கொடுத்திருக்கிறாரே?’’

“என்னைப் பொறுத்தவரையில் அப்போதே பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு அ.தி.மு.க அரசு ஒப்பந்தப் பணிகளைக் கொடுத்திருக்கக் கூடாதுதான். ஏனெனில், ‘உத்தரவாதத் தொகையைக்கூட செலுத்த முடியாத அளவில் இருந்த பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு எந்த விதியின் கீழ் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டன’ என்ற கேள்வி எழுந்ததால்தான் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதமே ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க அரசும்கூட அதே பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுப்பதற்கான வேலைகளை மறைமுகமாகச் செய்ய ஆரம்பித்தபோதுதான், இது குறித்து கடந்த அக்டோபர் மாதமே நான் எச்சரித்திருந்தேன். ஆனால், அதன் பிறகும்கூட, மின்வாரிய விதிமுறைகளை மீறி 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின்வாரிய ஒப்பந்தப் பணிகளை தி.மு.க அரசு வழங்கியிருக்கிறது. இதன் பின்னணியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. இது குறித்துத்தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.’’

என் வீடியோ இருந்தால், சன் டி.வி-யில் ஒளிபரப்புங்கள்!

“மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ‘20,000 புத்தகங்கள் படித்துவிட்டேன்’ என நீங்கள் பேசியிருப்பதை மீம்ஸ்களில் தெறிக்கவிடுகிறார்களே..?’’

“இன்றைய இன்டர்நெட் யுகத்தில், புத்தகங்களின் சுருக்கம் அல்லது சாராம்சம் குறித்த தகவல்கள் இணையத்திலேயே கொட்டிக்கிடக்கின்றன. எனவே, முந்தைய காலம்போல், எல்லாப் புத்தகங்களையும் அட்டை டு அட்டை வரி வரியாக, முழுமையாகப் படித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. அதேசமயம் மகாபாரதம் போன்ற புத்தகங்களை நூறு முறை அல்லது ஆயிரம் முறை முழுமையாகப் படித்தறிய வேண்டும். இன்றைக்கு ஒரு புத்தகத்தின் முழுக் கருத்தையும், ஒன்று அல்லது இரண்டு பக்கங்களிலேயே மிக ஆழமாக அதன் சாராம்சத்தை மட்டும் தொகுத்துத் தந்துவிடுகிற ஆப்களும் நிறைய உள்ளன. அந்தவகையில், ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து அதன் மூலக் கருத்துகளை நான் உள்வாங்கிக்கொண்டிருக்கிறேன். எனவே, ‘20,000 புத்தகங்கள் படித்திருக்கிறேன்’ என நான் குறிப்பிட்டிருப்பதே குறைவான எண்ணிக்கைதான்!’’

“ஆனால், ‘13,700 + சொச்ச நாள்களில் 20,000 புத்தகங்கள் வாசித்திருக்கும் அதிமேதாவி - அரைவேக்காடு’ என்றெல்லாம் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருக்கிறாரே?’’

“புத்தகங்கள் எதையுமே படிக்காததால்தான், இது போன்று ஃப்ராடு அமைச்சர்களாக இருக்கிறார்கள். நல்ல புத்தகங்களைப் படித்திருந்தால், ஏன் இது போன்ற தவறுகளைச் செய்துகொண்டிருக்கப்போகிறார்கள்? எந்தவொரு கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல், பணம் கிடைக்கிற இடங்களையெல்லாம் தேடித் தேடி, ஐந்தாறு கட்சிகள் மாறிக்கொண்டிருக்கப் போகிறார்கள்? நான் சொல்கிற பத்து புத்தகங்களை மட்டும் செந்தில் பாலாஜி முழுமையாகப் படித்துவிட்டார் என்றால், நல்லதொரு மனிதராக மாறி அடுத்த கட்சிக்குத் தாவாதவராக இருப்பார்.’’

“கடந்த சில நாள்களாக, ‘பெங்களூரு நட்சத்திர விடுதிக்கு அண்ணாமலை சென்றுவந்த வீடியோ இருக்கிறது’ என்றெல்லாம் சிலர் பேசிவருகிறார்களே... என்னதான் அந்த ரகசியம்?’’

“சுய ஒழுக்கம், நேர்மை என்ற இந்த இரண்டு விஷயங்களில், இந்த அண்ணாமலையை யாருமே உரசிப்பார்க்க முடியாது! ஆனால், இந்த இரண்டு விஷயங்களுமே தமிழக அரசியலுக்கு ரொம்பவும் புதிதாக இருக்கின்றன. அதனால்தான் நிறைய பேர் கதறிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, என்னைப் பற்றிய வீடியோ - ஆடியோ எதுவாக இருந்தாலும் தயவுசெய்து அதை சன் பிக்சர்ஸில் ரிலீஸ் செய்யுங்கள். கோபாலபுரம் பிரைவேட் தியேட்டரில் பிரீவியூ ஷோவுக்கு என்னையும் அழைக்கட்டும்... கண்டிப்பாக வருகிறேன். இந்தப் படத்தை சன் டி.வி-யிலும் ஒளிபரப்ப வேண்டும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism